எம்.ஜி.ஆர் என்பதற்கு என்ன பொருள்!

நாடோடி மன்னன் பட வெற்றிவிழாத் துளிகள்

1958 ஆம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதி மதுரையில் எம்.ஜி.ஆர் இயக்கி நடித்த ‘நாடோடி மன்னன்’ படத்திற்கு தங்கவாள் பரிசளிப்பு விழா. விழாவுக்கான ஏற்பாட்டைச் செய்தவர் அன்றைய தி.மு.க. மாவட்டச் செயலாளராக இருந்தவரான மதுரை எஸ்.முத்து.

மதுரை ரயில் நிலையத்திலிருந்து நான்கு குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் பெரும் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார் எம்.ஜி.ஆர்.

மூன்றடி நீளமுள்ள தங்கவாளை எம்.ஜி.ஆருக்கு மேடையில் அளித்துப் பாராட்டியவர் நாவலர் நெடுஞ்செழியன்.

விழாவில் பேசிய இலட்சிய நடிகரான எஸ்.எஸ்.ராஜேந்திரன், “இந்தத் தங்க வாள் அண்ணனுக்கு மட்டும் அளித்த பரிசாகாது. திரையுலக நடிகர்கள் அத்துணை பேருக்கும் அளித்த பரிசாகும்.

திரைப்பட நடிகர் ஒருவருக்கு தங்கவாள் அளிப்பது வரலாற்றிலேயே இது தான் முதல் தடவை.

நாட்டைப் பற்றியும், மொழியைப் பற்றியுமே கவலைப்பட்டு, நாட்டிற்காகத் தன்னுடைய வாழ்நாளின் பெரும் பகுதியைச் செலவிட்ட நடிகருக்குத் தங்கவாள் பரிசளிப்பு மட்டும் போதாது என்று கருதுகிறேன்” என்றார்.

தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகரான டி.எஸ். துரைராஜ் விழாவில் பேசுகிறபோது சொன்னார். ‘நாடோடி மன்னன்’ போல் முன்னாளைய அரசர்கள் ஆட்சி செய்திருந்தால் அவர்கள் தங்கள் இராஜ்யங்களை இழந்திருக்க மாட்டார்கள்.

முன்பு கலைவாணர் என்.எஸ்.கே அவர்கள் “நாட்டுக்குச் சேவை செய்ய நாகரிகக் கோமாளி வந்தானய்யா” எனப் பாடி வந்தார்.
இப்போது எம்.ஜி.ஆர் அவர்கள் “நாட்டுக்குச் சேவை செய்ய நாடோடி மன்னன் வந்தாரய்யா” என வந்திருக்கிறார்.

‘எம்’ என்பது ‘மேன்’ (Man) என்ற ஆங்கிலச் சொல்லின் முதல் எழுத்து; தங்கத்திற்கு (Gold) ஆங்கிலத்தில் முதல் எழுத்து ‘ஜி’. ராமச்சந்திரன் என்ற அவருடைய பெயரின் முதலெழுத்து ‘ஆர்’ என்பதாகும்.

‘தங்கமான மனிதர் ராமச்சந்திரன்’ – என்பது தான் ‘எம்.ஜி.ஆர்’ என்பதற்குப் பொருள்.

அவர் நீடுவாழ்ந்து, நாடு செழிக்க, நாம் செழிக்க உதவுவார் என வாழ்த்துகிறேன்”

Comments (0)
Add Comment