சினிமா தோன்றிய காலத்தில் இருந்தே கதைத் திருட்டுகள் ‘உலக மயமாக்கல்’ ஆகி விட்டன. 50 ஆண்டுகளுக்கு முன்பு, பிராந்திய மொழிப் படங்களின் எல்லை, ஒரு மாநிலத்துக்கு உள்ளேயே அடங்கி இருந்தது.
இதனால், பிற மொழிகளில் இருந்து, தமிழுக்கு ‘இறக்குமதி’ செய்யப்படும் கதைகளின் ‘மூலம்’ சம்மந்தப்பட்ட படத்தின் டைரக்டருக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாக இருக்கும்.
அண்டை மாநிலப் படங்கள் ‘சுடப்படுவதே’ தெரியாது எனும் சூழலில் ஆங்கிலப் படங்கள், காப்பி அடிக்கப்பட்டதை யாரால் அறிந்து கொள்ள இயலும்?
‘ரோமன் ஹாலிடே’ எனும் ஒற்றை ஹாலிவுட் திரைப்படத்தை தழுவி, தமிழில் 10 சினிமாக்கள் வெளிவந்துள்ளன என்கிறார்கள், சினிமா விமர்சகர்கள்.
தமிழ்ப் படங்கள் இப்போது கடல்தாண்டியும் செல்வதால், இது குறித்த செய்திகளும் உலகம் முழுக்கப் பரவுகிறது.
இப்படியாக அஜித்தின் ‘விடாமுயற்சி’ பற்றிய செய்தி, பரவியதும், அந்தப் படம் ஹாலிவுட் படமான ‘பிரேக்டவுன்’ படத்தின் அப்பட்டமான காப்பி என தெரிய வந்தது.
ஹாலிவுட் படத்தயாரிப்பு நிறுவனம், விடாமுயற்சியை தயாரிக்கும் லைகா நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பி, இது தொடர்பான பஞ்சாயத்து நடந்து வருவது தனிக்கதை.
கதைத் திருட்டுகள் ஓயாத நிலையில் இப்போது, பிரபலமான படத்தின் ‘டைட்டில்’களை அபகரிக்கும் போக்கு கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.
உச்ச நட்சத்திரங்கள் நடித்து, அபரிமிதமான வரவேற்பையும், அபார வசூலையும் நிகழ்த்திய படங்களே பெரும்பாலும் களவாடப்படுகின்றன.
பல ஆண்டுகளுக்கு முன் விஜய் நடித்த படத்துக்கு ‘காவல்காரன்’ என தலைப்பிட்டு ஷுட்டிங் நடந்தது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் கலைப்பயணத்தில் அந்தப் படம் ஒரு மைல்கல்.
காவல்காரன் படத்தை தயாரித்த ஆர்.எம். வீரப்பன், அந்த டைட்டிலுக்கு அனுமதி கொடுக்க மறுத்து விட்டார். இதனால் காவலன் என பெயர் மாற்றப்பட்டது. ரஜினிகாந்த் நடித்த பொல்லாதவன், படிக்காதவன் போன்ற படங்கள், அதே பெயரில், தனுஷ் நடிப்பில் வெளிவந்தன.
மருமகனுக்காக அவற்றை விட்டுக்கொடுத்தார் மாமனார். அந்தப் படங்களில் தயாரிப்பாளர்கள் வேறு வேறு ஆட்கள் எனினும், ரஜினியின் முகத்துக்காக ‘டைட்டில்’ தியாகம் செய்தனர்.
சிவாஜி, ரஜினி நடித்து கே. பாலாஜி தயாரித்த படம் ‘விடுதலை’. ‘குர்பானி’ இந்திப் படத்தின் ‘ரீமேக்’. அந்த டைட்டிலை இயக்குநர் வெற்றிமாறன் சுட்டு, ஒன்றல்ல, இரண்டுப் படங்களை டைரக்டு செய்து பெயர் வாங்கியுள்ளார்.
ஏ.பி. நாகராஜன் கை வண்ணத்தில் உருவான ‘திருவிளையாடல்’ ஒரு காவியம். தனது மசாலா படத்துக்கு அந்த டைட்டிலை சூட்டினார் தனுஷ். சிவாஜி ரசிகர்கள் கொந்தளித்தனர். இதனால் நவீன திருவிளையாடல் ஆரம்பம் என படத்தின் பெயரை மாற்றினார்கள்.
கே. பாலாஜி தயாரிக்க, சிவாஜி நடித்து சக்கைப் போடுபோட்ட படம் ‘ராஜா’. அந்தப் பட தலைப்பை அஜித் படத்துக்கு சூட்டினர். ஆனால் படம் ‘பிளாப்’.
கலைஞர் – சிவாஜி உள்ளிட்டோரை இன்று நினைவு கூறும் படம் ‘பராசக்தி’ தமிழில் பிரளயத்தை உருவாக்கிய சினிமா.
சிவாஜி, அந்தப் படத்தில்தான் சினிமாவுக்கு அறிமுகம் ஆனார். அந்தத் தலைப்பை, சிவகார்த்திகேயன் படத்துக்கு வைத்துள்ளார் டைரக்டர் சுதா கொங்கரா.
சிவாஜி ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்ப்பு காட்டததால், அந்தத் தலைப்புடன் பட ஷுட்டிங் ஆரம்பம் ஆகியுள்ளது.
இதேபோல் பழைய டைட்டில்களை அபகரித்து வெளியான படங்கள் எண்ணிக்கை – அபூர்வ சகோதரர்கள், ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘நெஞ்சிருக்கும் வரை’, ‘குலேபகாவலி’, ‘நாடோடி மன்னன்’, ‘காக்கிச் சட்டை’, ‘மாவீரன்’, ‘எதிர்நீச்சல்’, ‘வேலைக்காரன்’, ‘அமரன்’ என பல டஜன்கள் தேறும்.
கோடம்பாக்கத்தில் கதைக்குத்தான் பஞ்சம். படத் தலைப்புகளுக்குக் கூடவா தட்டுப்பாடு?
– பாப்பாங்குளம் பாரதி.