மிர்ச்சி சிவா, ப்ரியா ஆனந்த் நடித்த ‘வணக்கம் சென்னை’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார் கிருத்திகா உதயநிதி.
இந்தப் படம் 2013 ஆம் ஆண்டு வெளியானது. முதல் படத்திலேயே கிருத்திகாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்தப் படத்தில் இடம் பெற்ற ‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்’ பாடல் பட்டித்தொட்டி எங்கும் ஒலித்தது.
5 ஆண்டுகள் கழித்து இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியை வைத்து “காளி” என்ற படத்தை இயக்கினார்.
வித்தியாசமாக எடுக்கப்பட்ட காளி திரைப்படம் பலரின் கவனத்தை ஈர்த்தது.
இதனைத் தொடர்ந்து, காளிதாஸ் ஜெயராம், தன்யா ரவிச்சந்திரன் நடிப்பில், கிருத்திகா இயக்கிய ‘பேப்பர் ராக்கெட்’ எனும் வெப் தொடரும் அவருக்கு பெயர் வாங்கி கொடுத்தது.
தற்போது கிருத்திகா இயக்கியுள்ள புதிய படத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் ஜோடியாக நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் யோகிபாபு, வினய், லால், ஜான் கெக்கன், லஷ்மி ராமகிருஷ்ணன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.
இந்தப் படத்துக்கு ‘காதலிக்க நேரமில்லை’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதே பெயரில் ஸ்ரீதர் இயக்கி 1964 ஆம் ஆண்டு வெளியான படம் மாபெரும் வெற்றி பெற்றது. இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.
கிருத்திகா இயக்கியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் பெரும் பகுதி படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. பாடல் காட்சிகள் மட்டுமே எடுக்கப்பட வேண்டும்.
அடுத்த ஆண்டு தமிழ்ப் புத்தாண்டில் இந்தப் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.
– பாப்பாங்குளம் பாரதி.