திரைத் தெறிப்புகள் – 101 :
*
தற்போது சாதியத்தினால் உண்டாகும் சிக்கல்களை மையமாக வைத்துப் பல திரைப்படங்கள் வெளிவர ஆரம்பித்திருக்கின்றன.
சாதியக் கொடுமைகளில் ஊறிக்கிடக்கிற தீண்டாமை எனும் கொடுமை, அரசியல் சட்டத்தில் ஒழிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும் இன்றுவரை பல்வேறு வடிவங்களில் நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது.
அதே தீண்டாமையை மையமாக வைத்து 1971-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘சவாலே சமாளி’.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடித்த இத்திரைப்படத்தில், உயர் சமூகத்தைச் சேர்ந்த வசதியான பெண்ணாக சித்தரிக்கப்படும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் ஜெயலலிதா.
சந்தர்ப்ப சூழலால் திருமணமான தனது கணவரைப் பார்த்து தன்னைத் தொடக்கூடாது என்று அவர் சொல்ல, தனது குடிசையை விட்டு வெளியேவந்து இப்பாடலைப் பாடுவார் சிவாஜி.
“நிலவைப் பார்த்து வானம் சொன்னது
என்னைத் தொடாதே,
நிழலைப் பார்த்து பூமி சொன்னது
என்னைத் தொடாதே,
நதியைப் பார்த்து நாணல் சொன்னது
என்னைத் தொடாதே,
நாளைப் பார்த்து இரவு சொன்னது
என்னைத் தொடாதே…”
சம உரிமையை வலியுறுத்திய இப்பாடலை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன்.
இப்பாடலை உணர்வுபூர்வமாக மிக அருமையாகப் பாடியிருப்பார் டி.எம். சௌந்தரராஜன்.
அடுத்துவரும் வரியிலேயே தீண்டாமை என்பது புதிதல்ல என்பதையும் உணர்த்தியிருப்பார் கவியரசர்.
“புதியதல்லவே தீண்டாமை என்பது
புதுமையல்லவே அதை நீயும் சொன்னது.
சொன்ன வார்த்தையும் இரவல்தானது
திருநீலகண்டரின் மனைவி சொன்னது…”
தொடுதல் என்கின்ற நெகிழ்வான உறவை முன்நிறுத்தி, தந்தையை, தாய் தொட்டதால்தான் நாம் பிறந்திருக்கிறோம் என்பதை எவ்வளவு எளிமையாக உணர்த்துகின்றது இந்தப் பாடல் வரிகள்.
“தாளத்தை ராகம் தொடாதப் போதிலே
கீதத்தை நெஞ்சம் தொடாமல் போகுமே.
தந்தை தன்னையே தாய் தொடாவிடில்
நானும் இல்லையே நீயும் இல்லையே…”
குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு ஆலயத்தில் நுழைவதுகூட மறுக்கப்பட்டு வந்திருக்கிறது என்கின்ற சமூக யதார்த்தத்தையும் ஒருசேர உணர்த்தும் இப்பாடலுக்கு இசையமைத்தவர்
எம்.எஸ். விஸ்வநாதன்.
“தங்கம் எடுத்த கை அது தங்கம் பார்த்ததா?
தர்மம் காத்த கை சமதர்மம் கண்டதா?
ஆலயம் செய்வோம் – அங்கே அனுமதியில்லை
நீ அந்தக் கூட்டமே – இதில் அதிசயமில்லை.”
நீ அந்தக் கூட்டமே இதில் அதிசயமில்லை என்று நிறைவடையும் பாடல், அது வெளிவந்த காலகட்ட யதார்த்தத்தை மட்டுமல்ல, தற்போதுவரை நீடித்துக் கொண்டிருக்கிற சமூக நிகழ்வையும் கூடவே உணர்த்திக் கொண்டிருக்கிறது.
இம்மாதிரியான தீண்டாமைப் பிரச்சனைகளைப் பற்றியும் அக்காலத்திலேயே எதிர்க்குரல் எழுப்பப்பட்டிருக்கிறது என்பது பாராட்டத்தக்க ஒன்றுதான்.
– மணா.