பில்கிஸ் பானு கதையைப் படமாக்கும் கங்கனா!

குஜராத்தில் 2002-ம் ஆண்டு நடந்த கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் கலவரம் பரவி பலர் கொல்லப்பட்டனர்.

இந்தக் கலவரத்தின்போது 21 வயதான பில்கிஸ் பானுவை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்ததோடு, அந்தப் பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரைக் கொடூரமாக கொலை செய்தது.

இந்த வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை அனுபவித்த 11 குற்றவாளிகள் விடுதலையான நிலையில், அவர்களை மீண்டும் சிறைக்கு அனுப்ப உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.

இந்த நிலையில் பில்கிஸ் பானுவின் கதையை சினிமா படமாக எடுப்பீர்களா என்று வலைத்தளத்தில் ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இந்தக் கேள்விக்குப் பதிலளித்த கங்கனா ரணாவத், “பில்கிஸ் பானு கதையைப் படமாக எடுக்க விருப்பம் உள்ளது. இந்தப் படத்துக்கான கதையை மூன்று ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து உருவாக்கியுள்ளேன்.

பில்கிஸ் பானு படத்துக்கான திரைக்கதை தயாராக இருக்கிறது. ஆனால் சில ஓ.டி.டி. தளங்களும், பெரிய தயாரிப்பு நிறுவனங்களும் பில்கிஸ் பானு படத்தைத் தயாரிக்க முன்வரவில்லை. நீங்கள் பாரதீய ஜனதாவை ஆதரிப்பதால் உங்களுடன் பணியாற்ற விரும்பவில்லை என்று கூறிவிட்டன” என்றார்.

Comments (0)
Add Comment