திரை உலகைவிட்டு விலகி அரைநூற்றாண்டு ஆகப்போகிறது. மண்ணுலகை விட்டு மறைந்து 36 ஆண்டுகளுக்கு மேல் உருண்டோடி விட்டன.
ஆனாலும் கூட, எம்.ஜி.ஆர். என்ற ஆளுமையின் சுவாரஸ்யம் தமிழ்ச் சூழலில் இன்னும் குறைந்து விடவில்லை.
அது தீராதநதியாக அவ்வப்போது புதுப்புது வண்ணம் கொண்டு, தமிழ் மனப்பரப்பில் நுங்கும் நுரையுமாக கொப்பளித்து பெருக்கெடுத்தபடியேதான் இருக்கிறது.
அவரைப் பற்றிய கதையாடல்களும், கருத்தாடல்களும் ஆதரவாளர்கள் மட்டுமின்றி, எதிர் முகாம்களிலும் கூட இன்னும் சூடு தணியாமலே தொடர்ந்து வருகிறது.
எம்.ஜிஆரின் பெரும் செல்வாக்குக்கு முக்கியமான காரணம், அவரது தோற்றம்தான். எம்.ஜி.ஆர். இயல்பிலேயே சிவந்த நிறம் என்பதையும் தாண்டி பளிச்சிடும் சருமத்தைக் கொண்டவர். ரோஸ் வண்ணம் என்று அவரது தோலின் நிறத்தை வர்ணிப்பார்கள்.
ஆனால், எம்.ஜி.ஆரின் தோற்றப் பொலிவு என்பது அது மட்டுமே அல்ல. இயல்பு வாழ்க்கையில் ஒருகாலக்கட்டம் வரை அவர் பாகவதர் கிராப் வைத்திருந்தார்.
பின்னாட்களில், காஷ்மீர் குல்லாயும், கருப்புக் கண்ணாடியும் அணியத் தொடங்கினார்.
இவற்றையெல்லாம் விட கோடிக்கணக்கான மக்களைக் காந்தம் போல் கவர்ந்திழுத்துக் கட்டிப் போட்டது அவரது மந்திரப் புன்னகைதான்.
திரைப்படங்களில் அவர் தோன்றும்போது, அந்த மந்திரப் புன்னகைக்குக் கூடுதல் பொலிவைத் தரக்கூடிய மெல்லிய அரும்பு மீசையுடன் அவரது முகம் ஜொலிப்பதைக் காண முடியும்.
அவரது சிகையலங்காரம் சீசன்களுக்கு தகுந்தாற் போல அவ்வப்போது மாற்றம் கொண்டாலும், மீசை மட்டும் கடைசி வரை அதே அரும்பு மீசைதான்.
வழக்கமான பாத்திரத்தை மறைத்து மாறுவேடத்தில் வருவது போன்ற காட்சிகளில் மட்டுமே கனத்த மீசையுடனோ, அல்லது மீசை இல்லாமலோ வருவார் எம்.ஜி.ஆர்.
தொடக்க காலங்களில் வரலாற்றுக் கதைக் களங்களைக் கொண்ட படங்கள், இடைக்காலத்தில் வேறுபட்ட நவீன கதைக் களங்கள், இறுதியாக நடித்த மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என எத்தனையோ பாத்திரங்களில் அவர் நடித்திருந்தாலும், மீசையின் அமைப்பு மாறியதே இல்லை.
அதேபோல, நிற்பது, நடப்பது, வாள் சுழற்றுவது என எல்லாவற்றிலும் தனக்கெனத் தனி பாணியை வகுத்துக் கொண்டு, அதில் வெற்றிக் கொடி நாட்டிய எம்.ஜி.ஆர், அவற்றைத் தனக்கான வரலாற்று முத்திரையாகவும் பதித்துச் சென்றுள்ளார்.
அவரது சிலம்பச்சண்டை, கத்திச் சண்டையைக் காண்பதற்காகவே பெரும் எண்ணிக்கையிலான ரசிகர்கள் கூடிய காலம் அது.
படிகளில் பின்னகவர்ந்து ஏறிய படியே, எதிரியின் வாளைப் பந்தாடும் அவரது லாவகத்தைப் பார்த்து லட்சக்கணக்கான ரசிகர்கள் மெய்மறந்து கிறங்கிக் கிடந்தனர்.
எம்.ஜி.ஆரது துடிப்பான நடிப்பும், துள்ளல் மிக்க சண்டைத் திறனும், யாராலும் எளிதில் பின்பற்றி விட முடியாத தனித்துவம் கொண்டவை.
