மன்சூர் அலிகானை எச்சரித்த நீதிமன்றம்!

சினிமா நமக்கெல்லாம் பொழுது போக்கு.

ஆனால், நடிகர் மன்சூர் அலிகானுக்கு, வம்பை விலை கொடுத்து வாங்குவதே பொழுது போக்காக உள்ளது.

அண்மையில் அவர், நடிகை திரிஷா குறித்து அவதூறான கருத்து கூறி இருந்தார். இதற்கு தனது வலைதளப் பக்கத்தில் திரிஷா எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

மன்சூர் அலிகானுக்கு தென் இந்திய நடிகர் சங்கமும் கண்டனம் தெரிவித்தது.

மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டது.

அவர் மீது சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் காவல் துறையினர் வழக்குப் பதிந்தனர்.

நிலைமை கை மீறிப்போனதால் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் ஆஜராகி மன்சூர் அலிகான் விளக்கம் அளித்தார்.

மேலும், ‘எனது சக திரைநாயகி திரிஷாவே, என்னை மன்னித்துவிடு’ என்று மன்சூர் அலிகான் அறிக்கை ஒன்றும் வெளியிட்டார்.

இதற்கு பதில் அளித்த திரிஷா ‘தவறு செய்வது மனிதம்; மன்னிப்பது தெய்வ குணம்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், முழு வீடியோவை பார்க்காமல் தனது நற்பெயருக்கு களங்கம் கற்பித்ததாக குற்றம்சாட்டி, திரிஷா, குஷ்பு, சிரஞ்சீவி ஆகிய மூவர் மீதும் சென்னை உயர்நீதி மன்றத்தில் மன்சூர் வழக்கு தொடர்ந்தார்.

“மூவரும் தனக்கு தலா ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு வழங்க வேண்டும்’ என மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என். சதீஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து பரபரப்பு தீர்ப்பு அளித்தார்.

நீதிபதி தீர்ப்பின் விவரம்:

“மன்சூர் அலிகான் கூறிய சர்ச்சை கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே, மூவரும் ( திரிஷா, குஷ்பு, சிரஞ்சீவி) வலைதளத்தில் தங்கள் கருத்தை பதிவு செய்தனர்.

இதனை அவதூறாக கருத முடியாது. பெண்களுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும்போது அதற்கு அனைவரும் எதிர்ப்பு தெரிவிப்பது மனித இயல்பு.

இந்த பிரச்சினையில் மன்சூர் அலிகான் மன்னிப்பும் கேட்டுள்ளார். சட்டப்படி மூன்று பேருக்கும் எதிராக ஒரே நேரத்தில் வழக்கு தொடர முடியாது.

நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் நோக்கத்திலும், விளம்பர நோக்கத்துக்காகவும் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.’ என கண்டித்த நீதிபதி, நடிகர் மன்சூர் அலிகான் மனுவை தள்ளுபடி செய்ததோடு, அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

-பாப்பாங்குளம் பாரதி.

Comments (0)
Add Comment