திரைப்படங்கள் பார்க்கையில் நாயகன், நாயகி, பிரதான பாத்திரங்களில் நடித்தவர்கள் தாண்டிப் பின்னணியில் நடமாடுவோர், முகம் காட்டுவோர், நடனமாடுபவர்கள், சண்டையிடுபவர்கள் என்று சிலர் நம் மனதைக் கவர்வதுண்டு.
‘ஆசை’, ‘நேருக்கு நேர்’ படங்களில் அஜித்குமார், சூர்யா பின்னே இருந்த நடனக்கலைஞர் ஜானி அப்படித்தான் கவனம் ஈர்த்தார்.
இன்றைக்கு முன்னணி டான்ஸ் மாஸ்டர்களாக இருக்கிற ஷோபி, தினேஷ், சாந்தி, ‘டீனா’ வசந்தி என்று பலர் அவ்வாறு நம் நினைவில் நின்றிருக்கின்றனர்.
இவர்கள் ‘அவுட் ஆஃப் போகஸ்’ஸில் வந்து போயிருந்தாலும், மிகச்சில ரசிகர்களுக்கு நட்சத்திரங்களாகத் தெரிவார்கள்.
இதை ஏன் இப்போது சொல்ல வேண்டியிருக்கிறது?
‘சச்சின்’ கடந்த வாரம் ‘ரீரிலீஸ்’ ஆனபோது, அதில் விஜய், ஜெனிலியா உடன் தோழியாக நடித்த ரஷ்மி முரளி சமூகவலைதளங்களில் ‘வைரல்’ ஆகிவிட்டார்.
அவர் நடித்த ஷாட்களைத் தொகுத்து உருவான ‘ரீல்’ இப்போது இணையத்தில் உலவிக் கொண்டிருக்கிறது.
‘இத்தனை வருஷம் கழிச்சு இப்படியொரு புகழை நான் எதிர்பார்க்கவே இல்ல’ என்று அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சொல்லியிருக்கிறார்.
அந்தப் படத்தில் நடித்தபோது, ரஷ்மி ஒரு கல்லூரி மாணவி. எதிர்பாராமல் அதில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
ஒருவேளை தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்திருந்தால், அவர் சிறந்த நடிகையாக மாறியிருக்கக் கூடும்.
அது போல, பலப்பல கனவுகளுடன் சிலர் ஒரு காட்சியில், சில ஷாட்களில் தமிழ் திரையுலகில் தமது முகங்களைப் பதித்துச் சென்றிருக்கின்றனர்.
அப்படங்களை ரசித்தவர்களில் சிலர், அவர்களில் சிலருக்குத் தனிப்பட்ட ரசிகர்களாக இருப்பார்கள் என்பதுவே நிதர்சனம்.
அவ்வாறு நடித்தவர்களில் சிலர் காலவோட்டத்தில் பெரிய நட்சத்திரங்களாக மாறியிருக்கின்றனர்.
த்ரிஷா, அனுயா தொடங்கி..!
‘ஜோடி’ படத்தில் சிம்ரன் உடன் வரும் தோழியர் கூட்டத்தில் த்ரிஷாவும் இருந்தார் என்பதை விகடன் நிறுவனத்தில் பகுதிநேரப் பத்திரிகையாளராகப் பணியாற்றியபோது ஒரு ‘ஐடியா’வாக கொடுத்தது நினைவிருக்கிறது.
காரணம், அதற்கு முன்பே மிஸ்.சென்னை ஆக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதைப் பத்திரிகைகள் வழியே அறிந்திருந்தேன்.
நடிகை அனுயா பங்கேற்ற நிகழ்ச்சியொன்றில், அவரைப் பற்றிய தகவல்கள் சிலவற்றைத் தொகுக்க நேரில் சந்தித்தேன்.
ஏவிஎம் ஸ்டூடியோவில் படமாக்கப்பட்ட அந்நிகழ்ச்சி அதன்பின் மலேசியத் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பானதாகத் தகவல்.
அப்போது, ‘நீங்க சம்மர் 2007 இந்திப் படத்துல ஒரு ஷாட்ல வந்துட்டு போனீங்க தானே’ என்றேன். அதைக் கேட்டதும், அவர் முறைத்துப் பார்த்தார்.
‘நான் இல்ல’ என்றார். ‘இல்ல, அது நீங்கதான்’ என்றதும் என்னை கூர்ந்து பார்த்தார்.
