“கலைக்கு ஏது மொழி? உணர்வுகளுக்கு ஏது எல்லை?” என்ற தத்துவத்திற்குச் சான்றாகத் திகழ்பவர் ‘உலக நாயகன்’ கமல்ஹாசன்.
ஒரு நடிகராக, உலகத் தரத்திலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய முன்னோடியாக, திரைக்கதை ஆசிரியராக என அவர் தொட்ட உயரங்கள் அநேகம்.
தமிழ் மண்ணில் வேரூன்றி நின்றாலும், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என இந்தியத் திரை வரைபடம் முழுவதும் தனது முத்திரையைப் பதித்தவர்.
அந்தப் பன்முகத் திறமைக்கும், இந்திய சினிமாவிற்கு அவர் ஆற்றிய ஈடு இணையற்ற பங்களிப்பிற்கும் மகுடம் சூட்டும் விதமாக, தெலங்கானா அரசு தனது உயரிய விருதை வழங்கி கௌரவித்துள்ளது.
உயிரோட்டமான கலைகளையும், கலைஞர்களையும் கௌரவிக்கத் தெலங்கானா அரசு மேற்கொண்டு வரும் புதிய முயற்சிதான் இந்த ‘கத்தார்’ திரைப்பட விருதுகள் (Telangana Gaddar Film Awards).
ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் வழங்கப்பட்டு வந்த ‘நந்தி’ (Nandi Awards) விருதுகளுக்கு மாற்றாக, தெலங்கானாவின் புரட்சிக் கவிஞர் மற்றும் கலாச்சார அடையாளமான ‘கத்தார்’ அவர்களின் நினைவாக இந்த விருதுகளை அம்மாநில அரசு 2025-ம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தியது.
கடந்த மார்ச் 19, 2026 (வியாழக்கிழமை) அன்று ஹைதராபாத்தில் நடைபெற்ற பிரம்மாண்டமான விழாவில், 2025-ம் ஆண்டிற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டன.
இதில் இந்திய சினிமாவின் ஆளுமைகளைக் கௌரவிக்கும் சிறப்புப் பிரிவில் கமல்ஹாசனுக்கு உயரிய விருது வழங்கப்பட்டது.
இந்தியத் திரையுலகில் ஆளுமைமிக்க நபர்களுக்கு வழங்கப்படும் ‘பைடி ஜெய்ராஜ்’ (Paidi Jairaj Film Award) விருதை இம்முறை கமல்ஹாசன் தட்டிச் சென்றுள்ளார்.
தெலங்கானா முதலமைச்சர் ஏ. ரேவந்த் ரெட்டி முன்னிலையில், நடிகர் நாகர்ஜுனா இந்த விருதை கமலுக்கு வழங்கி கௌரவித்தார்.
சினிமாத் துறையில் நடிகர்களைத் தாண்டி, ஒட்டுமொத்தத் திரையுலகின் வளர்ச்சிக்காகப் பாடுபடும் ஆளுமைகளுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
1929-ல் தனது திரைப்பயணத்தைத் தொடங்கிய பழம்பெரும் நடிகர் மற்றும் இயக்குநரான பைடி ஜெய்ராஜின் பெயரில் இவ்விருது வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு இவ்விருதை இயக்குநர் மணிரத்னம் பெற்றிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.