நறுவீ – எப்படிப்பட்ட ‘த்ரில்லர்’ இது..?!

சில படங்களின் டைட்டிலை கேள்விப்பட்டவுடன் ‘வித்தியாசமாக இருக்கிறதே’ எனத் தோன்றும். டீசர், ட்ரெய்லர் மற்றும் உள்ளடக்கம் தொடர்பான தகவல்களை எதிர்கொள்ள நேரிடுகையிலும் அதே ‘வித்தியாசம்’ தென்பட்டால், ‘இதனைப் பார்க்கலாமே’ என்ற எண்ணம் தொற்றும். கிட்டத்தட்ட அப்படியொரு எதிர்பார்ப்பை விதைக்கவல்லது எம்.சுபாரக் இயக்கியுள்ள ‘நறுவீ’.

இதில் ஹரிஷ், வின்சு ரேச்சல், விஜே பப்பு, பாடினி குமார், கேத்தரின் வருணா, ஜீவா ரவி, பிரவீணா, முருகானந்தம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சரி, ‘நறுவீ’ தருகிற திரை அனுபவம் எத்தகையது?

‘நறுவீ’ கதை!

ஒரு பெரிய காபி தயாரிப்பு நிறுவனம். அதன் உரிமையாளர் (மதன்) தனக்கான லாபம் என்னவென்பதில் மட்டுமே குறியாக இருப்பவர். அப்படிப்பட்டவர் தனக்குச் சொந்தமான எஸ்டேட்டில் ஆய்வு மேற்கொள்ள விரும்புகிறார். அதற்காக, ஸ்ருதிகா (வின்சு ரேச்சல்) தலைமையில் ஒரு குழுவை அங்கு அனுப்பி வைக்கிறார்.

ஸ்ருதிகா உடன் ஒரு பெண் (பாடினி குமார்), இரண்டு ஆண்கள் செல்கின்றனர். அவர்களில் ஒருவர் அந்தப் பெண்ணின் காதலர் (விஜே பப்பு).

இக்குழுவினருக்கு வழிகாட்டும் வகையில், அந்த நிறுவனத்தின் சார்பில் ஒரு பெண் நியமிக்கப்படுகிறார். அவரது பெயர் சூரியா (கேத்தரின் வருணா). அந்த மலைப்பிரதேசத்தில் பிறந்து வளர்ந்தவர்.

அந்த எஸ்டேட் அமைந்துள்ள வனப்பகுதிக்குள் நுழையும் ஆண்கள் மரணமடைந்துவிடுவார்கள் என்கிற பீதி அங்குள்ள மக்களிடையே நிலவுகிறது.

அதனால், ஸ்ருதிகா குழுவினருடன் செல்ல அப்பகுதி ஆண்கள் எவரும் தயாராக இல்லை. அப்போது, இரண்டு பெண்களை அழைத்துச் செல்ல முடிவு செய்கின்றனர்.

வனப்பகுதிக்குள் செல்ல முடிவெடுத்தபிறகு, ஸ்ருதிகா குழுவினரை ஒரு ‘அமானுஷ்யமான’ சக்தி பின்தொடர்கிறது.

ஸ்ருதிகாவின் தோழி பயமுற அது காரணமாகிறது.

பத்தாண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன தனது தாய்மாமனைத் தேடித்தான் இந்த ட்ரிப் செல்ல தான் ஒப்புக்கொண்டதாகக் கூறுகிறார் சூரியா. அவரது மாமா பெயர் தீரன் (ஹரிஷ்). கல்லூரிக் காலத்தில் ஸ்ருதிகாவின் காதலர்.

முதலாளிக்குச் சொந்தமான வனப்பகுதியில் ஆய்வு மேற்கொள்வதோடு, தீரன் பற்றி அறிவதிலும் ஆர்வம் காட்டுகிறார் ஸ்ருதிகா. அப்போது, திடீரென்று சூரியா வினோதமாகச் செயல்படுவதைக் காண்கிறார்.

