கிங்டம் – விஜய் தேவரகொண்டாவுக்கு வெற்றியா?

சில திரைப்படங்கள் ‘முதல் பார்வை’யிலேயே நமக்குள் குறிப்பிட்டதொரு எண்ணத்தைத் தோற்றுவிக்கும். அதன்பிறகு, அந்த நிலைப்பாட்டில் இருந்து மாறப் பகீரதப் பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கும்.

அவற்றில் சில, சிறப்பான உள்ளடக்கத்தால் நமது எண்ணம் தவறு என்று நிரூபிக்கும். சில படங்கள் நாம் கணிப்பு 200 சதவிகிதம் சரி என்று நினைக்க வைத்துவிடும்.

அனிருத் இசையமைப்பில், கௌதம் தின்னனுரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, பாக்யஸ்ரீ போர்சே, சத்யதேவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘கிங்டம்’ திரைப்படம் என்ன கணிப்பை முதல் பார்வையில் ஏற்படுத்தியது? அதற்கேற்ப அத்திரைப்படம் அமைந்திருக்கிறதா?

மிக முக்கியமாக, விஜய் தேவரகொண்டாவுக்கு பெயர் சொல்லும்படியான வெற்றியாக இது உள்ளதா?

‘கிங்டம்’ கதை!

கான்ஸ்டபிள் சூரி (விஜய் தேவரகொண்டா) ஒரு கோபக்கார இளைஞர். பால்யத்தில் மூத்த சகோதரர் சிவா பிரிந்து சென்றதால், அந்த வருத்தத்திலேயே இப்போதும் உழல்கிறார். அதன் காரணமாக, சூரியின் தாய் அவரோடு பேசுவதில்லை.

தாயைக் கொடுமைப்படுத்திய தந்தையைக் கொலை செய்துவிட்டுத் தப்பித்துச் சென்றவர் சிவா; அப்படித்தான் சூரியின் உறவினர்கள் கூறி வருகின்றனர்.

சிவா சென்றபின்னர் அவர்களது தாய் எவரோடும் சரிவரப் பேசுவதில்லை.

ஒருநாள் அருகிலுள்ள கமிஷனர் அலுவலகத்திற்குச் செல்லும் சூரி, அங்கிருக்கும் ‘ட்ராயிங் ஆர்ட்டிஸ்ட்’டிடம் சிவாவின் சிறு வயது புகைப்படத்தைக் கொடுத்து இன்றைய தோற்றத்தை வரைந்து தருமாறு கேட்கிறார்.

அப்போது, சரணடைந்த நக்சலைட் ஒருவரை என்கவுண்டர் போர்வையில் சுட்டுத் தள்ள ஒரு இன்ஸ்பெக்டர் திட்டமிடுவதை அறிகிறார்.

என் பேரன் எங்கே’ என்று கேட்ட அந்த நக்சலைட்டின் தாத்தாவை இன்ஸ்பெக்டர் அடித்துக் காயப்படுத்த, பதிலுக்கு அவரைத் தாக்குகிறார் சூரி. அந்த களேபரத்தின் இடையே, அந்த நக்சலைட் தப்பித்துச் செல்கிறார்.

அந்த சம்பவம் காவல் துறையில் புயலைக் கிளப்புகிறது. வழக்கு எதுவும் பதிவு செய்யப்படாததால், சூரியின் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கத் தயங்குகின்றனர் சில அதிகாரிகள்.

அது பற்றி விசாரிக்க வரும் கமிஷனருடன் ஒரு உளவுத்துறை அதிகாரியும் வருகிறார். சூரியின் தெளிவான பார்வையும் திட்டமிடலும் அவரைக் கவர்கிறது.

‘நான் சொல்ற வேலையைச் செய்றியா’ என்று ஒரு ‘அண்டர்கவர்’ ஆபரேஷனில் சூரியை ஈடுபடச் சொல்கிறார் அந்த அதிகாரி.

‘நான் ஏன் அதைச் செய்யணும். இங்கேயே கான்ஸ்டபிளா சௌக்கியமா இருக்கேன்’ என்று சூரி சொல்ல, ‘இந்த ஆபரேஷனை நடத்தப்போற இடத்துல தான் உன் அண்ணன் சிவா இருக்கிறான்’ என்கிறார் அந்த அதிகாரி.

