ஒரு திரைப்படம் பெரிய வெற்றியைப் பெற, அது குறித்த அறிமுகம் கடைக்கோடி ரசிகர்களுக்கும் உருவாக்கப்பட வேண்டும். அதனாலேயே, ஒரு படத்தின் பூஜை தொடங்கி ரிலீஸ் வரை பெரியளவில் ‘விளம்பரம்’ செய்யப்படுகிற வழக்கம் இருந்தது.
ஒரு படத்திற்கான ‘ஷெட்யூல்’ இரண்டாண்டுகளுக்கு முன்பே தீர்மானிக்கப்படுகிற வழக்கம் வந்தபிறகு, அது இன்னும் முன்னோக்கிச் சென்றது.
பிரமாண்டமாகத் தயாரிக்கப்படுகிற சில நட்சத்திரங்களின் படங்களுக்கே இது பொருந்தும் என்கிற விதி ஒருகாலத்தில் சொல்லப்பட்டது. இன்று, அது ஒரு பொதுவிதியாக மாறியிருக்கிறது.
ஆக, ஒரு திரைப்படம் வெற்றி பெற முன்கூட்டியே அது பற்றிய தகவல்களை வெளியிட்டு எதிர்பார்ப்பைப் பெருக்கி நிறைப்பது ஒரு வர்த்தக உத்தியாக இருந்து வருகிறது.
‘எல்லா காலத்திலும் இது சகஜம்’ என்பதை ஏற்றுக்கொண்டாலும், இன்று இது பூதாகரமாகியிருக்கிறது என்பதுதான் நிஜம்.
அப்படி எதிர்பார்ப்பை பூதாகரமாக ஆக்குவதில் ஒரு சிக்கலும் இருக்கிறது. ஒருவேளை அதற்கு ஏற்றபடி படத்தின் உள்ளடக்கம் இல்லாவிட்டால் அனைத்தும் ‘பப்படம்’ ஆகிவிடும்.
‘அப்டேட் இல்லையா’ என்று கேட்கிற ரசிகர்களே, ‘நீங்களும் உங்க அப்டேட்டும்..’ என்று பற்களை நறநறத்துவிட்டுச் சென்றுவிடுவார்கள்.
இப்போது என்றில்லை, ‘ஞானசௌந்தரி’ காலத்தில் இருந்தே இதற்குப் பல உதாரணங்கள் உண்டு. அப்படியொன்றாக விளங்குவது ‘கந்தசாமி’.
சுசி.கணேசன் எனும் இயக்குநர்!
மணிரத்னத்தின் உதவி இயக்குநர்கள் என்று திரையுலகில் அறியப்பட்டவர்கள், அவரைப் போன்று பெரும்புகழ் பெறவில்லை. கிட்டி, வீனஸ் பாலு, அழகம்பெருமாள் என்று மிகச்சிலர் அந்த வரிசையில் உண்டு. அதில் இணைந்த இன்னொருவர் சுசி கணேசன்.
‘விரும்புகிறேன்’ படத்தை முழுதாக உருவாக்க முடியாமல் தடுமாறி வந்த சுசி.கணேசனுக்கு மெட்ராஸ் டாக்கீஸில் வாய்ப்பு கிடைக்கச் செய்தது ‘பைவ் ஸ்டார்’. அந்த படத்தின் ‘மேக்கிங்’கை தமிழில் வந்த ஒரு ‘தில் சாஹ்தா ஹை’ என்று கூடச் சொல்லலாம்.
‘விரும்புகிறேன்’ கூட வித்தியாசமானதொரு கதைக்களத்தைக் காட்டியது. சாதீய வேறுபாடுகள் இருக்கிற ஒரு கிராமத்தில் நகர்ப்புறத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன் தீயணைப்பு படைவீரனாக நுழைந்து, அங்குள்ள ஒரு பெண் மீது காதல் கொள்வதுதான் கதை.
அவையிரண்டிலும் இருந்து விலகி ‘திருட்டுப் பயலே’ தந்தார் சுசி.கணேசன். நீண்ட நாட்களுக்குப் பிறகு, முழுக்க எதிர்மறையான நாயகனை அப்படம் காட்டியது. பரபரவென நகர்கிற காட்சிகள் வழியே வெற்றியையும் பெற்றது.
மேற்சொன்ன மூன்று படங்களும் இயக்குநர் சுசி.கணேசனுக்கு என்று ரசிக வட்டத்தை உருவாக்கியது.
அந்த நிலையில்தான், அப்போது முன்னணி நாயகனாகத் திகழ்ந்த விக்ரமுடன் இணைந்து அவர் ‘கந்தசாமி’ தரப்போவதாகத் தகவல் வெளியானது.
எகிறிய எதிர்பார்ப்பு!
விக்ரமின் சேவல் உடை கெட்டப், படுகவர்ச்சியான ஸ்ரேயாவின் தோற்றம், தேவிஸ்ரீபிரசாத்தின் இசை, உலகின் பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு, பிரபுவுடன் தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவும் இணைந்தது எனப் பல அம்சங்கள் ‘கந்தசாமி’ மீதான எதிர்பார்ப்பினை எகிற வைத்தது.
ஷங்கர் பட பாணியில், ஊழலுக்கு எதிரான கருத்துகளைச் சொல்கிற ஒரு கமர்ஷியல் படம் என்ற எண்ணத்தை உருவாக்கியது.
‘கந்தசாமி’ தொடர்பான விளம்பரங்கள் படப்பிடிப்பு ஆரம்பித்த உடனேயே வெளிவரத் தொடங்கிவிட்டன.
