டைரக்ஷனில் தனி முத்திரைப் பதித்த மணிரத்னமும், ‘உலக நாயகன்’ கமல்ஹாசனும் இணைந்து கொடுத்த ‘ நாயகன்’ திரைப்படம் கடந்த 1987 ஆம் ஆண்டு வெளியானது.
ஒரு சேர விமர்சகர்களின் அமோக வரவேற்பைப் பெற்ற நாயகன், அதிரி புதிரி வெற்றி பெற்றது. வசூலும் குவித்தது.
அந்தப் படத்துக்குப் பிறகு இரு ஜாம்பவான்களும் 38 ஆண்டுகளுக்குப் பிறகு சேர்ந்து உருவாக்கியுள்ள படம் – ‘தக் லைஃப்’.
கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயிண்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும், இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது.
இந்த நிலையில், படத்தின் முதல் சிங்கிள், நேற்று வெளியானது. ‘ஜிங்குச்சா’ என்ற இந்தப் பாடலுக்கான வரிகளை கமல்ஹாசன் எழுதியுள்ளார்.
இது குறித்து வெளியான போஸ்டரில் கமல்ஹாசன், சிம்பு இருவரும் நடனமாடுவது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது.
பாடல் வெளியீட்டைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பும் நடந்தது. அப்போது கமல்ஹாசன் பேசியதாவது:
‘நான் ஆங்கிலத்தில் பேசுவது அரசியல் இல்லை – இது தமிழனின் யதார்த்தம். மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் நடிப்பதற்கு மக்கள் தீர்ப்பே காரணம்.
அவருக்கு ‘அஞ்சரை மணி ரத்னம்’ என்ற பட்டத்தை கொடுக்கிறேன். தினமும் காலையில் 5 மணிக்கே படப்பிடிப்புக்கு வந்துவிடுவார்.
மணிரத்னத்தைப் பார்த்து மற்றவர்கள் மட்டுமல்ல, நானும் பயந்திருக்கிறேன். வீரம் என்பது என்ன? பயப்படாத மாதிரி காட்டிக்கொள்வதுதான்.
சிம்புவுக்கு இணையாக ஆட வேண்டும் என்று, ஒரு பாடல் காட்சியில் வேகமாக ஆடினேன்.
வைரமுத்துவை மிஞ்சுவதற்காக நான் பாடல் எழுதவில்லை. மணிரத்னம், ஏ.ஆர். ரஹ்மானுடன் பணியாற்ற வேண்டும் என்பதற்காகவே புதிய மொழியில் ‘ஜிங்குச்சா’ பாடலை எழுதினேன்.
தாய் 8 அடி பாய்ந்தால். குட்டி 16 அடி பாயும் என்பது சிம்புவுக்கு பொருந்தும். அவரது தந்தை டி.ராஜேந்தருக்கு என்மீது அளவுகடந்த பாசம் உண்டு.
‘தக் லைஃப்’ படம் கண்டிப்பாக ஓடும். நாங்கள் சினிமாவை காதலிப்பவர்கள்.
அதனால்தான் இவ்வளவு நம்பிக்கை. நீங்கள் கேட்கும் எல்லா விஷயங்களும் இருக்கும்.
ஆனால், வேறுமாதிரி இருக்கும். போன தீபாவளிக்கு போட்ட சட்டையையே இந்தப் தீபாவளிக்கும் போடுவீர்களா? பார்த்து பழகிய சினிமாவையே மீண்டும் பார்ப்பீர்களா?
அதனால்தான் ‘தக் லைஃப்’ படத்தை வேறுமாதிரி உருவாக்கியுள்ளோம்’ என்று கமல்ஹாசன் பேசினார்.
‘தக் லைஃப்’, ஜூன் 3 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா அடுத்த மாதம் 16 ஆம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவிலும் பிரம்மாண்டமாக இசை வெளியீட்டு விழாவை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.
– பாப்பாங்குளம் பாரதி.