L2empuraan – அதிரடி காட்டவரும் ‘லூசிஃபர்’ இரண்டாம் பாகம்!

ஒரு இசையமைப்பாளர் திரைப்படம் இயக்க வந்தால் இசைக்கு முக்கியத்துவம் அளிப்பார்.

ஒரு விநியோகஸ்தர் அல்லது தயாரிப்பாளர் படம் இயக்கினால், குறைந்த செலவில் பிரமாண்டமான தரம் திரையில் தெரிய வேண்டும் என்று விரும்புவார்.

ஒரு படத்தொகுப்பாளர் உருவாக்கும் படம் ‘திரைக்கதை ட்ரீட்மெண்டில்’ எந்த வகையிலும் குற்றம் குறை இல்லாதவாறு இருக்கும்.

திரைக்கதையாசிரியர் இயக்கும் படங்களில் கதாபாத்திரங்களும் வசனங்களும் சில காட்சிகளும் முக்கியத்துவம் பெறும்.

நடிகை அல்லது இதர துறைகளில் இருக்கும் பெண்கள் படங்கள் இயக்கும்போது ‘பெண்மைக்கு’ முக்கியத்துவம் தரும் கதைகளைத் திரையில் காணலாம். இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

அந்த வரிசையில், ஒரு நாயக நடிகர் இயக்குகிற திரைப்படங்களில் மையமாக விளங்கும் நாயக பாத்திரம் அழகாக, ஹீரோயிசம் மிக்கதாக, ஆக்‌ஷனில் கலக்குவதாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.

பெரும்பாலும் தனக்கான ‘மார்க்கெட்’டை உருவாக்கும் வகையிலேயே சில நாயகர்கள் தங்களை நாயகனாக முன்னிறுத்திப் படம் இயக்குவார்கள்.

அந்த வரிசையில் நிற்காமல், வேறு நடிகர்களை நாயகர்களாக முன்வைத்துப் படம் இயக்குபவர்கள் இந்தியாவில் மிகக்குறைவு.

அவர்களில் ஒருவராகத் திகழ்பவர் நடிகர் பிருத்விராஜ். மலையாளத்தின் முன்னணி நாயகனாக இவர், மோகன்லாலைக் கொண்டு ‘லூசிஃபர்’, ‘ப்ரோ டாடி’ எனும் இரண்டு திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். மூன்றாவதாக அவர் தந்திருக்கும் திரைப்படம் ‘எல்2எம்புரான்’.

அவர் இயக்கிய ‘லூசிஃபர்’ படத்தின் இரண்டாம் பாகம் இது. இதன் ட்ரெய்லர் தற்போது வெளியாகியிருக்கிறது.

யார் இந்த ஸ்டீபன் நெடும்பள்ளி!

கேரளாவில் முதலமைச்சர் பி.கே.ராம்தாஸ் திடீரென்று மருத்துவமனையில் மரணமடைய, ஆளும் கட்சியிலும் மாநிலத்திலும் சில குழப்பங்கள் முளைக்கின்றன.

அதனால், மறைந்த முதலமைச்சரின் மகனும் மகளும் ஆபத்துகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. அப்போது, அவர்களைக் காப்பவராக விளங்குகிறார் எம்.எல்.ஏ. ஸ்டீபன் நெடும்பள்ளி.

அவருக்கு எதிராகச் சதிவலை பின்னிச் சிறையில் அடைக்கிறது ஒரு கும்பல். தன்னைக் காத்துக் கொள்வதோடு, தான் தந்தையாகப் போற்றும் ராம்தாஸ் குடும்பத்தினரை ஸ்டீபனும் அவரது ஆட்களும் காப்பாற்றினார்களா என்று சொன்னது ‘லூசிஃபர்’.

ஸ்டீபன் தான் உலகத்தையே ஆட்டிப்படைக்கும் ‘அண்டர்வேர்ல்ட் மாஃபியா’வின் தலைவன் என்று தெரிய வருவதுடன் அந்தப் படம் முடிவடைந்திருக்கும்.

முதல் பாகத்தில் இருக்கும் பல பிரச்சனைகள் இன்றும் தொடர்வதாகக் காட்டுகிறது ‘லூசிஃபர்’ இரண்டாம் பாகம் ட்ரெய்லர்.

அதோடு, ‘ஸ்டீபன் பின்னணி என்ன’, ‘அவரது கடந்த காலம் எப்படிப்பட்டது’ என்றும் சொல்கிறது.

உட்கட்சிக் குழப்பங்கள், அதற்குக் காரணமானவர்களின் கலகங்கள், எதிர்க்கட்சியினர் உடனான மோதல், வேறு திசைகளில் இருந்து பாயும் எதிர்ப்புகள், வெவ்வேறுவிதமான தீவிரவாத அமைப்புகளின் ஊடுருவல் சதி, இவற்றுக்கு நடுவே சட்டவிரோதக் கும்பல்களின் ஆக்கிரமிப்பு என்று பல பிரச்சனைகளைக் காட்டியிருக்கிறது ‘எம்புரான்’ ட்ரெய்லர்.

அவற்றுக்கு நடுவே, தான் யார் என்பதை அடையாளம் காட்டும்விதமாக ஸ்டீபன் விஸ்வரூபமெடுப்பதையும், அவரது ஆட்கள் அதற்கான காரண காரியங்களை மேற்கொள்வதையும் காட்டுகிறது ட்ரெய்லர்.

