முனீஸ்காந்த், விஜயலக்ஷ்மி அகத்தியன், வேல ராமமூர்த்தி, ராதாரவி, மாளவிகா அவினாஷ், கோடாங்கி வடிவேல் நடிப்பில் கிஷோர் ராமலிங்கம் இயக்கி இருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’. அக்சஸ் பிலிம் பேக்டரி, குட் ஷோ சார்பில் தேவ் மற்றும் துரை ஆகியோர் தயாரித்து இருக்கிறார்கள்.
சொந்த ஊரில் கட்டப்படும் பள்ளிக் கூட்டமே அப்பா கொடுத்த நிலத்தில்தான் கட்டப்படுகிறது என்ற அளவுக்கு வாழ்வாங்கு வாழ்ந்த ஒரு தந்தையின் (வேல ராமம்மூர்த்தி), மகன் (முனீஸ்காந்த்), சென்னையில் ஒரு வாடகை வீட்டில் மனைவி (விஜயலக்ஷ்மி) மற்றும் ஒரு மகன் ஒரு மகளுடன் வசிக்கிறான்.
அப்பாவின் உதவியால் எத்தனையோ பேர் வாழ்வில் உயர்ந்திருந்தாலும் இவனுக்கு பலன் இல்லை என்ற நிலையில் வாழ்க்கை.
கைக்கும் வாய்க்குமோ பத்தாத சம்பளத்துடன் வாழ்க்கை. எவ்வளவு சிக்கனமாக இருந்தாலும் பிள்ளைகள் படிப்புச் செலவைக் கூட சமாளிக்க முடியாத நிலை.
மனைவியின் அக்கா வசதியாக வாழ்வதால் கல்யாணம், காட்சி என்றால் அக்கா அளவுக்கு நாமும் செய்வதுதான் கவுரவம் என்பது மனைவியின் எண்ணம்.
இதுபோன்ற விஷயங்களால் கணவனுக்கும் மனைவிக்கும் அடிக்கடி சண்டை.
இப்படியான ஒரு சூழலில், அவன் கோபித்துக் கொண்டு வீட்டைவிட்டே போய்விட, பின்னர் பேச்சிலர் நண்பன் ரூமில் இருந்து அவனை மனைவி அழைத்து வருகிறாள்.
வீட்டைச் சுத்தம் செய்து ஒழுங்குபடுத்த எண்ணி அவன் பரணை சுத்தப்படுத்தப் போக, அங்கே அப்பாவின் பழைய பெட்டி. உள்ளே ஒரு பழைய பத்திரம்.
1970 களில் இதே சென்னையில் மண்ணடியில் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது அங்கு வேலைக்கு வருகிறான் ஒரு ராஜஸ்தானி இளைஞன்.
அவனுக்கு ஆதரவளித்து வேலை தருகிறார் அப்பா.
ஒரு நிலையில் அப்பா மீண்டும் கிராமத்துக்கே போக எண்ணி, கடையை ராஜஸ்தான் நபருக்கு இலவசமாகக் கொடுக்க முடிவு செய்ய,
மறுக்கும் அவன் வட்டி இல்லாக் கடனாக வேண்டுமானால் வாங்கி கொள்கிறேன் என்று சொல்லி, அப்படியே வாங்கிக் கொள்கிறான்.
அந்த பத்திரம்தான் அது.
மேலும் பண நெருக்கடி வரும் சூழலில் அதை எடுத்துக்கொண்டு போய் சேட்டைப் பார்க்கிறான். அவர் ஒரு கோடி ரூபாய்க்கு செக் கொடுக்கிறார்.
பணம் வரப்போவது தெரிந்த மனைவி, இப்போது வாயெல்லாம் பல்லாகக் கொஞ்சுகிறாள். நிறைய கடன் வாங்கி ஜாம் ஜாம் என்று செலவு செய்கிறாள்.
வளர்பிறை சமயத்தில் அந்த காசோலையை நிரப்பி வங்கியில் போடலாம் என்று அவன் நினைக்க, வரும் வழியிலேயே அலுவலக வேலை ஒன்றை முடித்து விட்டு, விபத்தில் சிக்கிய ஒருவனை மருத்துவமனையில் சேர்த்து விட்டுப் பார்த்தால்.. செக் காணவில்லை!
சேட்டிடம் போய் விஷயத்தை சொல்லி ஸ்டாப் பேமண்ட் கொடுத்து வேறு செக் வாங்கலாம் என்றால் அவருக்கு ஹார்ட் அட்டாக்… மரணம்!
செக் எங்கே எப்படித் தொலைந்தது? அது அவனுக்கு திருப்பிக் கிடைத்ததா? இல்லையா?
செக் தொலைந்தது அவன் மனைவிக்கு தெரிந்ததா இல்லையா?
தெரிந்தது எனில் அவள் என்ன செய்தாள்?
– இதன் மூலம் அவன் அல்லது அவர்கள் எடுத்த முடிவு என்ன என்பதே படம்.
நாயகன் வயல் வெளியில் மெய் மறந்து படுத்திருக்கும் காட்சியிலேயே இயக்குநர் கிஷோர் ராமலிங்கமும், ஒளிப்பதிவாளர் சுதர்ஷன் சீனிவாசனும் அசத்துகிறார்கள். கோடாங்கி வடிவேல் சில சமயம் சிரிக்க வைக்கிறார்.