அதன்பிறகு நடந்த ஒரு விருது விழாவில் மேடையின் பின்னே ஓடியாடிப் பணியாற்றியபோது, எதிரே வந்தவர் ‘ஹாய்’ என்றார்.
பல நடிகைகள் மாடல்களாக, நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குபவர்களாக, பேக்ரவுண்ட் ஆர்ட்டிஸ்ட்களாக வந்துபோன அனுபவங்களைப் பின்னாட்களில் சொல்லியிருக்கின்றனர்.
நடிகர் மிர்ச்சி சிவா அவ்வாறு தான் ‘ஆளவந்தான்’ படத்தில் இடம்பெற்றதாகச் சொல்லியிருக்கிறார்.
‘குஷி’யில் நாயகன் விஜய்யின் நண்பர்களில் ஒருவராக ஷாம் தோன்றியிருப்பார். விஜய் சேதுபதி, விமல், விதார்த் என்று பல நாயகர்கள் சில காட்சிகளில் அப்படித் தோன்றியதுண்டு.
இந்திப் படங்களில் அறிமுகம் ஆவதற்கு முன்னே, தமிழில் ‘இது சத்தியம்’ என்ற படத்தில் ஹேமாமாலினி நடனமாடியிருக்கிறார்.
அப்பாஸ் நடித்த ‘இனி எல்லாம் சுகமே’ தொடக்கக் காட்சியில் அப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் மூத்த மகன் உதயா வந்து போயிருப்பார்.
அவரே ‘நான் தான்’ என்று சொன்னாலும் அடையாளம் காண முடியாதவாறு அவரது தோற்றம் அமைந்திருக்கும்.
இப்படிப் பல பிரபலங்கள் நம் பார்வையில் மின்னி மாயமாகி இருக்கின்றனர்.
அறியாத முகங்கள்!
சமீபத்தில் ஃபேஸ்புக்கில் கார்த்திக் என்பவர் எழுதிய பதிவைப் படிக்க நேர்ந்தது.
அப்பதிவில், ‘உள்ளம் கேட்குமே’ படத்தில் வரும் ஆர்யா பாத்திர திருமண நிகழ்வில் ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் அந்நிகழ்வில் பங்கேற்க வந்த கல்லூரிக் கால நண்பர் ஒருவருக்கும் இடையே காதல் அரும்பி மறைவதாகக் காட்டப்பட்டிருந்தது குறிப்பிடப்பட்டிருந்தது.
அதுபோல, ஒரு படத்தில் சில நொடிகளே வந்துபோன சிலரது முகங்கள் சில ரசிகர்களின் நினைவில் ஆழப் படிந்திருக்கின்றன என்பது விசித்திரமான உண்மை.
‘உள்ளம் கேட்குமே’வில் ‘யார் இங்க ஐரீன்’ என்று ஆர்யா மனைவியாக வருபவர் கேட்பதாக ஒரு ஷாட் உண்டு.
அந்தப் பெண்ணின் முகம் படம் பார்த்து வெகுநாட்கள் நினைவில் இருந்தது. அந்தப் பெண் சம்பந்தப்பட்ட ஒரே ஒரு ஷாட்டை தற்போது யூடியூபில் ‘கட்’ செய்து கடாசியிருக்கின்றனர்.
சுசி கணேசனின் ‘பைவ் ஸ்டார்’ படத்தில் பிரசன்னா, கிருஷ்ணா தாண்டி மங்கை, சந்தியா மற்றும் கார்த்தி ஆகியோர் நடித்திருந்தனர்.
‘க்யூட்’டாக காமெடி செய்கிற அந்தக் கார்த்தியின் குறும்பில் விழுந்த வட இந்தியப் பெண்ணாக ஒருவர் வந்து போயிருப்பார். ராஜ் டிவியில் தொகுப்பாளினியாக இருந்தவர்.
அவர் முகத்தை ஒவ்வொரு முறையும் நினைவூட்டும் அந்த ஷாட்.
‘துள்ளாத மனமும் துள்ளும்’ படத்தில் ‘மேகமாய் வந்து போகிறேன்’ பாடலுக்கு விஜய்யைக் காட்டிலும் அதிக எக்ஸ்பிரஷன் கொடுத்திருப்பார் சிவப்பு வண்ண ஜாக்கெட் அணிந்த ஒரு டான்சர்.
