கேசரி சேஃப்டர்2 – அக்‌ஷய்க்கு ஒரு வெற்றிப்படம்!

இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ படம் வந்தபிறகு, ‘ஓ வரலாற்றை இப்படியும் வளைக்க முடியுமா’ என்று கமர்ஷியல் பட இயக்குநர்கள் பலர் யோசிக்கத் தொடங்கிவிட்டனர்.

‘இன்னும் நூறு, இருநூறு ஆண்டுகளுக்குப் பின் வரும் சந்ததிகளுக்கு நம்மைப் பற்றிய உண்மைத் தெரியவா போகிறது’ என்று ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’யில் வடிவேலு தன் பூஞ்சை உடம்புக்கு ‘ஜிம் பாடி’ தோற்றத்தை ஓவியத்தில் கொடுக்க முயற்சிப்பாரே, அது போல ‘வரலாறு என்பது திரிபுதானே’ என்று சொல்பவர்களும் உண்டு.

அப்படிப்பட்டவர்களுக்கு வக்காலத்து வாங்கும் வகையில், ஏற்கனவே நடந்த உண்மை நிகழ்வொன்றை அடிப்படையாகக் கொண்ட புனைவாக உருவாக்கப்பட்டுள்ளது ‘கேசரி சேஃப்டர்2: தி அண்டோல்டு ஸ்டோரி ஆஃப் ஜாலியன்வாலாபாஹ்’ திரைப்படம்.

கரண் சிங் தியாகி இதனை இயக்கியிருக்கிறார். அக்‌ஷய் குமார் நாயகனாகவும் ரெஜினா கசாண்ட்ரா அவரது ஜோடியாகவும் நடித்துள்ள இப்படத்தில் மாதவன், அனன்யா பாண்டே, சிமோன் பைஸ்லே, அமித் சியால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சரி, எப்படி இருக்கிறது ‘கேசரி சேஃப்டர்2: தி அண்டோல்டு ஸ்டோரி ஆஃப் ஜாலியன்வாலாபாஹ்’ தரும் காட்சியனுபவம்?

நினைவுபடுத்தப்படும் ‘ஜாலியன்வாலாபாஹ்’!

1919ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதியன்று பஞ்சாப்பின் அமிர்தசரஸில் உள்ள ஜாலியன்வாலாபாஹ் எனுமிடத்தில் பைசாகி பண்டிகையைக் கொண்டாடுவதற்காகக் கூடிய ஆயிரக்கணக்கானோர் மீது ஜெனரல் டயர் தலைமையிலான ஆங்கிலேய ராணுவப் படை தாக்குதல் நடத்தியது.

இப்படம் அந்தச் சம்பவத்தை நினைவூட்டுவதில் இருந்து தொடங்குகிறது.

அந்தச் சம்பவத்தில் தனது தாயையும் தங்கையையும் பறிகொடுத்த ஒரு பதின்ம வயதுச் சிறுவன்,

அந்த உண்மையை ஆங்கிலேய அரசு மறைக்க முயற்சிப்பதை நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியாமல் அம்பலப்படுத்த விரும்புகிறார்.

அதற்காக, வழக்கறிஞர் சங்கரன் நாயரை (அக்‌ஷய் குமார்) நாடுகிறார்.

ஜாலியன்வாலாபாஹ் சம்பவம் குறித்த உண்மை அறியும் குழுவில் அவரும் இடம்பெற்றிருக்கிறார்.

நடந்தது படுகொலை என்பதை உணரும் சங்கரன், அதனை அறிக்கையில் குறிப்பிடுகிறார். ஆனாலும், அது எடுபடாமல் போகிறது.

இந்த நிலையில், வழக்கறிஞர் தில்ரீத் (அனன்யா பாண்டே) வேண்டுகோளுக்காக, அந்த உண்மையை நீதிமன்றத்தில் கொணர முயற்சிக்கிறார்.

அதுநாள் வரை சங்கரனோடு தோளோடு தோள் சேர்ந்து நின்ற அரசு அதிகாரியே (அமித் சியால்) அதற்குத் தடைகள் பல தருகிறார்.

ஒருகட்டத்தில் சங்கரன் பக்கம் வழக்கு சாய்வது போலத் தோன்ற, ஜெனரல் டயர் தரப்பு பதற்றமடைகிறது.

அதையடுத்து, இந்திய – ஆங்கிலேயப் பெற்றோருக்குப் பிறந்த மெக்கன்லேயை (மாதவன்) சங்கரனுக்கு எதிராக வாதாட அழைத்து வருகிறது.

மெக்கன்லே முன்வைக்கும் வாதங்களும் சில உத்திகளும் சங்கரனுக்குப் பின்னடைவைத் தர, ஆங்கிலேய அரசின் ஆதிக்கம் அந்த வழக்கை மேலும் நீர்த்துப் போகச் செய்கிறது.

அதைத் தாண்டி, சங்கரனால் அந்த வழக்கில் வெற்றி பெற முடிந்ததா? ஜாலியன்வாலாபாஹ் பற்றி உலகுக்கு எப்போது தெரிய வந்தது என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.

விறுவிறுப்பான காட்சிகள் நகர்வு!

ஒரு கமர்ஷியல் பொழுதுபோக்கு படத்தில் நாயகனும் வில்லனும் நேரெதிராக மோதிக்கொள்ளும்போது ரசிகர்களுக்கு எவ்வளவு உவப்பாக இருக்கும்.

