சினிமா துறைக்கு வழங்கும் நாட்டின் உயரிய திரைப்பட விருதான ‘தாதா சாகேப் பால்கே’ விருது, மலையாள நடிகர் மோகன்லாலுக்கு வழங்கப்பட்டது.
டெல்லியில் நடைபெற்ற தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இந்த விருதை வழங்கினார்.
விருது பெற்ற மோகன்லால், “இந்தத் தருணம் என்னுடையது மட்டுமல்ல. இது முழு மலையாளத் திரைப்படத் துறைக்கும் சொந்தமானது. இந்த விருதை எங்கள் துறையின் மரபு, படைப்பாற்றல் மற்றும் மீள்தன்மைக்கான பலனாக நான் பார்க்கிறேன்” என நெகிழ்ந்தார்.
விருது வாங்கிய கையோடு கேரளா திரும்பிய மோகன்லால், உடனடியாக ‘திரிஷ்யம்-3’ படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
படப்பிடிப்புத் தளத்தில் மோகன்லால் கவுரவிக்கப்பட்டார். அவருக்கு விருது வழங்கப்பட்டதை படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடினர்.
ஹீரோயின் மீனா, இயக்குநர் ஜீத்து ஜோசப் மற்றும் நடிகர் – நடிகைகள் மோகன்லாலுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.
“லாலேட்டன் (மோகன்லால்) அர்ப்பணிப்பும், புத்திகூர்மையும் உள்ள நடிகர்” என மீனா புகழ்ந்தார்.
‘திரிஷ்யம்-3’ படத்தில், ஜார்ஜ் குட்டி (படத்தில் மோகன்லால் பெயர்) கடந்த 4 நான்கு ஆண்டுகளில், தனது குணங்களை எப்படி மாற்றிக்கொண்டார் என்பதை சொல்லப் போகிறோம்’ என ஜீத்து ஜோசப் தெரிவித்தார்.
– பாப்பாங்குளம் பாரதி.