‘குஷி’ படத்தில் வரும் ‘ஒரு பொண்ணு ஒண்ணு நான் பார்த்தேன்’ பாடலில் ராஜு சுந்தரம் ட்ரூப்பில் வரும் ஒரு பெண் சட்டென்று கவர்ந்தார்.
இவர்களைப் போன்ற குரூப் டான்சர்களுக்காக பாடல்கள் சிலவற்றை ரசித்திருக்கிறேன். இது போன்ற பழக்கம் சிலருக்கு இருக்கலாம்.
கடந்த பத்தாண்டுகளில், ‘ஹீரோவை விட அதிகமா எக்ஸ்பிரஷன் காட்டுறீங்க’ என்று வர்ணிக்கப்பட்ட ஒரு டான்சர் சமூகவலைதளங்களில் ‘வைரல்’ ஆனதும், அவரது பேட்டியை சில யூடியூப் சேனல்கள் வெளியிட்டதும் நினைவில் இருக்கிறது.
இந்த வரிசையில் முக்கியப் பாத்திரங்களில் நடித்தவர்களும் உண்டு.
சிவகாசி படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்தவர் லக்ஷனா. அந்தக் காலகட்டத்தில் இவர் வேறு படங்களில் நடித்திருக்கிறாரா என்று கூகுளில் தேடியவர்கள் உண்டு. கிருஷ்ணா சஜித் என்ற பெயரில் இவர் நடனக்கலைஞராக இருக்கிறார்.
‘சுந்தரபாண்டியன்’ படத்தில் லட்சுமி மேனனுக்கு ‘டஃப்’ கொடுக்கும் அவரது அத்தை பெண் பாத்திரத்தில் தோன்றியிருந்தார் நீத்து நீலாம்பரன்.
அந்தப் படத்திற்குப் பிறகு அவரை ஆளையே காணவில்லை. தற்போது, இவரது ‘ஐடி’யை சமூகவலைதளங்களில் கண்டவர்கள் ‘நீங்க சுந்தரபாண்டியன்ல நடிச்சீங்களா’ என்று கமெண்ட் இட்டு வருகின்றனர்.
எனக்கு ரொம்பவும் பிடித்தது ‘லீலை’ படப் பாடல்கள். அதில் நடித்த ஷிவ், மானசி தாண்டி விபா நடராஜன், சுஹாசினி ராஜு ஆகியோரும் கவனம் ஈர்த்திருக்கின்றனர்.
வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் கமல் பாத்திரத்தின் அட்ராசிட்டி தாங்காமல், ‘What is The procedure to Change the Room’ என்று கேட்கும் பாத்திரத்தில் நடித்த ரத்தினசபாபதி மறைவு குறித்து செய்திகள் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டன.
நாட்டாமை படத்தில் பெண் பார்க்கச் செல்லும் இடத்தில் கவுண்டமணிக்கு ஒருவரைப் பிடித்துப் போகிற காட்சி வரும்.
அதில் இளம்பெண்ணாக வந்தவர் இவர் தான் என்று சம்பந்தப்பட்ட நடிகையின் பேட்டி யூடியூப் சேனல்கள் சிலவற்றில் வெளியாகியிருந்தது.
இப்படி நாம் அறியாத சில முகங்கள் நம்மை ஈர்ப்புக்கு ஆளாக்கியிருக்கின்றன. அந்தப் படங்கள், பாடல்களைப் பார்க்கையில் அந்த நினைவுகள் கிளர்ந்தெழும்.
சில விளம்பரப் படங்கள், சீரியல்கள், நிகழ்ச்சிகள் கூட அந்த மாயாஜாலத்தைச் செய்யக்கூடும். நம் மனதுக்கு நெருக்கமான அந்தப் பிரபலங்கள் பொதுவெளியில் ‘அறியா முகங்கள்’ ஆகவே இருப்பர்.
ஒரு ரஷ்மி முரளி குறித்த தேடல்களும் தகவல் பகிர்வுகளும், ஒவ்வொருவர் உள்ளத்திலும் அவ்வாறு பதிந்திருக்கும் எத்தனையோ ‘அறியா முகங்கள்’ குறித்த நினைவுகளைத் தட்டியெழுப்பியிருக்கின்றன.
– உதயசங்கரன் பாடகலிங்கம்