ஒரு ஆக்ஷன் திரைப்படம் எப்போது ரசிகர்களிடத்தில் வெற்றியைப் பெறும்? பலவீனங்களோடு இருக்கும் நாயகன் பலமுள்ள வில்லனோடு மோதி வெல்லுவதாகக் காட்டும்போது, அந்தப் படம் ரசிகர்களை வசீகரிக்கும்.
ஆனால், அதனை ஏற்கிற, ஒப்புக்கொள்கிற அளவுக்குக் கதையில் பல சிறப்பான காட்சிகள், கதாபாத்திர வார்ப்பு இன்ன பிற அம்சங்கள் இருந்தாக வேண்டும். அதனைப் புரிந்துகொண்டு களமிறங்கியிருக்கிறது ‘நோவோகெய்ன்’.
கடந்த 14ஆம் தேதியன்று இப்படம் உலகம் முழுக்க வெளியானது. இதன் எழுத்தாக்கத்தைக் கையாண்டிருக்கிறார் லார்ஸ் ஜேக்கப்சன். டான் பெர்க், ராபர்ட் ஆல்சென் இருவரும் இதனை இயக்கியிருக்கின்றனர்.
ஜாக் குவைடு, ஆம்பர் மிட் தண்டர், ரே நிக்கல்சன், மாட் வால்ஷ், ஜேக்கப் படலோன் உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர்.
வலி உணரா மனிதன்!
ஆக்ஷன் கதைகள் பல நூறு வந்து கொண்டிருக்கின்றன. அவற்றுள் சில உலகம் முழுக்க வெளியாகிறதென்றால் ஏதேனும் சிறப்பம்சம் இருக்க வேண்டும் அல்லவா? அப்படியொரு விஷயம் இந்த ‘நோவோகெய்ன்’னில் இருக்கிறது.
சாண்டியாகோ ட்ரஸ்ட் கிரெடிட் யூனியன் எனப்படும் வங்கி அல்லது அறக்கட்டளையொன்றில் துணை மேலாளராக இருக்கிறார் நாதன் கெய்ன்.
பெரிதாக மற்றவர்களுடன் பழகும் குணம் இல்லாதவர். மிகச்சுருக்கமாகப் பேசக் கூடியவர். எப்போதும் தன்னை தனிமைப்படுத்திக்கொள்ள விரும்புபவர்.
அலுவலகத்தில் புதிதாக வேலைக்குச் சேர்ந்த ஷெர்ரி மார்க்ரேவ்வின் வருகை நாதன் கெய்ன் இயல்பைப் புரட்டிப் போடுகிறது.
ஒருநாள் இருவரும் வெளியே சாப்பிடச் செல்கின்றனர். அப்போது, தனக்கு ‘பிறவியிலேயே வலியை உணர முடியாத நோய் பாதிப்பு’ (ஆங்கிலத்தில் அது சிஐபிஏ (CIPA – congenital insensitivity to pain with anhidrosis) என்று குறிப்பிடப்படுகிறது) இருப்பதாகச் சொல்கிறார். வியர்க்கும் வழக்கமும் அவருக்குக் கிடையாது.
அதனால், இதர மனிதர்கள் போல ‘ஐயோ வலிக்குது’ என்று அலறுவது நாதன் கெய்ன் அகராதியிலேயே கிடையாது.
ஆனாலும், இந்தப் பிரச்சனையால் தனக்குப் பல பாதிப்புகள் நேரக்கூடும் என்று மருத்துவர்கள் சொன்னதை நம்பி, தனக்குத்தானே பல கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டு அவர் வாழ்ந்து வருகிறார்.
நாதன் கெய்ன் சொன்னதைக் கேட்டதுமே ‘நீங்க ஒரு சூப்பர்ஹீரோ’ என்கிறார் ஷெர்ரி.