மிக இயல்பான யதார்த்தமான பெரிதாக சுவாரஸ்யம் இல்லாத – அங்கங்கே ஒரு சில அத்திப் பூத்தது போன்ற காமெடிகள் மட்டுமே வர, அதே நேரம் ரொம்பப் படுத்தாமல்தான் போய்க் கொண்டிருந்தது படம்.
செக் தொலையும் போதுகூட படம் பார்ப்பவருக்கு ஒரு பதட்டம் வரத்தான் செய்கிறது.
ஆனால், அதன் பிறகு அடிக்கிறார்கள் பாருங்கள் கூத்து. கதையின் சீரியஸ் தன்மையை, கனத்தை, அவர்களே உணராமல் காட்சிகளை வைக்கிறார்கள்.
குணாதிசயத்துக்கு சம்மந்தம் இல்லாமல் காமெடி செய்கிறார்கள். அவர்களுக்கே சீரியஸ்னஸ் புரியவில்லை என்பதால் நமக்கென்ன என்ற உணர்வே வருகிறது.
அதனால் செக் தொலைந்தது பற்றிய காரணங்களும் கேள்விக்கு உள்ளாகிறது. இவ்வளவு பிரச்சனை உள்ள ஒருவன் ஒரு கோடி ரூபாய்க்கு செக் கிடைத்தால் முதலில் அதை வங்கியில் போட்டு கிரெடிட் ஆகிறதா என்பதில் கவனம் செலுத்துவானா?
ஒரு கோடி ரூபாய் செக்கை வரும் வளர்பிறை அன்று தன பெயரை எழுதி பேங்கில் போடுவோம் என்று நினைப்பானா?
(சேட்டு என்ன மாசா மாசம் ஒரு கோடி ரூபாய் தருகிறேன் என்றா சொன்னார். அப்புறம் எதுக்கு வளர்பிறை?)
அது போகட்டும் அந்த செக்கை கையில் வைத்துக் கொண்டு ஒருவன் ரோட்டில் விபத்துக்கு உள்ளாகும் ஒருவனை மருத்துவமனையில் சேர்ப்பானா? அது கூட போகட்டும்.
ஒன்றரையணா சம்பளம் வாங்கும் ஆபீசில் கிளரிக்கல் வேலையைப் பார்ப்பானா? தவிர அந்த செக்கை மறந்து போய் அங்கும் இங்கும் வைப்பானாம். அவ்வளவு அப்பாவியாம் அவன்.
உண்மையிலேயே அவனை அவன் பொண்டாட்டி கழுவிக் கழுவி ஊத்துறதெல்லாம் ரொம்பக் கம்மி.
உண்மையில் இந்தப் படக் குழு புத்திசாலித்தனமாக என்ன செய்திருக்க வேண்டும்?
செக் தொலைவதற்கு முன்பு வரும் காமா சோமா காட்சிகள், சில்லுண்டி சென்டிமென்ட்கள்,
இவற்றையெல்லாம் தூக்கிவிட்டு, குடும்பம் படும் கஷ்டங்களை ரசிகனின் பார்வையில் காமெடியாகச் சொல்லி இருக்க வேண்டும்.
செக் தொலைந்த பிறகு படம் முழுக்கவே சீரியஸாகத்தான் போயிருக்க வேண்டும்.
கடைசியில் கொஞ்சம் காமெடி அல்லது சோக செண்டிமெண்ட் என்பதுதான் இந்தப் படத்துக்கான தியேட்டரிக்கல் வெற்றிக்கான வழி. அது இந்தப் படக் குழுவுக்கு தெரியவில்லை.
அப்பாவின் குணத்தை மகன் உணர்வது, பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பச் சொல்லும் விஷயம், கணவன் ஆசைப்படி மனைவி ஊருக்கு வர நினைப்பது, ஊனமுற்ற ஓர் ஏழைப் பெண்ணின் குணம், சில உண்மைகள் வெளிப்படும் விதம்,
கணவன் மனைவி சண்டை என்று நல்ல காட்சிகள் வந்தாலும் அவற்றுக்கு உரிய பலன் கிடைக்காமல் அந்த அற்புதமான விசயங்கள் எல்லாம் உதிரி உதிரியாகத் தெரிகின்றன.
ஒரு முறை தற்காலிகமாக மனைவியிடம் கோபித்துக் கொண்டு பிள்ளைகளை விட்டுவிட்டு ஒரு தகப்பன் வெளியேறுவது என்பது யதார்த்தமான, சொல்லப் போனால் சிறப்பான காட்சி.
ஆனால், மிக முக்கியக் கட்டத்திலும் பிள்ளைகளை அம்போ என்று விட்டுவிட்டு ஒரு தகப்பன் போவது என்ன நியாயம்?
மிக நன்றாக ஓட வேண்டிய சிறப்பான கதை. ஆனால் திரைக்கதை சரியாக அமையாமல் போனது பெரிய பலவீனம்.
மொத்தத்தில் மிடில் கிளாஸ்… ஃபெயில் ஆகாவிட்டாலும் செகண்ட் கிளாஸ்தான்.
– சு.செந்தில் குமரன்