“ஒன்றே குலம் என்று பாடுவோம்…”!

திரைத் தெறிப்புகள்! – 102:

***

‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்கின்ற சமய ஒற்றுமைக்கான முழக்கத்தை முன் வைத்தவர் அறிஞர் அண்ணா.

பிரபலமான இந்த முழக்கத்தைத் தனது பாடல் வழியே முன்வைத்தவர் புலமைப்பித்தன். அதைத் திரைமொழியில் பாடியவர் கே.ஜே.ஜேசுதாஸ். இக்காட்சியில் நடித்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

1975-ம் ஆண்டு வெளிவந்த ‘பல்லாண்டு வாழ்க’ திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு இசையமைத்தவர் திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன்.

“அன்பிலார் எல்லாம் தமக்குரியர்
அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு.

தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி
தன்மெய் வருத்தக் கூலி தரும்…”

என்கின்ற மிகப் பிரபலமான திருக்குறள் வரிகளைத் தொடர்ந்து பாடல் இப்படித் துவங்கும்.

“ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தேவன் என்று போற்றுவோம்

அன்னை இதயமாக அன்பு வடிவமாக
வந்து வழிகாட்ட வேண்டுமென்று வணங்குவோம்.”

என்கின்ற பாடலை ஜேசுதாஸ் பாடியிருக்கும் விதமும், அதற்கு கால்களை சம்மனமிட்ட யோகா நிலையில் அமர்ந்தபடி எம்.ஜி.ஆர். பாடும் விதமாக அமைந்த காட்சியும் தனி அழகு.

இத்திரைப்படத்தில் வெவ்வேறு தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கும் குற்றவாளிகளைச் சிறையிலிருந்து தன் பொறுப்பில் விடுவித்து தன் கண்காணிப்பில் அவர்களைச் சிறைக் காவலரான எம்.ஜி.ஆர். திருத்துவதுதான் படத்தின் கதை.

இதையொட்டியே அடுத்து வரும் பாடல் வரிகளும் அமைந்திருப்பதைப் பாருங்கள்!

“கடவுளிலே கருணை தன்னைக் காணலாம்
அந்தக் கருணையிலே கடவுளையும் காணலாம்

நல்ல மனசாட்சியே தேவன் அரசாட்சியாம்
அங்கு ஒருபோதும் மறையாது அவன் காட்சியாம்…”

எத்தனையோ திரைப்படப் பாடல்களில் எளிமையும், வலிமையும் கொண்ட வரிகளைத் தந்தவரான புலமைப்பித்தன், இதில் எவ்வளவு ஆன்மீகமயமான வரிகளைத் தந்திருக்கிறார்.

“பாவமென்ற கல்லறைக்கு பலவழி
என்றும் தர்மதேவன் கோவிலுக்கு ஒரு வழி

இந்த வழி ஒன்றுதான் எங்கள் வழி என்றுநாம்
நேர்மை ஒருநாளும் தவறாமல் நடை போடுவோம்”

அறிஞர் அண்ணாவின் புகழ்பெற்ற முழக்கத்தை முன்வைத்து ஆரம்பித்திருக்கும் இந்தப் பாடலின் இறுதியில் அறிஞர் அண்ணாவின் பெயரும், தொலைக்காட்சிகளில் அவரது உருவமும் இடம்பெற்றிருக்கும்.

அன்பு என்கின்ற சொல்லுடன் துவங்கியிருக்கும் பாடலின் இறுதிவரை நம்பிக்கையூட்டும் விதத்தில் இப்படி நிறைவடைந்திருக்கும்.

“இதய தெய்வம் நமது அண்ணா தோன்றினார்
அவர் என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார்…

அந்த ஒளி காணலாம் சொன்ன வழி போகலாம்
நாளை வரலாறு நமக்காக உருவாகலாம்…”

திருவள்ளுவரில் ஆரம்பித்து பேரறிஞர் அண்ணா வழியாக எவ்வளவு மன உறுதியைத் தரும் சொற்களைப் பாடல் வழியே விதைத்திருக்கிறார்!

***

– மணா

Comments (0)
Add Comment