மலையாளத் திரையுலகின் மிக முக்கியமான நடிகரும், கதாசிரியரும், இயக்குநருமான சீனிவாசன் இன்று காலமானார். அவருக்கு வயது – 69.
அவர் மலையாளத் திரையுலகுக்கு மட்டும் சொந்தமல்ல. ஒரு வகையில் தமிழ் திரையுலகுடனும் மிகுந்த நெருக்கத்துடன் இருந்தவர்.
மலையாளத்தில் அவர் எழுதிய பல படங்கள், அங்கு வெற்றியடைந்ததும் தமிழில் எடுக்கப்பட்டு பெரும் வெற்றியைப் பெற்றுள்ளன.
குசேலன் (கத பறயும்போள்), இல்லம் (சன்மனசுள்ளவர்க்கு சமாதானம்), அண்ணாநகர் முதல் தெரு (காந்தி நகர் செகண்ட் ஸ்டிரீட்), சிதம்பரத்தில் ஒரு அப்பசாமி (சிந்தாவிஷ்டாயாய சியாமளா) கதாநாயகன் (நாடோடிக் காற்று) உள்ளிட்ட சீனிவாசனின் எண்ணற்ற படங்கள் தமிழில் தயாரிக்கப்பட்டு வெற்றி பெற்றுள்ளன.
அதன்மூலம் தமிழுக்கு நகைச்சுவையுடன் கூடிய பல நல்ல படங்களைத் தந்துள்ளார் சீனிவாசன்.
சீனிவாசனைப் பொறுத்தவரை மலையாளத் திரையுலகில் வெற்றிக்கொடி நாட்டினாலும், அவரது பயணம் சென்னையில்தான் தொடங்கியுள்ளது.
சென்னை திரைப்பட கல்லூரியில்தான் சீனிவாசன் படித்துள்ளார்.
அப்போது சென்னை ஹாஸ்டலில் தங்கியிருந்த சிவாஜிராவுடன் (அதுதான் நம் ரஜினிகாந்த்) அவருக்கு பழக்கம் இருந்துள்ளது.
ரஜினிகாந்த்தைப் போல் திரைப்பட கல்லூரியில் படித்து முடித்ததும் சீனிவாசனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
பல ஆண்டுகள் அவர் சென்னையில் வாய்ப்பு தேடி அலைந்துள்ளார்.
அந்த காலகட்டத்தில் தினசரி சாப்பாட்டுக் காசுக்காக சில படங்களில் துணை நடிகராகவும் நடித்துள்ளார் சீனிவாசன்.
அப்படி அவர் நடித்த படங்களில் ஒன்று ‘அவர்கள்’.
கே.பாலசந்தர் இயக்கத்தில் கமல், ரஜினி உள்ளிட்டோர் நடித்த ‘அவர்கள்’ படத்தில் கமல் கிரிக்கெட் ஆடுவதுபோல் ஒரு பாடல் காட்சி வரும்.
அந்தப் பாடல் காட்சியில் கமலுடன் கிரிக்கெட் விளையாடும் வீரராக நடித்தவர்களில் சீனிவாசனும் ஒருவர். இப்படிப் பல கஷ்டங்கள் பட்ட பிறகுதான் சீனிவாசனுக்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்தன.
மலையாளத் திரையுலகைப் பொறுத்தவரை, ஒரு நடிகர் என்பதைவிட ஒரு கதாசிரியராகத்தான் ரசிகர்கள் அவரைப் பார்க்கிறார்கள்.
1984-ம் ஆண்டில் பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான ‘ஓடருதம்மாவா ஆளறியாம்’ என்ற திரைப்படம்தான் சீனிவாசன் திரைக்கதை அவதாரம் எடுத்த முதல் படம்.
அன்றிலிருந்து மலையாளத் திரையுலகில், மிக அழகான கதைகளைச் சொல்லும் ஒரு கதாசிரியராக மாறினார் சீனிவாசன்.
அரசியல் நையாண்டி, குடும்பச் சண்டை, ஆக்ஷன், சமூகக் கதைகள் என்று எல்லாவித கதைகளையும் நகைச்சுவையுடன் சொல்லி வெற்றிக்கொடி நாட்டினார் சீனிவாசன்.
மலையாளத் திரையுலகில் சூப்பர் ஸ்டார்களுக்கு இணையாக இவரது திரைக்கதை போற்றப்பட்டது.
திரைக்கதை எழுத்தாளர்களுக்கு ஒரு புதிய மரியாதையை அவர் ஏற்படுத்திக் கொடுத்தார்.
பிரபல இயக்குநர் சத்தியன் அந்திக்காடுடன் சேர்ந்து இவர் திரைக்கதை ஆசிரியராக பணியாற்றிய காந்திநகர் செகண்ட் ஸ்ட்ரீட், சன்மனசுள்ளவர்க்கு சமாதானம், நாடோடிக் காற்று போன்ற படங்கள் மலையாளத் திரையுலகில் ஒரு புதிய போக்கையே ஏற்படுத்தியது.
சிந்தாவிஷ்டயாய சியாமளா என்ற படத்துக்காக தேசிய விருதை வென்ற சீனிவாசன், கேரள அளவிலும் பல விருதுகளைச் சொந்தமாக்கி உள்ளார்.
ஒரு சூப்பர் ஸ்டாருக்கும், சாதாரண சவரத் தொழிலாளிக்கும் இடையிலான நட்பை மையமாக வைத்து சீனிவாசன் எழுதிய ‘கத பறயும்போள்’ திரைப்படம் தேசிய அளவில் அவரைக் கொண்டுசென்றது.
இப்படத்தைப் பார்த்த ரஜினிகாந்த், படம் முடிந்தும் கண்ணீருடன் சீனிவாசனை கட்டி அணைத்துள்ளார்.
அந்தப் படத்தை ‘குசேலன்’ என்ற பெயரில் தமிழில் பி.வாசு இயக்க, அதில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார் ரஜினி.
இப்படித் தமிழில் ‘அவர்கள்’ படத்தில் தொடங்கிய சீனிவாசனின் பயணம் ‘குசேலன்’ வரை தொடர்ந்திருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த சீனிவாசன், 2 நாட்களுக்கு முன் கீழே விழுந்தில் மேலும் பாதிக்கப்பட்டுள்ளார்.
சீனிவாசனின் மகன்களான வினித் சீனிவாசனும், தியான் சீனிவாசனும் நடித்துள்ள ‘பா பா ப’ படம் இந்த வாரம்தான் வெளியாகி மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
மகன்கள் இருவரும் ஒன்றாக நடித்த படத்தின் வெற்றி விழாவைத்தான் அவரால் பார்க்க முடியவில்லை.
– பி.எம். சுதிர்