கட்சி தொடங்க ஆயத்தமாகும் விஜய்!

‘தளபதி’ விஜய் விரைவில் அரசியலுக்கு வர இருப்பதாக கூறப்படும் நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தினர் தொடர்ச்சியாக பல்வேறு நலத்திட்டப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு விஜய் பரிசு வழங்கினார்.

பல இடங்களில் அவரது ரசிகர் மன்றத்தினர் நூல் நிலையங்களை அமைத்துள்ளனர்.

அண்மையில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு நேரில் சென்று, நிவாரணப் பொருட்கள் வழங்கினார் விஜய்.

அவ்வப்போது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில் சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுக்குழு உறுப்பினர்களுடன் நேற்று விஜய் திடீர் ஆலோசனை நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில் கட்சி தொடங்குவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

களப்பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும், பூத் கமிட்டியை வலுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட அறிவுறுத்தல்களை விஜய் வழங்கினார்.

தேர்தல், கூட்டணி தொடர்பான முடிவுகள் எடுக்க விஜய்க்கு அதிகாரம் அளித்து பொதுக்குழு உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்தனர்.

இந்தக் கூட்டம் குறித்து விஜய் மக்கள் இயக்கத்தினர் தெரிவித்த தகவல்:

“அடுத்த மாதம் முதல் வாரத்தில் கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய ‘தளபதி’க்கு ஒப்புதல் அளித்துள்ளோம்.

தமிழக முன்னேற்ற கழகம், தமிழக ஜனநாயக கழகம் உள்ளிட்ட பெயர்களைக் கூறினோம்.

இந்தப் பெயர்களில் இருந்து ஒரு பெயர் கட்சிக்கு வைக்கப்படும்.

‘வரும் மக்களவைத் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை’ என விஜய் தெளிவுபடுத்திவிட்டார்.

2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலே அவரது இலக்கு” என அவர்கள் கூறினர்.

கூட்டத்தில், விஜய் மக்கள் இயக்கப் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டார்.

– பாப்பாங்குளம் பாரதி.

Comments (0)
Add Comment