எம்ஜி.ஆர் ஸ்டைல் எனக் கூறி, இன்றைய தலைமுறை நடிகர்கள் வரை பலரும் அவரைப் போல் நடித்துக் காண்பித்து கை தட்டல் வாங்கி உள்ளுக்குள் உவகை கொள்ளும் போக்கு தற்போதும் தொடர்கிறது.
எல்லா நடிகர்களுக்கும் முன்மாதிரியாக, ரோல் மாடலாக, மானசீக குருவாக இன்றும் திகழ்பவர் மக்கள் திலகம் எம்ஜிஆர்.
அவருக்கும் ஒருவர் ரோல் மாடலாக, மானசீக குருவாக இருந்துள்ளார் என்பது இன்றைய தலைமுறைக்கு வியப்பூட்டும் தகவலாக இருக்கலாம்.
யார் அவர்?
1950-களில் முன்னணி ஹீரோவாக ஹாலிவுட்டைக் கலக்கி வந்த அட்வெஞ்சர் நாயகன் எனப் புகழப்படும் எரோல் ஃப்ளின்தான் (Errol Flynn) எம்.ஜி.ஆர். என்ற மாபெரும் ஆளுமையால் ரசிக்கப்பட்ட அந்த மற்றொரு பேராளுமை.
எரோல் ஃப்ளின்னின் நடிப்புப் பாணியை எம்.ஜி.ஆர் பெருமளவு பின்பற்றி இருக்கிறார் என்பது, அவருக்கு நெருக்கமானவர்கள் சிலர் மட்டுமே அறிந்த செய்தியாக அப்போது இருந்திருக்கிறது.
எம்.ஜி.ஆர் மறைவின் போதுதான், திரையுலகைச் சேர்ந்த பல மூத்த கலைஞர்களும், இயக்குநர்களும் எரோல் ஃப்ளின் என்ற ஆலிவுட் நடிகரை எம்.ஜி.ஆர் வெகுவாக ரசித்ததுடன், அவரது நடிப்புப் பாணியை பின்பற்றவும் செய்தார் என்ற தகவலை வெளிப்படுத்தினர்.
திரையுலகம் குறித்து வெகு மக்களின் மனப்பரப்பில் பதிந்திருந்த புதிர்த் தன்மை நீங்கி விட்டால், அதன் மீதான ஈர்ப்பும், சுவாரஸ்யமும் போய்விடும் என்பதில், அக்கால கலைஞர்களும், படைப்பாளிகளும் அழுத்தமான நம்பிக்கைக் கொண்டிருந்தனர்.
அதனாலேயே, ரகசியம், கிசுகிசு என்ற பெயர்களில் பேசப்படும் பல விஷயங்களை அவர்கள் அனுமதித்தும் உள்ளனர். இத்தகையச் சூழலுக்கு எம்.ஜி.ஆரும் விதிவிலக்காக இருந்திருக்க முடியாதுதானே!
அதனால் தானோ என்னவோ, தாம் பெரிதும் ரசித்த எரோல் ஃப்ளின் குறித்து எம்.ஜி.ஆர் பொதுவெளியில் அதிகம் வெளிப்படுத்திக் கொள்வதைத் தவிர்த்து வந்திருக்கிறார்.
குறிப்பாக வாள் சுழற்றுவதில் வல்லவரான எம்.ஜி.ஆர்., அதற்கான ஸ்டெப்பிங் ஸ்டைல், சுழற்றும் லாவகம், புன்னகைமாறாத முகத்துடனேயே எதிரியுடன் மோதுவது போன்ற பெரும்பான்மையான உத்திகளை, எரோல் ஃப்ளின்னைப் போலவே கையாண்டிருப்பதை அறிய முடிகிறது.
எரோல் ஃப்ளினின் புகைப்படங்கள் மற்றும் பழைய திரைப்படங்கள் ஆகியவற்றைப் பார்க்கும் போது இதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
காதல் காட்சி, அரசவையின் நடுவே ஆவேசமாக பேசுதல் என அனைத்திலும் எம்.ஜி.ஆரின் உடல்மொழியை, எரோல் ஃப்ளின்னிடம் அப்படியே பார்க்க முடிகிறது.
தமிழக மக்களின் மன உலகை, அழியாத சித்திரமாய் இன்றுவரை ஆக்கிரமித்திருக்கும் எம்.ஜி.ஆருக்கே முன் மாதிரியாக இருந்த, எரோல் ஃப்ளின் என்ற அந்த மாபெரும் கலைஞனைப் பற்றி அறிந்து கொள்ள, எவருக்கும் ஆவல் ஏற்படுவது இயல்புதானே!
யார் இந்த எரோல் ஃப்ளின்?
தொடரும்….
– மனோலயன்