அவரது செய்கைகள் தீரன் என்னவெல்லாம் செய்தார் என்பதை உணர்த்துவதாக இருக்கின்றன.

உண்மையில் தீரனுக்கு என்ன நேர்ந்தது? அதனை ஸ்ருதிகா குழுவினர் கண்டுபிடித்தார்களா என்று சொல்கிறது ‘நறுவீ’ படத்தின் மீதி.

நறுவீ என்ற சொல்லுக்கு மணமிக்க மலர் என்று அர்த்தமாம். இந்த டைட்டிலுக்கும் இக்கதைக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை.

இப்படியொரு கதையில் மலைவாழ் மக்களின் கல்வியறிவு தொடர்பான கருத்தொன்றும் இடம்பெற்றிருக்கிறது.

காணாமல் போன ஒரு நபர், அதற்கான காரணம், அதனை அறிகிற குழுவின் தேடல் என்று சில முடிச்சுகளைக் கொண்டு இக்கதையைச் சுவாரஸ்யப்படுத்த முயன்றிருக்கிறார் இயக்குனர் எம்.சுபாரக். ஒரு ‘இன்வெஸ்டிகேட்டிவ் த்ரில்லர்’ போன்று ஆக்க முனைந்திருக்கிறார்.

ஆனால், இப்படத்தின் திரைக்கதை ட்ரீட்மெண்ட் அந்த நோக்கத்திற்கு நேரெதிரான திசையில் செல்கிறது. ’ஹாரர்’ கதை போல நகர்கிறது.

ஆனால், அதனை நியாயப்படுத்துவதற்கான எந்த விஷயமும் படத்தில் இல்லை. அதுவே இப்படத்தின் பலவீனம்.

ஒளிப்பதிவும் இசையும்..!

வழக்கமாக இதுபோன்ற சிறு படங்களில் நடிப்புக் கலைஞர்களின் இருப்புத் திரையில் செயற்கையாகத் தெரியும். நாடகத்தனமாக வசனம் பேசிக்கொண்டிருப்பார்கள்; பிரேம்களில் அவர்களது இருப்பு அங்குமிங்குமாக இடம் மாறியிருக்கும்; ஒளிப்பதிவு, படத்தொகுப்பு எனப் பல நுட்பங்கள் அதனைத் தாங்கிப் பிடிக்க முடியாமல் திணறுவதாக அமைந்திருக்கும்.

குறிப்பாக, புதுமுகங்கள் இடம்பெறுகிற திரைப்படங்கள் சில அப்படிப்பட்ட அனுபவங்களைத் தரும்.

அந்த தடைகளை ‘நறுவீ’ தாண்டியிருக்கிறது பாராட்டுக்குரியது.

படத்தில் வின்சு ரேச்சல் சாம், பாடினி குமார், விஜே பப்பு வருகிற காட்சிகள் ‘லைவ்’வாக இருக்கின்றன. கேத்தரின் வருணாவின் வசன உச்சரிப்பும் திரையிருப்பும் மனதில் பதிவதாக இல்லை.

அதேநேரத்தில் மூத்தக் கலைஞர்களான ஜீவா ரவி, பிரவீணா, முருகானந்தம் ஆகியோர் எளிதாக அந்த சங்கடங்களைக் கடந்திருக்கின்றனர்.

புதுமுகம் ஹரிஷ் திரையில் பளிச்சென தெரிகிறார். நடிப்பைப் பொறுத்தவரை இன்னும் கொஞ்சம் தூரம் பயணிக்க வேண்டும்.

வில்லனாக வரும் மதனுக்கும் இது பொருந்தும். என்ன, அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஆங்காங்கே சம்பந்தமில்லாமல் வருகின்றன. அதனைக் கொஞ்சம் கவனித்திருக்கலாம்.

இது போகச் சிலர் இப்படத்தில் தலைகாட்டியிருக்கின்றனர்.