எகிறும் எதிர்பார்ப்பு!

மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, இந்தியிலும் வெளியாகிறது ‘எம்புரான்’.

பொதுவாக பான் இந்தியா படங்களாக முன்வைக்கப்படும் திரைப்படங்களில் பல ‘இந்துத்துவா’வை முன்மொழிபவை அல்லது குறிப்பிட்ட அளவில் திரைக்கதையில் பிரதிபலிப்பவை.

‘எம்புரான்’னிலும் அது போன்ற சில அடையாளங்கள் உண்டு என்றபோதும், அது எந்தளவுக்குத் திரையில் வெளிப்பட்டது என்று தெரியவில்லை.

மோகன்லாலின் நெருங்கிய நண்பரான ஆண்டனி பெரும்பாவூர் லைக்கா நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிற படமாகவே ‘எம்புரான்’ முதலில் முன்னிறுத்தப்பட்டது.

இடையே, சில கொடுக்கல் வாங்கல் பிரச்சனை காரணமாக மார்ச் மாதம் இப்படம் வெளியாகாது என்றும் சொல்லப்பட்டது.

இப்போது பிரச்சனைகள் அனைத்தும் சரி செய்யப்பட்டு வெளியீட்டுக்குத் தயாராக இருப்பதாகச் சொல்லியிருக்கிறது படக்குழு.

மலையாளத்திலும் தமிழிலும் இப்படத்தைக் கோகுலம் கோபாலன் மூவிஸ் நிறுவனம் வெளியிடுவதாகச் சொல்லப்படுகிறது.

மிகப்பெரிய பொருட்செலவில், ஹீரோயிசத்தைக் கொண்டாடுகிற திரைப்படங்களுக்கு எப்போதுமே நல்லதொரு வரவேற்பைத் தருவார்கள் ரசிகர்கள்.

‘த்ருஷ்யம்’, ‘புலி முருகன்’, ‘லூசிஃபர்’ மூலமாக இந்தியா முழுக்கத் தனக்கென தனித்த ரசிகர் வட்டத்தைப் பெற்றிருக்கிறார் நடிகர் மோகன்லால்.

அந்த வகையில், மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் ‘எம்புரான்’னும் பெரிய வரவேற்பைப் பெறும் என்று நம்பலாம்.

தீபக் தேவின் பின்னணி இசை, முரளி கோபியின் எழுத்தாக்கம், சுஜித் வாசுதேவின் ஒளிப்பதிவு, அகிலேஷ் மோகனின் படத்தொகுப்பு, மோகன்தாஸின் கலை வடிவமைப்பு என்று பல சிறப்பம்சங்கள் இதில் கலந்திருக்கின்றன.

ஸ்டண்ட் சில்வாவின் சண்டைக்காட்சி வடிவமைப்பு, திரையில் அதிரடி காட்டும் என்று நம்பலாம்.

சென்சாரில் ‘யுஏ’ சான்றிதழ் பெற்றிருக்கும் ‘எம்புரான்’ திரைப்படம், வரும் மார்ச் 27 அன்று உலகம் முழுக்க வெளியாகிறது.

சமகால அரசியல், சமுக நிகழ்வுகள், குற்றச் சம்பவங்கள், அவற்றின் பின்னணியில் அமைந்த ஒரு கமர்ஷியல் பட உள்ளடக்கம், அனைத்துக்கும் மேலே மோகன்லாலின் ஹீரோயிசத்தை தனித்துவமாகத் திரையில் பிருத்விராஜ் வடிவமைத்திருக்கும் விதம் என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கிறது இப்படம்.

டொவினோ தாமஸ், மஞ்சு வாரியர், சூரஜ் வெஞ்சாரமூடு, இந்திரஜித், அபிமன்யூ சிங், கிஷோர், சாய்குமார், பைஜு சந்தோஷ், பாசில், சச்சின் கடேகர், சானியா ஐயப்பன், நைலா உஷா, நந்து, மணிகுட்டன், ஷிவதா என்று மலையாளத் திரையுலகைச் சேர்ந்த பல கலைஞர்கள் இதில் நடித்திருக்கின்றனர்.

இவர்களுக்கான முக்கியத்துவம் ஓரிரு காட்சிகள் வெளிப்பட்டிருந்தாலும் போதும்; நம் நினைவில் கொள்கிற சில காட்சிகள் கிடைத்துவிடும்.

அனைத்துக்கும் மேலே, ‘பில்லா டைப் ‘மாஸ் மசாலா’ படங்களை, அதனை வேறுவிதமாக திரையில் காட்டும் படங்களை பார்த்து எத்தனை நாளாச்சு’ என்பவர்களை, வசீகரிக்கும் காட்சியாக்கத்துடன் நம்மைக் கவரத் தயாராக இருக்கிறது ‘எம்புரான்’.

சில மாதங்களாகத் தொடர்ந்து வெற்றிகளைத் தந்துவரும் மலையாளத் திரையுலகம், இப்படத்தின் வழியே ஒரு ‘திகட்டல்’ நிலையை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த அளவுக்கு மாபெரும் வெற்றியைச் சுவைக்கும் என்று எண்ண வைத்திருக்கிறது.

அது நிகழுமா என்ற எண்ணத்தை உருவாக்கியிருக்கிறது ‘எம்புரான்’?!

– மாபா

Comments (0)
Add Comment