அதனைக் கேட்டதும் சூரிக்குத் தலை சுற்றுகிறது. தனது பல ஆண்டு காலக் காத்திருப்பை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வாய்ப்பு. உடனே, ‘சரி’ என்கிறார்.

இலங்கையில் யாழ்ப்பாணம் அருகே இருக்கும் ஒரு தீவுப்பகுதிக்குச் செல்கிறார் சூரி.

1920களில் வெள்ளையர்களுக்கு எதிராகப் போராடிய விசாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மக்களில் சிலர் அங்கு இடம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். அவர்களோடு சிவாவும் இருக்கிறார். அவருக்குத் திருமணமாகி குழந்தை இருக்கிறது.

ஆயுதம் மற்றும் தங்கக் கடத்தலில் ஈடுபடும் தமிழர்கள் சிலருடன் இணைந்து சிவாவும் அந்த பழங்குடியின மக்களும் வேலை செய்து வருகின்றனர்.

சிவாவைச் சந்திப்பதோடு, அந்தக் கும்பலின் முக்கியக் கடத்தல் நடவடிக்கைகள் பற்றித் தகவல் கொடுப்பதே சூரிக்கு விதிக்கப்பட்டிருக்கும் பணி. அதனைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறார் அந்த உளவுத்துறை அதிகாரி.

அதனைச் செய்வதைவிட, பழங்குடியின மக்களைக் காப்பதே பிரதானம் என்று சூரி நினைக்கும் அளவுக்கு அவர்களைக் கொடுமைப்படுத்தி வருகின்றனர் கடத்தல்காரர்களான ஒண்டியப்பன் மற்றும் அவரது மகன் முருகன்.

அதனைக் கண்டபின்னர் சூரி என்ன செய்தார்? அவர் ஏன் யாழ்ப்பாணம் வந்தார் என்ற விவரம் சிவாவுக்குத் தெரிய வந்ததா? தாயை, சூரியை விட்டு சிவா பிரிந்திருக்கக் காரணம் என்ன? இப்படிப் பல கேள்விகளுக்கு நீட்டி முழக்கிப் பதில் சொல்கிறது ‘கிங்டம்’.

இந்த படம் தொடங்கும்போது, விசாகப்பட்டினம் அருகே வெள்ளையர்களை எதிர்த்துச் சண்டையிட்ட பழங்குடியின மக்களையும் அவர்களது அரசனையும் காட்டுகிறார் இயக்குநர்.

அதன் தொடர்ச்சி கிளைமேக்ஸில் இடம்பெறும் என்பதைக் கடைக்கோடி ரசிகனும் அறிவான். அதுவே திரைக்கதையிலும் நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

ஆனால், அதனைக் காண்கிற பொறுமைதான் நம்மிடம் இல்லை. காரணம், ‘கிங்டம்’ கதை திரையில் விரிந்திருக்கும் விதம்.

என்னவிதமான எதிர்பார்ப்பு?

விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ படத்தின் முதல் பார்வையே பெரியளவில் ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை. ’ஒரு மோசமான ஆக்‌ஷன் படமாக இருக்குமோ’ என்ற எண்ணத்தையே அது உண்டாக்கியது.

தியேட்டரில் படம் நிறைவுறுகிறபோது, அதைவிடக் கொடுமையான அனுபவமே நமக்குக் கிடைக்கிறது.

கட்டுடலைக் காட்டி சல்மான் கான் போலத் திரையில் தெரிய ஆசைப்பட்டிருக்கிறார் விஜய் தேவரகொண்டா. அதில் மட்டும் வெற்றி பெற்றிருக்கிறார்.

நாயகியாக இதில் பாக்யஸ்ரீ போர்சே நடித்திருக்கிறார். அவரது தீவிர ரசிகர்கள் படத்தைக் கண்டால், ‘எங்க தங்கத்தை என்னடா பண்ணி வச்சிருக்கீங்க’ என்று கொதித்துப் போவார்கள். அப்படித்தான் காட்டப்பட்டிருக்கிறது அவரது திரை இருப்பு.

