திரைத்தெறிப்பு : 109
திருமணம் நடக்க இருக்கின்ற பெண்களுக்கு தேவையான பண்புகளைச் சொல்லும் விதமாக தமிழ்த் திரைப்படங்களில் நிறைய பாடல்கள் வெளிவந்திருக்கின்றன.
பெண்ணின் தோழிகளே கிண்டலாகப் பாடும் பாடல்களும், அண்ணண் – தங்கைக்கு சொல்லும் விதமாக பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய, “புகுந்த வீட்டில் வாழப்போற பெண்ணே, தங்கச்சி கண்ணே” போன்ற பாடல்களும் இடம்பெற்று இருக்கின்றன.
1955 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘மிஸ்ஸியம்மா’ படத்தில் இடம்பெற்ற கீழே வரும் பாடலை பாடியவர் மென்மையான குரலுக்குச் சொந்தக்காரரான ஏ.எம். ராஜா.
வெளிவந்தபோது பாராட்டைப் பெற்ற இந்தப் பாடலை எழுதியவர் தஞ்சை இராமையா தாஸ். இசை – எஸ். ராஜேஸ்வர ராவ்.
“பழகத் தெரிய வேணும் – உலகில்
பார்த்து நடக்க வேணும் பெண்ணே
பழங்காலத்தின் நிலை மறந்து
வருங்காலத்தை நீ உணர்ந்து…”
இந்தப் பாடலில் இடம்பெற்றிருக்கின்ற வரிகளைக் கேட்கும்போது பழம் பஞ்சாங்கமாக தெரியலாம். ஆனால், இவை அந்தக் காலத்திய மதிப்பீடுகளுக்கு ஏற்ப எழுதப்பட்ட வரிகள் என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும்.
“பிடிவாதமும் எதிர்வாதமும்
பெண்களுக்கே கூடாது…
பேதமில்லா இதயத்தோடு
பெருமையோடு பொறுமையாக…”
‘மிஸ்ஸியம்மா’ திரைப்படத்தில் இந்தப் பாடலை ஜெமினி கணேசன் பாடும் போது சாவித்திரி செல்லமான கோபத்துடன் அமர்ந்திருக்க, பாடலுக்கு ஏற்றபடி நளினமாக நடனம் ஆடுவார் நடிகை யமுனா.
இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் அனைத்து பாடல்களுமே சிந்திக்க வைக்கும்.
“கடுகடுவென முகம் மாறுதல்
கர்நாடக வழக்கமன்றோ
கன்னியர்கள் ஆடவரைப்
புன்னகையால் வென்றிடவே”
இப்போது பார்த்தாலும் ஜாலியாக ரசிக்க வைக்கும் அளவுக்கு இருக்கும் இத்திரைப்படத்தில், ஏ.எம். ராஜாவின் குரலில் பல பாடல்கள் இடம்பெற்றிருப்பது தனிச் சிறப்பு.
_மணா