அர்த்தம் தெரியாமல் பாடலாமா?

கல்கியின் ‘சங்கீத யோகம்’ தொகுப்பில் வெளியான கட்டுரையிலிருந்து ஒரு பகுதி.

****

செம்மங்குடி சீனிவாசய்யரின் சங்கீதத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர் கல்கி. ஆயினும் கருத்து வேறுபாடு என்று வரும்போது தமிழிசை சார்பில் தன் கருத்துக்களை முன் வைக்க அவர் தயங்கியதில்லை.

செம்மங்குடி உள்பட அன்று பல  இசை மேதைகள் மொழி முக்கியமில்லை என்றே கருதினர். கல்கி தமிழிசை இயக்கம் சார்பில் மொழியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியவர்.

இசைக்கு மொழி முக்கியமா, இல்லையா என்ற சர்ச்சை இன்று கூட நீடிக்கிறது. ஆகவே இன்றும் இந்தக் கட்டுரை பொருத்தமாக இருக்கிறது.

தனக்கு எதிராக வாதாடுவோர் கூட ரசித்துப் படிக்கும்படி எழுதுபவர் கல்கி, இந்தக் கட்டுரை அதற்குச் சான்று.

செம்மங்குடியின் சங்கீத வித்வத்தில் எனக்கு அளவில்லாத மதிப்பு உண்டு. அவருடைய சங்கீதக் கச்சேரிகளை நான் பரவசமாக அனுபவித்தது போல் வேறு யாருடைய கச்சேரியையும்  அனுபவித்ததில்லை. இணையற்ற மனோதர்ம கற்பனைகளுடன் வாசாமகோசரமாக அவர் கரகரப்ரியா, கல்யாணி முதலிய ராகங்களை ஆலாபனம் செய்யும்போது நான் மெய்மறந்து போயிருக்கிறேன்.

நமது காலத்தில் கர்நாடக சங்கீதத்தின் மகிமைக்கு எல்லைக் கல் நாட்டக்கூடியவர் இவர்தான் என்று எண்ணி மகிழ்ந்திருக்கிறேன். இப்போது அவருடைய சாரீர வசதி குறைந்திருந்த போதிலும். அதனால் அவருடைய சங்கீதப் பெருமை குன்றிவிட்டதாக அநேகரைப்போல் நான் கருதவில்லை.

எனவே அப்படிப்பட்ட வித்வான் சங்கீதத்தைப் பற்றியும் தமிழிசை பற்றியும் பேச முன்வந்திருக்கும்போது அவர் என்ன சொல்கிறார் என்பதைக் கவனிக்காமல் நான் தள்ளமுடியாது.

செம்மங்குடியின் பிரசங்கத்தில் மிகவும் முக்கியமான அம்சம் ஸாஹித்யத்தையும் சங்கீதத்தையும் பற்றியது. “நாங்கள் சங்கீத வித்தையை அப்பியசித்தபோது ஸரிகமபதநி என்னும் ஸ்ப்த ஸ்வரமாகிய பாஷைகளைக் கற்கவில்லை” என்று அவர் கூறியுள்ளார்.

செம்மங்குடியைப் பொறுத்தவரையில் இது முக்காலும் உண்மையாகும்.

அவருடைய சங்கீதம் பிரபலமடைய ஆரம்பித்த சமயத்தில் அவர், “ஜிவ ஜிவ ஜிவ என ராதா” என்று பாடியது பிரசித்தமானது. அப்புறம் தமிழில் பாரதி பாடல்கள் முதலியவை பாடத் தொடங்கிய பின்னர் ஸாஹித்தியத்திலும் சிறிது கவனம் செலுத்தத் தொடங்கினார் என்பதும் உண்மைதான்.

ஆனால், அவர் விஷயத்தில் உண்மையாயிருப்பதாலே எல்லாக் கர்நாடக சங்கீத வித்வான்களையுமே அப்படி ஸாஹித்ய ஞான சூன்யங்கள் என்று அவர் சேர்த்துக் கூறுவதை நான் ஆட்சேபிக்கிறேன்.

ஸாஹித்யத்தில் பூரண கவனம் செலுத்தி அக்ஷர சுத்தத்துடன் இருதய பாவத்துடனும் பாடிய மகா வைத்தியநாதய்யர் முதலிய மகான்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். வீணை தனம்மாளும் அவருடைய குமாரிகளும் அவ்விதம் பாடியிருக்கிறார்கள்.

தற்கால வித்வான்களுக்குள் முசிறி சுப்பிரமணிய ஐயர் அக்ஷரப் பிழையுடனோ, அர்த்தம் தெரியாமலோ எந்தப் பாட்டையும் பாடுவது கிடையாது.

இன்னும் செம்மங்குடி தம்முடைய குறையையே சங்கீதத்தின் மேன்மையாக்கி “ஸாஹித்யம் அவ்வளவு முக்கியமானதல்ல” என்று கூறுவதையும் நான் ஆட்சேபிக்கிறேன்.

“ஒன்று ஸாஹித்யமே இல்லாமல் பாடுங்கள்; அல்லது ஸாஹித்யம் பாடுவதாயிருந்தால் சரியாகத் தெரிந்து கொண்டு பாடுங்கள்” என்று கேட்க ரஸிகர்களுக்கு உரிமை உண்டு. ஸாஹித்யம் அவ்வளவு முக்கியமற்றதாயிருந்தால் ஸ்ரீதியாக பிரம்மத்துக்கு இவ்வளவு மகிமை ஏற்பட்டிராது.

அவருடைய இராம பக்தியின் சிறப்பைக் குறித்துப் பேச வேண்டிய அவசியமே இல்லை. அவருடைய மெட்டுக்களை மட்டும் வைத்துக் கொண்டு ஸாஹித்யங்களைத் தள்ளிவிடலாம்.

பேச்சின் நடுவில் எவ்வித சம்பந்தமோ பொருத்தமோ இல்லாமல், ”தமிழிசைக்காரர்கள் பள்ளிக் கூடங்களில் தமிழை அதிகமாகப் படிக்க ஏற்பாடு செய்வது தானே?” என்று செம்மங்குடி கேட்கிறார்.

தமிழிசை அன்பர்கள் பெரும்பாலும் தமிழ் அன்பர்களும்தான். தமிழை எல்லா வகையிலும் வளர்க்க அவர்கள் முயற்சி செய்து கொண்டுதானிருக்கிறார்கள்.

ஆனால், செம்மங்குடி இவ்விதம் சொல்வதன் அர்த்தம் என்ன? ”செம்மங்குடி சீனிவாசய்யர் சங்கீதத்தைக் கட்டிக் கொண்டு ஏன் அழுகிறார்? வேதபாராயணம் செய்யக்கூடாதா?” என்று கேட்டால், அதில் அர்த்தம் உண்டா? அல்லது, “செம்மங்குடி ஏன் வாய்ப்பாட்டுப் பாடுகிறார்? மோர்சிங் அல்லது பிடில் வாசிக்கக் கூடாதா?” என்று கேட்டால் அதில் தான் அர்த்தம் இருக்குமா?

தமிழிசைக்காரர்களைப் பார்த்து “மற்ற வழிகளில் தமிழை வளருங்கள் ” என்று சொல்வதும் அவ்வளவு அர்த்தமான விஷயந்தான்.

நன்றி: தினமணி கதிர், இசைச் சிறப்பிதழ் 12.12.1999.

Comments (0)
Add Comment