மக்கள் ஆதரவுதான் எம்.ஜி.ஆரின் மகத்தான பரிசு!

நடிகர் எம்.கே.ராதா
‘ராஜகுமாரி’ படத்தின் மூலம் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக உயர்ந்ததில் மிகவும் மகிழ்ச்சியடைந்தவர்களில் ஒருவர் பழம்பெரும் நடிகர் எம்.கே.ராதா.
 
‘சந்திரலேகா’, ‘அபூர்வ சகோதரர்கள்’ போன்ற படங்களில் நடித்தவர். ‘பாசவலை’ படத்தில் இசைச் சித்தர் சிதம்பரம் ஜெயராமனின் குரலில் ‘அன்பினாலே உண்டாகும் இன்ப நிலை …’ பாடலையும் எம்.கே.ராதாவின் நடிப்பையும் யாரும் மறக்க முடியாது.
 
எம்.கே.ராதாவின் தந்தை எம்.கந்தசாமி முதலியார். சென்னை ஒற்றைவாடை தியேட்டரில் ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியின் நாடகங்கள் நடந்தன. அதன் உரிமையாளர் சச்சிதானந்தம் பிள்ளை. நாடகங்களை எழுதி இயக்கியவர் கந்தசாமி முதலியார்.
 
இந்த நாடகக் கம்பெனியில் சிறுவயதில் எம்.ஜி.ஆரும் அவரது அண்ணன் சக்ரபாணியும் சேர்ந்தனர். எம்.கே.ராதாவைப் போலவே எம்.ஜி.ஆரையும் சக்ரபாணியையும் தனது பிள்ளைகளாகக் கருதியவர் கந்தசாமி முதலியார். அதே நேரம் கண்டிப்பானவர்.
 
ஒற்றைவாடை தியேட்டரில் 6 மாதங்களுக்கு மேல் மற்ற கம்பெனிகளின் நாடகங்கள் நடக்காத நிலையில், ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியினர் மூன்றரை ஆண்டுகள் தொடர்ந்து நாடகங்கள் நடத்தினர்.
 
அந்தக் கம்பெனியில் எம்.கே.ராதாவும் நடித்துக் கொண்டிருந்தார். எம்.ஜி.ஆர். மீதும் அவரது அண்ணன் சக்ரபாணி மீதும் எம்.கே.ராதாவுக்கு கூடுதல் அன்பு உண்டு. மூன்று பேரும் ஒன்றாகத்தான் இருப்பார்கள்.
 
தனியாகவோ தந்தையுடனோ எம்.கே.ராதா வெளியே சென்றால் தின்பண்டங்கள் வாங்கி வைத்திருந்து இருவருக்கும் ரகசியமாக கொடுத்து சாப்பிடச் சொல்வார்.
 
‘‘எதிர்காலத்தில் பெரிய நடிகனாக வருவாய்” என்று எம்.ஜி.ஆரை ஊக்கப்படுத்துவார்.
 
சக்ரபாணியைப் போலவே மேலும் மூன்று பேரை தனது உடன்பிறவா அண்ணன்களாக கருதியதை எம்.ஜி.ஆரே இப்படி குறிப்பிடுகிறார்.
 
‘‘என்னைப் பெற்ற அன்னை பெரும் செல்வமாக ஒரு அண்ணனைத் தந்தார். கலைத் தாய் எனக்கு இரண்டு அண்ணன்களைத் தந்தார். கலைவாணரும் எம்.கே.ராதா அண்ணனும்தான் அந்த இருவர்.
 
அறிவுச் செல்வமான பேரறிஞர் அண்ணாவை எனக்கு பெரும் சொத்தாக, வழிகாட்டியாக, இணையற்ற தலைவராக எல்லாமுமாக ஒரு அண்ணனை அரசியல் எனக்குத் தந்தது’’.
 
அந்த அளவுக்கு எம்.கே.ராதாவை எம்.ஜி.ஆர். தனது அண்ணனாக மதித்தார். தனது தம்பியான எம்.ஜி.ஆர். பற்றி எம்.கே.ராதா, ‘‘தம்பி நடித்த வேடங்களில் அவரைப் போல யாரும் நடிக்கவே முடியாது. அவருடைய பாணியே தனி.
 
அதற்கு கிடைத்த மகத்தான பரிசுதான் மக்கள் ஆதரவு. அவர் நடித்த படங்கள் யாவுமே என்றைக்கும் வெற்றிப் படங்கள்தான். சண்டைக் காட்சிகளைப் பற்றி பேசினால் அந்த மூன்று எழுத்துக்கள்தான் (எம்.ஜி.ஆர்.) முன்னால் வரும்’’ என்று பாராட்டியுள்ளார்.
 
நன்றி: தி இந்து
Comments (0)
Add Comment