அவர்கள் மல்லுக்கட்டுவது கைகலப்பாக மட்டுமல்லாமல் சில வேளைகளில் வாக்குவாதமாகவும் இருக்கலாம்.

அப்படியொரு ‘எண்டர்டெய்ன்மெண்ட்’டை வழங்குகிறது இந்த ‘கேசரி சேஃப்டர்2: தி அண்டோல்டு ஸ்டோரி ஆஃப் ஜாலியன்வாலாபாஹ்’ஹில் அக்‌ஷய் குமாரும் மாதவனும் வாதாடுகிற பின்பாதிக் காட்சிகள்.

அவர்களது நடிப்பு சில இடங்களில் மிகையாக இருந்தாலும், அதனை மீறி ‘நடப்பது உண்மை’ என்று நம்பவைக்கிற வகையில் இருக்கிறது அவர்களது நடிப்பு.

‘வெகுநாட்கள் கழித்து அக்‌ஷய்க்கு ஒரு வெற்றிப்படம்’ என்று சொல்லும் அளவுக்கு உள்ளது இப்படம். அதற்கு மாதவன் உறுதுணையாக இருந்திருக்கிறார்.

இதில் அக்‌ஷய்யின் மனைவியாக வரும் ரெஜினா கசாண்ட்ரா, தில்ரீத் ஆக வரும் அனன்யா, அரசு அதிகாரியாக வரும் அமித் சியால் என்று பலரும் நல்லதொரு நடிப்பைத் தந்திருக்கின்றனர்.

ஜெனரல் ரெஜினால்டு டயர் ஆக வரும் சிமோன் பைஸ்லே, ரொம்பவே ‘ஓவர் ஆக்டிங்’கை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இப்படத்தில் சுமார் இரண்டு டஜனுக்கும் மேற்பட்டோர் முகம் காட்டியிருக்கின்றனர்.

அவர்களைச் சிறப்புறக் காட்டுகிறது திரைக்கதை.

யாரையும் முன்னிலைப்படுத்தாமல், எவரையும் புறக்கணிக்காமல்,

சரியான இடம் கொடுத்திருப்பது இயக்குநர் கரண் சிங் தியாகி மற்றும் அம்ரித்பால் சிங் பிந்த்ரா, சுமீத் சக்சேனாவின் திரைக்கதையாக்கம்.

இக்கதையானது ரகு மற்றும் புஷ்பா பாலத்தின் ‘தி கேஸ் தேட் ஷுக் தி எம்பயர்’ எனும் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது.

டெபோஜித் ரேயின் ஒளிப்பதிவு, நிதின் பெய்த்தின் படத்தொகுப்பு, சாஸ்வத் சச்தேவின் பின்னணி இசை மற்றும் பாடல்கள்,

‘ஏற்கனவே நடந்து முடிந்த ஒரு வரலாற்று நிகழ்வை லேசுபாசாக மாற்றி, இப்படியும் நிகழ்ந்திருக்கக் கூடும்’ என்பதாகக் கதை சொல்வது ஒருவகை பாணி.

இந்தியாவில் ‘ஆர்.ஆர்.ஆர்’ போன்ற ஒரு சில படங்களே அதனை வெற்றிகரமாகக் கையாண்டிருக்கின்றன.

அந்த வரிசையில் இப்படத்தை இடம்பெற வைக்க முயற்சித்திருக்கிறார் இயக்குநர் கரண் சிங் தியாகி. ‘அட்றா அவனை’ என்று இந்தியில் தியேட்டரில் எழும் கூக்குரல்கள் அதன் வெற்றியைக் காட்டுகின்றன.

இந்தப் படத்தின் கிளைமேக்ஸில் அவமதிப்பு வழக்குக்கு ஆளான சங்கரன் சம்பந்தப்பட்ட நீதிபதியிடம் தனது தரப்பு வாதங்களை எடுத்து வைப்பதாக ஒரு காட்சி உண்டு.

அது முழுக்க முழுக்க ‘கமர்ஷியல் சினிமாதனத்தில்’ தோய்த்து ஊறவைக்கப்பட்ட ஒன்று.

எதிர்காலத்தில் இதனைப் பார்க்கிற இன்னொரு தலைமுறை, இதுவே உண்மை என்று நினைத்திடக் கூடாது.

அது மட்டுமே இது போன்ற படங்கள் நமக்குத் தருகிற பெருங்கவலைகளில் முதன்மையானது.

வரலாற்றில் நிகழ்ந்த சில சம்பவங்கள் இப்படித்தான் நிகழ்ந்திருக்கும் என்ற கற்பனை எல்லோரிடமும் உண்டு.

மிகச்சிலருக்கு அதன் தன்மை ‘மைல்டாக’ இருந்தால் மட்டுமே உவப்பாக இருக்கும்.

அப்படிப்பட்டவர்களுக்கு இப்படம் ‘மிகை’ ஸ்கொயர் ஆகத் தெரியும்.

ஆனால், அவர்களும் கூட ரசிக்கும்படியான காட்சியாக்கம் இதில் இருக்கிறது. அதுவே இப்படத்தின் ப்ளஸ்.

அது நிகழாமல் போயிருந்தால், இப்படம் ‘கொடூரமானதாக’ மாறியிருக்கும். இப்படத்திற்கான விமர்சனம் அவ்வளவுதான். டாட்..

– உதயசங்கரன் பாடகலிங்கம்

Comments (0)
Add Comment