சிம்ரனைக் கொண்டாட வைத்த ‘பார்த்தேன் ரசித்தேன்’!

நாம் பெரிதும் கவனத்தைச் செலுத்தாத திரை நட்சத்திரங்களின் படங்களைக் காணத் திடீரென்று ஒரு சந்தர்ப்பம் அமையும்.

எந்த எதிர்பார்ப்பையும் மனதில் ஏற்றிக்கொள்ளாமல் தியேட்டருக்குள் சென்று அமர்ந்தால், திரையில் ஒரு ஆச்சர்யம் காத்திருக்கும்.

காட்சிகள் அடுத்தடுத்து வர வர, அந்த ஆச்சர்யம் ‘ஜிவ்’வென்று மண்டைக்குள் பரவும். அப்போது ஏற்படுகிற ஆனந்தம் இருக்கிறதே, அது ‘ஆஹா.. அடடா..’ ரகம். மிகச்சில படங்களே அப்படியொரு ஆனந்தத்தை எனக்கு அளித்திருக்கின்றன.

அந்த வகையில், பதின்பருவத்தின் இறுதியில் பார்த்த, ரசித்த ‘பார்த்தேன் ரசித்தேன்’ படம் முக்கியத்துவம் பெறுகிறது.

‘பா.ர.’ கதை!

ஒரு சில திரைப்படங்கள் தான் நம் வாழ்வில் அனுபவிக்கிற சில விஷயங்களைத் தொட்டுச் செல்வதாக, பிரதிபலிப்பதாக அமையும்.

கல்லூரிக் காலத்தில் பேருந்து அல்லது ரயிலில் பயணிக்கிற வாய்ப்புகள் சிலருக்கு அமைந்திருக்கும்; ‘ஜெயம்’ போன்ற திரைப்படங்கள் ரயில் பயணங்களில் பூக்கிற நட்பை, காதலைச் சொல்லியிருக்கின்றன. போலவே, பேருந்து பயணங்களிலும் அவை பூத்திருக்கின்றன.

குறிப்பாக, பேருந்துகளில் திரையிசைப் பாடல்களை ஒலிக்கவிடுவது ஓட்டுநர்கள் அல்லது நடத்துனர்களுக்கு ஆசுவாசம் தருகிற ஒரு விஷயம்.

என்னதான் அவர்களது ரசனைக்கு ஏற்ப அப்பாடல்கள் இருந்தாலும், அவை அதில் பயணிக்கிறவர்களையும் திருப்திப்படுத்தும். அவற்றில் பெரும்பாலானவை காதலின் வெவ்வேறு கிளைகளைக் காட்டுவதாக அமைந்திருக்கும்.

இளம் பருவத்தில் இருக்கிற ஆண், பெண்களுக்கு அந்த பாடல் ஒலிக்கிற தருணங்களில் தங்கள் மனதுக்குப் பிடித்த இணையைக் காண்பது அலாதியான இன்பத்தைத் தரும்.

அந்தப் பயணங்களைக் கடந்து வந்த பலருக்கு இப்போதும் அது நெஞ்சத்தில் அடியாழத்தில் படிந்திருக்கும். அப்படிப்பட்டவர்களையும் ஈர்த்தது ‘பார்த்தேன் ரசித்தேன்’ கதை.

பேருந்தில் பார்த்த ஒரு இளம்பெண் மீது காதல் வயப்படும் ஒரு ஆண், அதனைத் தனது தோழியிடம் பகிர்கிறான். அந்தத் தோழியும் அந்த இளைஞனுக்கு அப்பெண்ணைக் கவர சில ‘ஐடியா’க்களை கொடுக்கிறார்.

ஒருகட்டத்தில் இருவரும் பரஸ்பரம் காதலை உணர, அப்போது அந்தத் தோழி அதனைக் குலைக்கும் முயற்சியில் இறங்குகிறார். அது ஏன் என்பதே அப்படத்தின் கதை முடிச்சாக இருந்தது.

இந்தக் கதையில் சங்கர் எனும் இளைஞனாக பிரசாந்தும் அவரது தோழி பானுவாக சிம்ரனும் காதலி சரிகா ஆக லைலாவும் நடித்திருந்தனர்.

சிம்ரனின் சகோதரர் ஆக ரகுவரன், லைலாவின் தந்தையாக ஜெய்கணேஷ், பிரசாந்தின் பெற்றோராக வினு சக்ரவர்த்தி மற்றும் ஜோதி நடித்திருந்தனர்.

இது போகப் பேருந்து ஓட்டுநர், நடத்துனராக தாமு மற்றும் வையாபுரி, பிக்பாக்கெட் ஆக சார்லி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். வில்லன் பாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் தோன்றியிருந்தார்.