பப்பு அடிக்கிற ‘ப்ளிர்ட்டிங்’ ஜோக்குகள் அவ்வப்போது சிரிப்பை வரவழைக்கின்றன.

முருகானந்தத்தின் மகளாக நடித்தவருக்கு அழகான கண்கள். அவர் வரும் காட்சிகளும் ‘ஓகே’ ரகத்தில் இருக்கின்றன.

அப்பெண் ஆடுகிற பாடலும் சரி; வின்சு ரேச்சல், கேத்தரின் வருணா உடன் ஹரிஷ் இடம்பெற்ற பாடல்களும் சரி; கேட்கும்விதமாக, பார்க்கத்தக்க ரகமாக உள்ளன. அதற்காக இசையமைப்பாளர் அஸ்வத்துக்குப் பாராட்டு தெரிவிக்க வேண்டும்.

பின்னணி இசை முழுக்கவே ‘பயமுறுத்தும்’ விதத்தில் அமைந்துள்ளது. அது சில இடங்களில் ‘க்ளிஷே’வாக தெரிகிறது.

ஒளிப்பதிவாளர் ஆனந்த் ராஜேந்திரன் மெனக்கெடல் காரணமாக, முன்பாதி அழகாக உள்ளது. குறிப்பாக காரில் பாத்திரங்கள் பயணிக்கிற காட்சிகள் தெள்ளத்தெளிவாகப் படம்பிடிக்கப்பட்டிருப்பது அருமை. அந்த நேர்த்தி படம் முழுக்க அனைத்து ஷாட்களிலும் தென்படாதது குறையே.

இப்படத்தின் கலை இயக்குனராக சி.கே.சத்யா சக்திவேல் பணியாற்றியிருக்கிறார்.

எழுத்தாக்கம் செய்து இயக்கியிருக்கும் எம்.சுபாரக், இதில் படத்தொகுப்பாளராகவும் உள்ளார். இதற்கு முன்னர் ‘வலியவன்’, ‘ராங்கி’ உள்ளிட்ட சில பெரிய பட்ஜெட் படங்களுக்குப் படத்தொகுப்பு செய்த அனுபவம் அவருக்குண்டு.

அது, இப்படத்தில் பாடல் காட்சிகளைத் தொகுக்கக் கைகொடுத்திருக்கிறது. காட்சியாக்கத்தில் பெரிதாகத் தொய்வு தெரியாமல் இருக்கவும் உதவியிருக்கிறது.

தொழில்நுட்ப அம்சங்கள் ஓரளவுக்குக் கைகொடுத்தாலும், இப்படத்தின் ‘ஸ்கிரிப்ட்’ அதற்கேற்றவாறு இல்லை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

குறிப்பாக, இப்படத்தின் கதைக்கருவுக்கும் திரைக்கதை ட்ரீட்மெண்டுக்கும் பெரிதாகச் சம்பந்தமில்லை. போலவே, வில்லனின் இருப்பு இந்தக் கதையில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

அதனால், ‘எப்படிப்பட்ட த்ரில்லர்’ ஆக இது இருக்கப் போகிறது என்ற கேள்வியுடன் படம் பார்க்கிற நாம் இறுதிவரை பதில் கிடைக்காமலேயே தியேட்டரை விட்டு வெளியேற வேண்டியிருக்கிறது.

இந்த கதைக்குத் தேவையானவற்றைத் திரையில் ஓரளவுக்குப் புகுத்தியிருந்தால், வலிந்து திணிக்கப்பட்ட விஷயங்களைத் தவிர்த்திருந்தால், எடுத்துக்கொண்ட கதைக்கருவுக்கு ஏற்ற காட்சியமைப்பையும் ஆக்கத்தையும் கைக்கொண்டிருந்தால் ‘நறுவீ’ உண்மையிலேயே மணம் வீசியிருக்க வாய்ப்புண்டு. இப்போது, அது கைவிட்டுப் போயிருக்கிறது என்பதே உண்மை.

  • உதயசங்கரன் பாடகலிங்கம் 
Comments (0)
Add Comment