2007ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிகழ்ந்த பூஜைக்குப் பிறகு மெல்ல அந்த எதிர்பார்ப்பு வளரத் தொடங்கியது.
ஏனென்றால், அந்த பூஜைக்கான அழைப்பிதழே அப்போது சுமார் பதினைந்தாயிரம் ரூபாய் என்று சொல்லப்பட்டது.
பிறகு படம் சம்பந்தப்பட்டவர்களின் பேட்டிகள் பத்திரிகைகளில் வந்தன. அதையடுத்து ‘ட்ரெய்லர்’ வெளியானது. பாடல்கள் வெளியாகி ரசிகர்களைச் சுண்டியிழுத்தன.
ஆசிஷ் வித்யார்த்தி, முகேஷ் திவாரி, ஒய்.ஜி.மகேந்திரன், மன்சூர் அலி கான், அலெக்ஸ், இளவரசு, நெல்லை சிவா, முத்துகாளை, மயில்சாமி, சார்லி எனப் பல நட்சத்திரங்கள் இதில் நடித்தனர்.
வடிவேலுவுக்கு என்று தனி ‘ட்ராக்’ கொடுக்கப்பட்டது. முமைத் கான் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார்.
ஒளிப்பதிவாளர் என்.கே.ஏகாம்பரம், ‘சென்னை 600028’ மூலமாகப் புகழடைத படத்தொகுப்பாளர்கள் பிரவீன் கே.எல் – என்.பி.ஸ்ரீகாந்த் மற்றும் ராஜேஷ்குமார், கலை இயக்குநர் தோட்டா தரணி எனத் தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பும் கவனிக்கத்தக்கதாக இருந்தது.
‘இதவிட வேறென்ன வேணும்’ என்பதாகவே ‘கந்தசாமி’ எதிர்பார்ப்பு எகிறிக் கிடந்தது. நீண்ட காத்திருப்புக்குப் பின்னர் 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21இல் படம் வெளியானது.
‘கந்தசாமி முதல் நாள் முதல் காட்சி பார்த்ததெல்லாம் ஒரு எமோஷன்’ என்று ‘ஜென்ஸீ’ கிட்ஸ் போன்று பேட்டிகள் தட்டலாம் தான். ஆனால், அப்படிச் சொல்ல முடியாத அளவுக்கு வலியைத் தந்தது அதன் திரையனுபவம்.
ஆங்காங்கே சில காட்சிகள் ‘சூப்பர்’ என்று சொல்ல வைத்தாலும், தியேட்டரில் அமர்ந்திருப்பது கடினம் எனுமளவுக்கு இருந்தது திரைக்கதை ஓட்டம். கதை என்ற வஸ்துவுக்குப் பெரிதாக இடமில்லை.
‘இதெல்லாம் ரசிகர்களோடு ஈஸியா கனெக்ட் ஆகும்’ என்று திணிக்கப்பட்ட காட்சிகள், ஷாட்கள் ‘க்ளிஷே’வின் உச்சமாக இருந்தன.
அனைத்தும் ஒன்றிணைந்தபோது, ‘படம் சுமாருக்கும் கீழே’ என்ற எண்ணமே பூதாகரமானது.
ஒருவேளை ‘கந்தசாமி’க்கான எதிர்பார்ப்பு கொஞ்சம் மட்டுப்பட்டிருந்தால், அந்த எண்ணமும் கூடக் கொஞ்சம் மாறியிருக்கும்.
மிகப்பெரிய அளவில் பிரமாண்டமாகத் தயாரிக்கப்படுகிற படங்களில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஒரு பக்கம் இருந்தால், படம் செல்கிற திசை இன்னொன்றாக இருக்க வேண்டும்.
அது, படம் பார்க்கிற ரசிகர்களை ஆசுவாசப்படுத்துவதாகவும் அமைய வேண்டும். அப்படியொன்று ‘கந்தசாமி’யில் நிகழவே இல்லை.
பாடல்கள் ஈர்த்த அளவுக்கு நகைச்சுவை கவரவில்லை. செண்டிமெண்ட் காட்சிகளில் உயிர்ப்பு இல்லை.
முக்கியமாக, ஆக்ஷன் காட்சிகளுக்கு முன்னதாக வந்த ஆக்ஷன் பில்டப்புகள் சரியாகத் திரையில் கையாளப்படவில்லை.
இப்படிச் சில விஷயங்கள் அந்த படத்தின் வெற்றியைப் பின்னுக்கு இழுத்தன. அவற்றில் பிரதானமாக மாறியது, அப்படத்திற்கான எதிர்பார்ப்பு பொய்த்துப் போனதே.
கலைப்புலி எஸ்.தாணு தயாரித்த இப்படம் விக்ரமின் திரை வாழ்வில் ஒரு வெற்றிப் படமாகவே சொல்லப்படுகிறது. அதில் உண்மைகள் இருக்கலாம். ஆனால், ஒரு ரசிகனாகப் படம் பார்க்கச் சென்றவர்களுக்கு ‘கந்தசாமி’ தந்தது பெரும் ஏமாற்றம் தான்.
ஏகபோகமாக எதிர்பார்ப்பினைப் பெருக்குவது ஒரு திரைப்படத்திற்கு ஆபத்து தரும் என்ற உண்மையைக் கந்தசாமிக்கு முன்பே பல படங்கள் சொல்லித் தந்திருக்கின்றன.
ஆனால், இப்போதுவரை அப்படிப்பட்ட ஆபத்துகளை எதிர்கொள்வதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது திரையுலகம்..!
– மாபா