அந்தப் பேரன்பின் குரல் அப்பாவுடையது!

கவிஞர் பழநிபாரதி நெகிழ்ச்சி

2025, மார்ச் 2, 3 தேதிகள் என் வாழ்வில் முக்கியமானவை. மகள் இலாவண்யாவும் ஆபிரகாம் மேத்யூவும் கைத்தலம் பற்றிய நாள்.

இவர்களின் இல்லற இணையேற்பு விழாவை நிகழ்த்தித் தந்த நான்கு பேர். பேராசியர் சுப. வீரபாண்டியன், ஓவியர் டிராட்ஸ்கி மருது, பாவலர் அறிவுமதி, சொலல்வல்லான் பாரதி கிருஷ்ணகுமார்.

வழிநெடுக இந்த நான்கு அண்ணன்களும் எனக்கு ஏதோ ஒரு வகையில் வாழ்வின் நெறியைக் கற்றுத் தந்தவர்கள்.

அய்யா காரைக்குடி இராம.சுப்பையாவும் என் தந்தை சாமி பழனியப்பனும் திராவிடக் கொள்கைகளைக் கைப்பற்றி நடந்தவர்கள். அண்ணன் சுப.வீரபாண்டியனும் நானும் அதே வழியில் நடக்கும் அவர்களின் பிள்ளைகள்.

அண்ணன் மருது நவீன ஓவியர் மட்டுமன்று; ஒரு நல்ல சமூக மனிதர். தமிழ் அழகியல் என்கிற இனவரைவியலோடு பயணிப்பவை அவரது கோடுகள்.

அவரது வண்ணங்களின் குழைவு அண்ணியின் அன்பினாலும் ஆனது.

எனது ‘உன் மீதமர்ந்த பறவை’ என்கிற காதல் கவிதைத் தொகுதியை அண்ணன் டிராட்ஸ்கி மருதுவுக்கும் அண்ணி இரத்னம் இருவருக்கும்தான் அர்ப்பணித்திருக்கிறேன்.

அண்ணன் அறிவுமதிதான் பழ.பாரதி என்கிற என் பெயரை பழநிபாரதியாக மாற்றியவர்.

பதின்பருவத்திலிருந்து அவரைத் தொடர்கிறவன் நான். கவிதையே வாழ்க்கையாய் வாழ்க்கையே கவிதையாய் வாழ்கிறவர்.

என்னைப் போல பல தம்பிகளைச் சிறகடிக்க வைத்து அந்த அழகிய உயரத்தை அண்ணாந்து பார்த்து இரசித்துக் கொண்டிருப்பவர்.

அண்ணன் பாரதி கிருஷ்ணகுமார், என் கவிதைகளைத் தாலாட்டும் சொற்களால் என்னைப் பார்க்கும் போதெல்லாம் ஒரு காவியம் இயற்றத் தூண்டிக்கொண்டே இருக்கிறவர்.

இந்த நான்கு அண்ணன்களும் இலாவண்யாவின் இல்லற இணையேற்பு விழாவில் நிகழ்த்திய பொழிவுகள் மண்ணையும் மனதையும் அடியீரம் காயாமல் அணைத்துக்கொண்டிருக்கின்றன.

அண்ணன் காசி. முத்துமாணிக்கம், அண்ணன் கே.வி.மணி, இசையாளர் சிற்பி, தம்பி தமிழ்அலை இசாக், தமிழ்வெளி கலாபன் இவர்கள்தாம் மணவிழாவை ஒருங்கிணைத்துச் சிறப்புற நடத்தியவர்கள்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தந்தனுப்பிய வாழ்த்துக் கடிதத்தோடும் பூங்கொத்துகளோடும் இலக்கியம், பத்திரிகை, சினிமா, முகநூல் எனத் துறைதோறும் நான் பழகிய ஆளுமைகள், நண்பர்களின் அன்பு வாழ்த்துகளால் மழையில் நனைந்த வனமாகியிருந்தது அரங்கம்.

நன்றி என்ற ஒரு சொல்லால் நகர்ந்துவிட முடியாது. அனைவரையும் வணங்குகிறேன். அரங்கில் நான் தேடிய ஒரு முகம் காணக் கிடைக்கவில்லை.

ஆனால் வான் ஒலியாக அந்த முகத்தையும் குரலையும் மெய்நிகராக நான் கண்டு செவியுணர்ந்தேன். அந்தப் பேரன்பின் குரல் என் அப்பாவுடையது.

Comments (0)
Add Comment