தீபாவளி, பொங்கல், ஆயுதபூஜை, விநாயகர் சதுர்த்தி, சுதந்திர தினம், உழைப்பாளர் தினம், கிறிஸ்துமஸ், ரம்ஜான் என்று குறிப்பிட்ட சில பண்டிகைகளையொட்டி திரைப்படங்கள் வெளியாவது பல ஆண்டுகளாகத் தொடரும் வழக்கம்.
அந்த விடுமுறை நாட்களில் மக்கள் கூட்டம் கூட்டமாகத் தியேட்டர்களுக்கு வருவார்கள் என்பது அதன் பின்னிருக்கும் நம்பிக்கை. பெரும்பாலும் அந்த நம்பிக்கை பொய்த்ததில்லை.
அந்த வகையில், வரும் 14ஆம் தேதி வரும் ‘தமிழ் புத்தாண்டை’ யொட்டி அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ வெளியாகவிருக்கிறது.
அப்படமே கிட்டத்தட்ட தமிழ்நாட்டில் 900 திரைகளில் திரையிடப்படும் என்று தெரிகிறது. ‘அப்படியானால் அந்த வாரத்தில் வெளியாகும் இந்தி, தெலுங்கு, மலையாளப் படங்களை பார்க்க முடியாதா’ என்ற கேள்வி சிலருக்கு எழலாம்.
மீதமுள்ள தியேட்டர்களில் அவற்றைப் பார்க்க வாய்ப்பு உருவாகும் என்பதே கடந்த கால வரலாறு நமக்குச் சொல்கிற சேதி.
கேரளாவில் சித்திரை மாதப் பிறப்பானது ‘விஷு’வாக கொண்டாடப்படுகிறது. முக்கனித் திருநாளாகக் கடைபிடிக்கப்படும் அந்நாளில் மலையாளத் திரைப்படங்கள் கொத்தாக வெளியாகும்.
அந்த வரிசையில் இந்த ஆண்டும் சில படங்கள் காத்திருப்பில் இருக்கின்றன. சிலவற்றின் ட்ரெய்லர் கடந்த வாரத்தில் வெளியாகியிருக்கின்றன.
மரண மாஸ்:
‘மாசமான சம்பளம் வருதோ இல்லையோ இந்த மனுஷன் வந்துறாப்டி’ என்று சமூகவலைதளங்களில் ‘மீம்ஸ்’ இட்டுக் கிண்டலடிக்கிற அளவுக்கு அடுத்தடுத்து பசில் ஜோசப் படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் இன்னொன்றாக அமைந்திருக்கிறது இப்படம்.
ஒரு பேருந்தில் ஒன்றாகச் சேர்கிற நால்வருடன் சைக்கோ கொலையாளி ஒருவரும் இணைகிறார். அதன்பின் நடப்பது என்ன என்கிறது இப்படம்.
இதில் சைக்கோ கொலையாளியாக ராஜேஷ் மாதவன் வருகிறார். மேலும் இதில் சிஜு சன்னி, சுரேஷ் கிருஷ்ணா, பாபு ஆண்டனி, அனிஷ்மா அனில்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
நடிகர் டொவினோ தாமஸ் தயாரித்திருக்கும் இப்படத்தின் திரைக்கதை வசனத்தை சிஜு சன்னியும் இயக்குநர் சிவபிரசாத்தும் அமைத்திருக்கின்றனர். இதன் ட்ரெய்லரை 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் யூடியூபில் ரசித்திருக்கின்றனர்.
ஆலப்புழா ஜிம்கானா:
மலையாளத்தில் விளையாட்டு தொடர்பான திரைப்படங்கள் வெகுஅரிதாகத்தான் வரும். அது போன்ற கதைகளை படமாக ஆக்கும்போது பட்ஜெட் எகிறிவிடும் என்பது ஒரு காரணம்.
அது போன்ற காரணங்களைப் புறந்தள்ளிவிட்டு, குத்துச்சண்டைப் போட்டிகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது ‘ஆலப்புழா ஜிம்கானா’. ‘பிரேமலு’ புகழ் நஸ்லென் கஃபூர் இதில் நாயகன்.
அவரோடு லுக்மன் ஆவரன், கணபதி அனகா ரவி, ஜினு ஜோசப், கோட்டயம் நச்சீர், சந்தீப் பிரதீப் உடன் நம்மூர் ரெடின் கிங்ஸ்லியும் நடித்திருக்கிறார்.
