திரைத் தெறிப்புகள் : 102
***
தமிழ்த் திரை இசைப் பாடல்களில் வெகு சில பாடல்களே கேள்வி-பதில் வடிவில் அமைந்து வெற்றி பெற்றிருக்கின்றன.
இப்படி வெற்றிபெற்ற பாடல்களில் 1963-ம் ஆண்டில் வெளிவந்த ‘இருவர் உள்ளம்’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடலும் ஒன்று.
அவ்வளவு இனிமையான குரலுக்குச் சொந்தக்காரரான பி.சுசிலா கேள்வி எழுப்ப, தனது வளமான குரலால் அதற்கு டி.எம்.சௌந்தரராஜன் பதில் கூறும் விதமாக வடிவமைத்திருப்பார்.
“நதி எங்கே போகிறது கடலைத் தேடி
நாளெங்கே போகிறது இரவைத் தேடி
நிலவெங்கே போகிறது மலரைத் தேடி
நினைவெங்கே போகிறது உறவைத் தேடி…”
திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனும், அபிநய சரஸ்வதி சரோஜா தேவியும் மிகவும் மென்மையான நடன அசைவுகளுடன் இந்தப் பாடலுக்கு உயிர்க் கொடுத்திருப்பார்கள்.
ரசிக்கத் தகுந்த மெட்டில் இந்தப் பாடலுக்கு இசையமைத்திருப்பவர் கே.வி.மகாதேவன்.
அடுத்த வரியைப் பாருங்கள், பாடல் எப்படி மாறி இருக்கிறது என்று. எளிய விதமான கவித்துவமான வரிகளை எழுதி இருப்பார் கவியரசர் கண்ணதாசன்.
“ராகங்கள் நூறு வரும் வீணை ஒன்று
மேகங்கள் ஓடி வரும் வானம் ஒன்று
எண்ணங்கள் கோடி வரும் இதயம் ஒன்று
இன்பங்கள் அள்ளி வரும் பெண்மை ஒன்று…”
காதலின் மென்மையான உணர்வை மையப் பொருளாக வைத்துப் பல பாடலும், கவிதைகளும் வெளிவந்தாலும் கவியரசர் கண்ணதாசன் எழுதும் விதமே தனி என்பதற்கு கீழ்க்கண்ட வரிகளே சாட்சி.
“பள்ளியறை பெண்மனதில் ஏக்கம் ஏக்கம்
பக்கத்தில் துணையிருந்தால் வெட்கம் வெட்கம்
இளமைக்குள் ஆடிவரும் இனிமை கண்டு
இன்றே நாம் காணுவது இரண்டில் ஒன்று…”
இப்போது, ‘இருவர் உள்ளம்’ படத்தைப் பார்த்தாலும் கலைஞரின் வசனமும், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், எம்.ஆர்.ராதா போன்றவர்களின் நடிப்பும் மனதில் நிற்பது மாதிரியே, அருமையான குரல்களையும், வரிகளையும், இசையையும், ஏந்தியப் இப்பாடலும் மனதில் நிற்கும்.
***
– மணா