விஜய் தேவரகொண்டா, பாக்யஸ்ரீ இடையே காதல் காட்சிகள் இல்லை; டூயட் பாடல் இல்லை. ஆனால், இரண்டாம் பாதியில் திடீரென்று அவர் மடியில் படுத்துக்கொண்டு தனது உணர்வெழுச்சியை விவரிக்கிறார் விஜய் தேவரகொண்டா.

செல்வராகவனின் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் மீதான காதலில் ‘கிங்டம்’ தந்திருக்கிறார் இயக்குநர் கௌதம் தின்னனூரி. ஆனால், அதற்கேற்ற பின்னணியை, கதாபாத்திர வார்ப்பைத் தரத் தவறியிருக்கிறார்.

அதனால் நாயகன் நாயகி முதல் சத்யதேவ், அய்யப்பா சர்மா, மனிஷ் சவுத்ரி, பாபுராஜ், வெங்கடேஷ் வி.பி., அஜித் கோஷி என்று பலரது நடிப்பு வீணாகியிருக்கிறது.

ஒளிப்பதிவாளர் ஜோமோன் டி ஜான், கிரிஷ் கங்காதரன், படத்தொகுப்பாளர் நவீன் நூலி, தயாரிப்பு வடிவமைப்பாளர் அவினாஷ் கொல்லா உட்படப் பல தொழில்நுட்பக் கலைஞர்கள் இதில் சிறப்பாகத் தங்களது பங்களிப்பைத் தந்திருக்கின்றனர்.

ஆனால், அவர்கள் ஒன்றிணைந்து வரைந்த சித்திரத்தின் மீது நீரைப் பாய்ச்சியடித்தாற் போல இருக்கிறது திரைக்கதை.

வழக்கமாக, அனிருத் இசையில் பாடல்கள் ‘பட்டாசாக’ இருக்கும். இதில் அந்த பாக்கியமும் நமக்கு இல்லை.

பின்னணி இசை பல காட்சிகளில் ஒரேமாதிரியாக ஒலிக்கிறது. அது கொஞ்சமாய் ‘டெம்ப்ட்’ ஏற்றுவதால் தியேட்டரில் மல்லுக்கட்டி உட்கார முடிகிறது. அதுவும் இல்லாவிட்டால் அவ்வளவுதான்.

‘காமெடி’, ‘ட்ராமா’, ‘ரொமான்ஸ்’ ட்ராமா வகைமையில் அமைந்த படங்கள் கூடத் திரையில் ‘பரபரவென’ நகரும் காலம் இது.

ஆக்‌ஷன் படமாக முன்வைக்கப்பட்டிருக்கிற ‘கிங்டம்’ திரைக்கதை ஒரு இடத்தில் சம்மணமிட்டு அமர்ந்துகொண்டு ‘நகர்வேனா’ என்று அடம்பிடிக்கிறது.

இக்கதை தொண்ணூறுகளில் நடப்பதாகச் சொல்லப்படுகிறது. இதில் ஆயுதம், தங்கம் கடத்துபவர்களாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் மக்கள் காட்டப்பட்டிருக்கின்றனர்.

‘நிச்சயம் சர்ச்சை ஏற்படும்’ என்று தெரிந்தே, இப்படியொரு சித்தரிப்பு சேர்க்கப்பட்டிருக்கிறதா எனத் தெரியவில்லை.

படம் முடியும்போது, ‘வெந்து தணிந்தது காடு’ பாணியில் ‘அடுத்த பார்ட்டும் இருக்குது’ என்கிறார் கௌதம் தின்னனூரி.

இருக்கையை விட்டு எழுந்து வெளிவரும்போது, ‘பவன் கல்யாணின் ஹரிஹர வீர மல்லு பார்க்கும்போதும் இப்படித்தான் தூக்கம் வந்தது.

இந்தப் படத்துக்கும் அப்படித்தான். எப்படித்தான் ஹை பட்ஜெட்ல இப்படிப் படம் எடுக்குறாங்களோ’ என்று இருவர் பேசிச் சென்றது காதில் விழுந்தது.

ரொம்பவே லயித்து ஒருவரோடுவர் உரையாடும் அந்த தருணத்தில், அவர்களை இடைமறித்து ‘சேம் பிஞ்ச்’ என்று எப்படிச் சொல்வது?

– உதயசங்கரன் பாடகலிங்கம்

கிங்டம்கிங்டம் விமர்சனம்விமர்சனம்
Comments (0)
Add Comment