மேற்சொன்ன நடிகர் நடிகையரின் பாத்திர வார்ப்பும் பின்னணியும் இக்கதையோடு அவை பிணைந்திருந்த விதமும் ‘பார்த்தேன் ரசித்தேன்’ படத்தை உயிர்ப்புமிக்கதாகத் திரையில் காட்டின.

சிம்ரனின் விஸ்வரூபம்..!

‘நேருக்கு நேர்’, ‘விஐபி’, ‘ஒன்ஸ்மோர்’ என ஒரேநேரத்தில் மூன்று படங்களில் நடித்து தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனாலும், சிம்ரனை ஒரு சிறந்த கமர்ஷியல் பட நடிகையாக முன்னிறுத்திய படங்கள் என்று ஒரு சிலவே உண்டு.

அவள் வருவாளா, வாலி என்று நீளும் அந்த வரிசையில் அவரைத் திரையில் விஸ்வரூபம் எடுக்கச் செய்த படமாகத் திகழ்கிறது ‘பார்த்தேன் ரசித்தேன்’.

’சிம்ரன் ஏன் இந்த கேரக்டர்ல நடிச்சிருக்காங்க’, ‘சிம்ரனுக்கு இந்தக் கதையில ஸ்கோப்பே இல்லையே’ என்று ரசிகர்கள் தியேட்டருக்குள் யோசித்துக் கொண்டிருக்கும்போதே, ’ஈவ் டீசிங்குக்கு ஆளான சரிகாவை பானு சமாதானப்படுத்துவதாக’ ஒரு காட்சி இந்தப் படத்தில் வரும்.

அந்தக் காட்சியின் இறுதியில் ‘ஏண்டி அடுத்தவ துப்பட்டாவுக்கு அலையுறீங்க’ என்றவாறே சிம்ரன் வசனம் பேசுகிறபோது, ‘ஓ இதுதான் இந்தப் படத்துல சர்ப்ரைஸா’ என்று ‘வடிவேலு’ பாணியில் ‘மைண்ட்வாய்ஸ்’ எழும்.

முதல்முறையாக இப்படம் பார்த்த பலருக்கு இந்த அனுபவம் இருக்கும். அதுவே இப்படத்தின் யுஎஸ்பி.

‘தின்னாதே’ பாடல் வருகிற இடம் தியேட்டருக்குள் தீப்பிடிக்கும் அளவுக்கு இருந்தது.

‘சிம்ரன் ஏன் இந்தப் படத்தில் இடம்பெற்றார்’ என்பதற்கு விளக்கம் தருகிற அந்தப் பாடலும் பின்பாதிக் காட்சிகளும் இப்போதும் நம்மைச் சுண்டியிழுக்கும்.

இதுபோக லைலாவும் பிரசாந்தும் பார்வையால் காதலைப் பகிர்கிற இடங்கள், அந்த காலத்தில் ‘சைட்’ அடிப்பதையே தினசரி வழக்கமாகக் கொண்டிருந்த ரோமியோக்களையும் ஜூலியட்களையும் ஒரே கோட்டில் இணைத்தன என்று சொல்லலாம்.

பாத்திமா பாபு ஏற்றிருந்த பிங்கி பாத்திரம், பேருந்துகளில் பூக்கிற ஆண், பெண் நட்புக்கான ஒரு சோறு பதமாக இருக்கும்.

ராகவா லாரன்ஸின் ‘தாஸ்’ பாத்திரம், ‘இவரா இப்படி’ என்பது போன்ற வில்லத்தனத்தைக் காட்டியிருக்கும்.

இப்படிப் பல விஷயங்கள் இந்தப் படத்தில் புதிதாக இருந்தன.

இது போகப் பரத்வாஜின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை, ஏ.வெங்கடேஷின் ஒளிப்பதிவு, சுரேஷ் அர்ஸின் படத்தொகுப்பு எனப் பல தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு இப்படத்தில் அழகு ததும்பச் செய்திருந்தது.

‘காதல் மன்னன்’, ‘அமர்க்களம்’ என்று அடுத்தடுத்து ஹிட்கள் தந்த இயக்குனர் சரணின் திரை வாழ்வில் இப்படியான படங்களுக்கும் இடம் உண்டு என உணர்த்தியது ‘பார்த்தேன் ரசித்தேன்’.

தொடக்கத்தில் பெரிதாக ‘டாக்’ இல்லாவிட்டாலும், மெல்ல ரசிகர்களை தியேட்டருக்குள் இழுத்துவந்து ‘ப்ளாக்பஸ்டர்’ ஆன படம் இது.

இந்தப் படம் வெளியாகி, இன்றோடு 25 ஆண்டுகள் ஆகின்றன. 

– உதயசங்கரன் பாடகலிங்கம்

Comments (0)
Add Comment