அடிமேல் அடி வாங்கிய ‘லைகா’ நிறுவனம்!

அஜித் படமும் கவிழ்ந்ததால் அதிர்ச்சி

ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் மிகப்பெரும் ஜாம்பவான்கள் சினிமாவில் இருந்தார்கள்.

ஜெமினி, விஜய வாகினி, ஏ.வி.எம்., சத்யா மூவீஸ், சிவாஜி பிலிம்ஸ், தேவர் பிலிம்ஸ் போன்றவை குறிப்பிடத்தகுந்தவை.

எம்.ஜி.ஆர்., சிவாஜி, என்.டி.ஆர்., போன்றவர்களை வைத்து தென்னிந்திய மொழிகளில் படம் தயாரித்த இவர்கள், இந்தியிலும் வெற்றிகளைக் குவித்தனர்.

ஹீரோக்கள் சம்பளம் எகிறி, அவர்கள் ஆதிக்கம் தலைதூக்கிய பின், இந்த ஜாம்பவாங்கள், தங்கள் நிறுவனங்களை மூடி விட்டனர். சரியான தலைமை இல்லாதது, வாரிசு மோதலும் சில கம்பெனிகள், காணாமல் போனதற்கான காரணங்கள்.

இப்போது சன் பிக்சர்ஸ், லைகா, ஏஜிஎஸ் உள்ளிட்ட நாலைந்து நிறுவனங்களே தொடர்ச்சியாகப் படம் தயாரிக்கிறார்கள். அவர்களும் பெரிய இயக்குநர்கள், உச்ச நட்சத்திரங்கள் பங்களிப்பில் பெரிய பட்ஜெட் படங்களை மட்டுமே எடுக்கிறார்கள்.

கத்தி, செக்கச் சிவந்த வானம், 2.0 ம் வட சென்னை உள்ளிட்ட வெற்றி படங்களைக்  கொடுத்த, ‘பான் இந்தியா’ சினிமா கம்பெனி, ‘லைகா’ .

மணிரத்னம் இயக்கத்தில் உருவான ‘பொன்னியின் செல்வன்’ இரண்டு பாகங்களையும் இந்த நிறுவனம் தயாரித்தது. அதில் பெரிய அளவில் லாபம் எடுத்தார்கள். அதன் பின்னர் லைகா நிறுவனம் தயாரித்த அத்தனை சினிமாக்களும் சொல்லி வைத்த மாதிரி ‘பிளாப்’.

‘லைகா’வின் தொடர் தோல்விகளுக்கு பிள்ளையார் சுழி போட்ட படம் வடிவேலு, நாயகனாக நடித்த ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’. அவர் ஷங்கரின் ‘இம்சை அரசன்’ இரண்டாம் பாகத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு, கணிசமான ‘அட்வான்ஸ்’ வாங்கி இருந்தார். ஆனால் கால்ஷீட் சொதப்பல் செய்தார்.

பொறுத்துப் பார்த்த ஷங்கர், ஒரு கட்டத்தில் தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட வேண்டியதாகி விட்டது. தயாரிப்பாளர் சங்கம் ‘ரெட் கார்டு’ போட்டதால், 10 ஆண்டுகளாக வீட்டில் முடங்கி கிடந்த வடிவேலுவை மீண்டும் ‘லைகா’ தான் மீட்டது.

வடிவேலு மீது புகார் சொன்ன இயக்குநர் ஷங்கருக்கு 10 கோடி ரூபாய் ‘செட்டில்’ செய்து. நாய் சேகரில் நடிக்க வைத்தது, அந்த நிறுவனம். படம் படுதோல்வி. சந்திரமுகி – 2, லால் சலாம், இந்தியன்-2 என லைகா எடுத்த அத்தனை படங்களும் வரிசையாக கவிழ்ந்தன.

கமலுக்கான மேக்கப் விவகாரம், படப்பிடிப்பில் விபத்து, கொரோனா, என பல பிரச்சினைகளில் சிக்கி பல ஆண்டுகள் தயாரிப்பில் இருந்த ‘இந்தியன்-2’ படத்தின் பட்ஜெட்- 225 கோடி ரூபாய். வருவாயோ – ரூ. 150 கோடி.

இந்த நிறுவனத்தின் கடைசி நம்பிக்கையாக இருந்த இரண்டு படங்கள் – ரஜினியின் ‘வேட்டையன்’. அஜித்தின் ‘விடாமுயற்சி’.

கடைசி நம்பிக்கையும் பொய்த்துப் போயிற்று. ரஜினி படமும் போகவில்லை. அஜித் படமும் தேறவில்லை. பல தியேட்டர்களிலிருந்து இரண்டாவது வாரமே தூக்க வேண்டிய நிலைக்கு ஆளானது விடாமுயற்சி.

இப்போது லைகா நிறுவனம் கைவசம் ‘இந்தியன்-3’ படம் உள்ளது. ‘கிராபிக்ஸ்’ உள்ளிட்ட வேலைகளுக்கு சில கோடிகளை செலவளித்தால் மட்டுமே, அந்தப் படத்தை முடிக்க முடியும்.

இந்தியன்-2 கையைக் கடித்துள்ள, நிலையில், மூன்றாம் பாகத்தை ரிலீஸ் செய்ய லைகா ஆர்வம் காட்டுமா? எனத் தெரியவில்லை.

‘லைகா’ நிறுவனர் சுபாஸ்கரன், லண்டனில் குடிபுகுந்துள்ள இலங்கைத் தமிழர். அவர் செய்யும் பல தொழில்களில் சினிமாவும் ஒன்று. கோடிகள் அவருக்கு பொருட்டல்ல. ஆனாலும் தொடர் நஷ்டங்களைச் சந்தித்து வரும் தொழிலில், சுபாஸ்கரன் மீண்டும் முதலீடு செய்வாரா என்பது அவருக்கே வெளிச்சம்.

– பாப்பாங்குளம் பாரதி.

Comments (0)
Add Comment