ஒரு பெண்ணின் வார்த்தைகள், அதுநாள் வரை தன்னைப் பீடித்திருந்த சங்கிலிகளைத் தகர்த்தெறிவது ஒரு ஆணுக்குப் போதாதா? ஷெர்ரியை அந்தக் கணம் முதல் உயிரெனப் போற்றத் தொடங்குகிறார் நாதன் கெய்ன்.
ஒருநாள் அவரது அலுவலகத்திற்கு முகமூடி அணிந்த மூன்று நபர்கள் வருகின்றனர். மேலாளரைப் பிடித்து மிரட்டுகின்றனர். பணம் இருக்குமிடத்தைச் சொல்லுமாறு கேட்கின்றனர். சொல்ல மாட்டார் என்றறிந்ததும், அவரைக் கொன்று விடுகின்றனர்.
அந்த கொள்ளையர்கள் ஷெர்ரியைப் பணயக்கைதியாகப் பிடித்துக் கொள்கின்றனர். அதனைக் கண்டதும் பணம் இருக்குமிடத்தை அவர்களிடம் சொல்கிறார் நாதன் கெய்ன்.
அவர்களும் பணத்தைக் கொள்ளையடிக்கின்றனர். வெளியே செல்ல முயல்கையில் போலீசார் சுற்றி வளைக்கின்றனர். ஷெர்ரியை பணயக்கைதியாக ஆக்கிக்கொண்டு, அவர்கள் மூவரும் அங்கிருந்து வெளியேறுகின்றனர்.
ஷெர்ரியை அவர்கள் கடத்திச் செல்கின்றனர் என்பதை அறிந்ததும், அவர்களைத் தடுக்க முயற்சிக்கிறார் நாதன் கெய்ன். அது முடியாதபோது, அவர்கள் பின்னே துரத்திச் செல்கிறார்.
அதனைத் தொடர்ந்து, கொள்ளை நடந்த இடத்தை இரண்டு டிடெக்டிவ்கள் பார்வையிடுகின்றனர். அந்த அலுவலகத்தில் வேலைப் பார்க்கும் ஒருவர் இச்சம்பவத்தின் பின்னணியில் இருப்பதாகச் சந்தேகப்படுகின்றனர். தங்களது விசாரணையைத் தொடர்கின்றனர்.
இதற்கு நடுவே, கொள்ளையர்களைப் பின் தொடர்ந்து செல்கிறார் நாதன்கெய்ன். அப்போது ஏற்படும் சில சம்பவங்கள் தன்னை அவர் ‘நோவோகெய்ன்’ என்று உணர வைக்கிறது. அதன்பின் என்னவானது என்று சொல்கிறது படத்தின் மீதி.
குறிப்பிட்ட சில மருத்துவச் சிகிச்சைகளின்போது வலியை உணராமல் மறத்துப்போக வைப்பதற்காக அளிக்கப்படும் மருந்துகள் ‘நோவோகெய்ன்’ என்றழைக்கப்படுகின்றன. ‘வலிகளை உணராத மனிதர்’ என்றும் குறிப்பிடப் பயன்படுத்தப்படுகிறது.
சூப்பர் ‘ஆக்ஷன்’!
வலிகளை உணராத ஒரு மனிதனை எப்படி வேண்டுமானாலும் காயப்படுத்தலாம், வதைக்கலாம்.
அதை வில்லன் கோஷ்டி மேற்கொள்ளும்போது சிரித்தவாறே நாயகன் இருந்தால் ‘கெத்தாக’ தெரியாதா? அதையே இப்படத்தின் யுஎஸ்பி ஆக முன்வைத்திருக்கிறது ‘நோவோகெய்ன்’ படக்குழு.
‘மையக் கதாபாத்திரத்தைத் தனித்துவமாக வடிவமைத்தாலே போதும்; நல்லதொரு ஆக்ஷன் கதையைத் தயார் செய்துவிடலாம்’ என்று நம்பிக் களமிறங்கியிருக்கிறார் எழுத்தாக்கத்தைக் கையாண்டிருக்கும் லார்ஸ் ஜேக்கப்சன்.
