பிரபலங்களின் பாராட்டு மழையில் ‘கண்ணப்பா’!

விஷ்ணு மஞ்சு நடிப்பில், முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் டாக்டர். எம்.மோகன் பாபுவின் பிரமாண்ட தயாரிப்பில், மோகன்லால், அக்‌ஷய்குமார், சரத்குமார், பிரபாஸ், காஜல் அகர்வால் என இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் ‘கண்ணப்பா’ திரைப்படம் பல்வேறு மொழிகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், சென்னையில் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது.

இதில், இயக்குநர்கள் பி.வாசு, பொன்ராம், நடிகர் இயக்குநர் பிரபுதேவா, நடிகை ராதிகா, அரசியல் தலைவர் மற்றும் கல்வியாளர் ஏ.சி.சண்முகம், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன், நடிகர் தியாகராஜன், இயக்குநர், நடிகர் கே.பாக்யராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு படம் பார்த்தார்கள்.

படம் பார்த்த பிரபலங்கள் அனைவரும் ‘கண்ணப்பா’ திரைப்படம் நிச்சயம் பார்க்க வேண்டிய ஒரு படமாக இருப்பதோடு, புதிய உலகத்திற்கு மக்களை அழைத்துச் செல்லும் அற்புதமான படைப்பாக இருக்கிறது என்று பாராட்டினார்கள்.

குறிப்பாக நடிகர் விஷ்ணு மஞ்சு கண்ணப்பராக மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். அவரது குழந்தை தனமான நடிப்பு வெகுவாக கவர்கிறது, என்று தெரிவித்தனர்.

நடிகர் பிரபுதேவா: “இந்த படத்தை பார்க்கும் போது பிரமிப்பாக இருக்கிறது. இப்படி ஒரு படத்தை நினைத்துக்கூட பார்க்க முடியாது.

படம் தொடங்கிய பத்தாவது நிமிடத்தில் நாமும் கதையோடு பயணிக்கத் தொடங்கி விடுகிறோம். பிறகு அதில் இருந்து நம்மாள் வெளியே வரவே முடியாது” என்றார்.

நடிகை ராதிகா: “என் தந்தை (எம்.ஆர். ராதா) கடவுள் மறுப்பாளர். அவரிடம் நான் ஒரு நாள் கடவுள் இருக்கிறாரா? என்று கேட்டபோது, நீ நினைப்பது தான், என்று சொன்னார்.

இந்தப் படத்தைப் பார்க்கும்போது எனக்கு அவர் நினைவு வந்தது. ஆன்மீகப் படமாக இருந்தாலும் பக்தி என்றால் என்ன? என்பதை மிக அழகாகவும், ஆழமாகவும் சொல்லியிருக்கிறார்கள்” என்றார்.

இயக்குநர் பி.வாசு: “கடவுள் நம்பிக்கை இல்லாத ஒருவருக்கும், கடவுள் நம்பிக்கை உள்ள ஒரு பெண்ணுக்கும் இடையிலான காதல் கதை மிக சுவாரஸ்யமாக இருந்தது. படம் நிச்சயம் மிகப்பெரிய வெற்றி பெறும்” என்றார்.

கல்வியாளர் ஏ.சி.சண்முகம்: “இன்றைய காலக்கட்டத்திற்கு மிகவும் அவசியமான திரைப்படம். மக்களை நல்வழிப்படுத்த இதுபோன்ற படங்கள் அதிகமாக வரவேண்டும்.

விஷ்ணு மஞ்சுவின் நடிப்பு பிரமாண்டத்திற்கு இணையாக இருக்கிறது. இந்த படத்தைப் பள்ளி மாணவர்கள் அவசியம் பார்க்க வேண்டும்” என்றார்.

நடிகர் சரத்குமார்: “கண்ணப்பா போன்ற திரைப்படங்கள் தற்போதைய காலக்கட்டத்திற்கு தேவையான ஒரு படம். இந்த படத்திற்காக படக்குழு உழைத்திருப்பது மிகப்பெரியது.

வெளிநாட்டில் இவ்வளவு பெரிய குழுவுடன் பணியாற்றியிருப்பது என்பது சாதாரண விசயம் இல்லை. அவர்களின் உழைப்பின் பலனாக கண்ணப்பா திரையிட்ட இடங்களில் எல்லாம் சிறப்பான வரவேற்பை பெற்று வருகிறது” என்றார்.

நடிகர், தயாரிப்பாளர் மோகன் பாபு: “நான் கஷ்டப்படும் காலங்களில் சோறு, தங்க இருப்பிடம் கொடுத்தது தமிழ்நாடு தான். என் மூன்று பிள்ளைகளும் இங்கு தான் பிறந்தார்கள். விஷ்ணு மஞ்சுவை ராதிகாவுக்கு சிறுவயதில் இருந்தே தெரியும். 

ராதிகா போல்டான டஃப்பான லேடி. என்னுடன் நிறைய படங்களில் நடித்திருக்கிறார். சரத்குமாரின் நாட்டாமை படத்தை தான் நான் பெத்தராயுடு என்று தெலுங்கில் எடுத்தேன்.

கடந்த மூன்று வருடங்களாக நானும் சரத்குமாரும் மிக நெருக்கமாக, சகோதரர்களை போல் பழகி வருகிறோம். பிரபுதேவா என் தம்பி போல், அவர் எனக்காக இந்த படத்தில் பணியாற்றினார்” என்றார்.

Comments (0)
Add Comment