விஷ்ணு விஜய் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இயக்குநர் காலித் ரஹ்மான் உடன் இணைந்து இதன் எழுத்தாக்கத்தைக் கையாண்டிருக்கிறார் ஸ்ரீனி சசீந்திரன்.
‘ஆலப்புழா ஜிம்கானா’ ட்ரெய்லர் யூடியூபில் இதுவரை சுமார் 60 லட்சம் பேரை எட்டியிருக்கிறது.
பஸுகா:
மம்முட்டி நடிப்பில் வெளியாகிற படம் இது. ஆக்ஷன் த்ரில்லர் வகைமையில் உருவாக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிற இப்படத்தை டீனோ டென்னிஸ் எழுதி இயக்கியிருக்கிறார்.
இதில் கௌதம் வாசுதேவ் மேனன் முக்கியப் பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் நீதா பிள்ளை, பாபு ஆண்டனி, ஜகதீஷ், சித்தார்த் பரதன், ஐஸ்வர்யா மேனன், ஷைன் டாம் சாகோ, காயத்ரி அய்யர் உட்படப் பலர் நடித்துள்ளனர்.
இப்படமும் சீரியல் கில்லர் ஒருவரைத் துரத்துவது பற்றியது தான். இதன் ட்ரெய்லர் சுமார் 62 லட்சம் பேரைச் சென்றடைந்திருக்கிறது.
இது போக மேத்யூ தாமஸின் நடிப்பில் ‘லவ்லி’ எனும் 3டி படமும் வெளியாகவிருக்கிறது.
அப்படத்தின் ட்ரெய்லர் பற்றியும், அப்படம் குறித்தும் நாம் ஏற்கனவே சில விஷயங்களைப் பார்த்திருந்தோம். காதல் பொங்கப் பேசும் ஒரு பெண் ஈ உடன் ஒரு இளம் வாலிபர் கொள்ளும் ஈர்ப்பு குறித்து அந்த ட்ரெய்லர் கோடிட்டுக் காட்டியிருந்தது.
வரும் 14ஆம் தேதியன்று திலீப் நடிப்பில் ‘பிரின்ஸ் அண்ட் தி பேமிலி’ திரைப்படம் வரும் என்று சொல்லப்படுகிறது.
பிண்டோ ஸ்டீபன் இயக்கியுள்ள இப்படத்தில் ஊர்வசி, மஞ்சு பிள்ளை, வினீத் தட்டில் டேவிட், சித்திக், தியான் சீனிவாசன், பிந்து பணிக்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஏப்ரல் 17ஆம் தேதியன்று ஆசிஃப் அலி நாயகனாக நடித்துள்ள ‘அபயந்தர குட்டவாளி’ திரைப்படம் வெளியாக இருக்கிறது.
சேதுநாத் பிரேம்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் ஜகதீஷ், சித்தார்த் பரதன், அசீஸ் நெடுமங்காடு, ஹரிஸ்ரீ அசோகன், ஆனந்த் மன்மதன், துளசி, ஸ்ரீஜா தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
அதே தினத்தன்று புதுமுகங்கள் நடித்த ‘யுனைடெட் கிங்டம் ஆஃப் கேரளா’வும் ரிலீஸ் ஆகிறது. அருண் வைகா இதனை இயக்கியுள்ளார்.
மேற்சொன்ன படங்களில் பெரும்பாலானவை விஷு திருநாளையொட்டி தியேட்டரில் மக்களை மகிழ்விக்கக் காத்திருக்கும் என்று நம்பலாம். ஏற்கனவே எம்புரான் உடன் இணைந்து ‘அபிலாஷம்’ திரைப்படம் கேரளாவில் ஓடிக் கொண்டிருக்கிறது.
ஒரு பண்டிகை நாளில் உணவு, உடை, உறவினர்கள் உடனான அளவளாவல் போன்றே திரைப்படங்களைக் காண்பதும் சுற்றுலா செல்வதும் மக்களின் கேளிக்கை நடவடிக்கைகளாக உள்ளன.
அந்த தேவைகளைத் தீர்க்க, இந்த ஆண்டு வெளியாகும் மலையாளத் திரைப்படங்களில் ‘விஷு ட்ரீட்’ ஆக அமையப் போகும் படங்கள் எவை என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.
-மாபா