‘ஒரு பி கிரேடு ஆக்ஷன் கதைக்கான ஸ்கிரிப்ட்’ என்றபோதும், திரையில் பிரமாண்டத்தை ரசிகர்கள் உணர வேண்டும் என்று விஎஃப்எக்ஸ் துணையோடு களமிறங்கியிருக்கிறது இயக்குநர் இணை டான் பெர்க் – ராபர்ட் ஆல்சன்.
அந்த இணைக்கு வெற்றி அளிக்கும் வகையில் அமைந்திருக்கிறது இப்படத்தின் கிளைமேக்ஸ் பகுதி.
ஒளிப்பதிவாளர் ஜாக்யூஸ் ஜோஃப்ரட், படத்தொகுப்பாளர் கிறிஸ்டியன் வாக்னர், தயாரிப்பு வடிவமைப்பாளர் காரா லிண்ட்ஸ்டோர்ம், பின்னணி இசை தந்திருக்கும் இசையமைப்பாளர்கள் லார்ன் பால்ஃப், ஆண்ட்ரூ கவ்சியான்ஸ்கி உள்ளிட்ட பல தொழில்நுட்பக் கலைஞர்கள் இப்படத்தின் ஆக்கத்தைப் பலப்படுத்தி இருக்கின்றனர்.
ஒப்பனையும் படத்தின் வெற்றியில் குறிப்பிடத்தக்க பங்கினை வகிக்கிறது. அதையும் தாண்டி, ஆக்ஷன் காட்சிகள் இப்படத்தின் ஸ்பெஷல்.
நாட் அல்லது நாதன் கெய்ன் ஆக வரும் ஜாக் குவைட், ஷெர்ரி ஆக வரும் ஆம்பர் மிட்தண்டர் உடன் நாயகனின் இணைய வழி நண்பனாக வரும் ஜாக்கப் படலோனும் திரையில் பளிச்சிடுகிறார். இவர்கள் மூவரது நடிப்பும் நம்மை இருக்கையோடு கட்டிப் போடுகிறது.
டிடெக்டிவ்களாக பெட்டி காப்ரியேல் மற்றும் மாட் வால்ஷ் இருவரும் வருகின்றனர். இது போல ஒரு நூறு பாத்திரங்களையாவது நாம் பார்த்த ஹாலிவுட் சினிமாக்களில் சந்தித்திருப்போம்.
படத்தில் வில்லன்கள் என்று மூன்று பேர் வருகின்றனர். அவர்கள் நம் நினைவில் மட்டுமல்ல, நாயகனின் நினைவிலும் நிற்காத அளவுக்குத்தான் திரையில் வந்து போயிருக்கின்றனர்.
இப்படிச் சில பலவீனங்களைக் கொண்டிருந்தாலும், ஆக்ஷன் காட்சிகளில் அலறித் துடிக்காமல் சிரித்தவாறே நாயகன் வலம் வருவதும் ஈர்க்கத்தான் செய்கிறது.
கத்தி, துப்பாக்கி, கொதிக்கும் எண்ணெய் என்று பலவற்றைக் கொண்டு தாக்கினாலும், நாயகன் ‘என்னை ஏதோ ஒண்ணு தாக்கிடுச்சு போலிருக்கே’ என்பது போன்று ‘ஜஸ்ட் லைக் தட்’ நம்மைக் கடந்து செல்வது அசத்தலான ‘ஹீரோயிசம்’.
அதனை வில்லன்கள் நிகழ்த்தும்போது, திரையே ‘ரத்தக்களரி’ ஆகிறது. அது சிலருக்கு ஒவ்வாமையைத் தரக்கூடும்.
அதனைக் கடக்கத் தயார் என்றால், இந்த ‘நோவோகெய்ன்’ அளிக்கும் ‘ஹீரோயிசம்’ கொஞ்சம் வித்தியாசமானதாக இருக்கும்..!
– உதயசங்கரன் பாடகலிங்கம்