கலைஞரால் ஈர்க்கப்பட்டவன் நான்!

நடிகர் ரஜினிகாந்த்

கலைஞர் – 100 விழா

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா ‘கலைஞர் 100’ என்ற பெயரில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.

விழாவில் தமிழக சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான ரஜினி, கமல் இருவருமே கலந்து கொண்டனர்.

இவர்களுக்கு அடுத்த நிலையில் உள்ள விஜயும், அஜித்தும் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.

ஆனால் அதிசயமாக பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை தவிர்த்து வரும் நடிகை நயன்தாரா இந்த நிகழ்ச்சியில் ஆஜராகி இருந்தார்.

தனது படம் சம்மந்தப்பட்ட எந்த விழாவுக்கும் வராத நயன்தாரா, இந்த விழாவில் பங்கேற்றது, திரை உலகப் பிரமுகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

இவ்விழாவில் பேசிய  ரஜினிகாந்த் கலைஞர் கருணாநிதி குறித்து பேச ஆரம்பித்தால் எங்கு ஆரம்பிப்பது எங்கு முடிப்பது என்று எனக்கு தெரியவில்லை.

அந்த அளவுக்கு அவரால் ஈர்க்கப்பட்டவன் நான். எம்.ஜி.ஆருக்கு பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் கலைஞர்.

சிவாஜியை ஒரே படத்தில் ஸ்டார் ஆக்கியவர் கலைஞர் அரசியலுக்கு செல்லாமல் சினிமாவிலேயே இருந்திருந்தால் எத்தனையோ எம்.ஜி.ஆரை, சிவாஜியை உருவாக்கி இருப்பார்.

ஒருவருக்கு எழுத்தாற்றல் இருந்தால், பேச்சாற்றல் இருக்காது. ஆனால் கருணாநிதிக்கு இந்த இரண்டுமே இருந்தது.

தேர்தலில் இரட்டை இலைக்கு ஓட்டுப்போட்டு வந்த பிரபல நடிகர் ஒருவருக்கு அன்று மாலை கலைஞருடன் படம் பார்க்க வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் எப்படி செல்வது என்று தெரியாமல் குளிர் காய்ச்சல் என்று சொல்லிவிட்டார் அந்த நடிகர். ‘அந்த நடிகர் வந்தால்தான் நான் படம் பார்ப்பேன்’ என்று கருணாநிதி பிடிவாதமாக கூறிவிட்டார்.

அந்த நடிகர் தியேட்டருக்கு சென்றபோது, ‘வாங்க.. காய்ச்சல்ன்னு சொன்னீங்களாமே.. ‘சூரியன்’ பக்கத்துல உட்காருங்க’ என்று சொன்னார் கலைஞர்.

அந்த நடிகர் வேறு யாருமல்ல. நான் தான்’ என ரஜினிகாந்த் சொன்னபோது கூட்டத்தில் கரஒலி.

எனது நெருங்கிய நண்பர் விஜயகாந்தின் இறுதிச் சடங்கை சிறப்பான முறையில் நடத்திக் கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்’ என்று கூறி தனது பேச்சை ஆரம்பித்தார், உலக நாயகன் கமல்ஹாசன்.

‘முதலமைச்சரின் இந்த பண்பு கலைஞரிடமிருந்து வந்தது. என்னுடைய தமிழ் ஆசான்கள் மூன்று பேர்.
அவர்கள், கருணாநிதி, எம்.ஜி.ஆர். சிவாஜி.

எம்.ஜி.ஆர், சிவாஜி என்ற இரு ஆளுமைகளையும் தனது வசனங்கள் மூலம் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாய் மாற்றியவர் கருணாநிதி’ என குறிப்பிட்டார், கமல்ஹாசன்.

விழாவில் பங்கேற்ற திரை உலகத்தினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி தெரிவித்து பேசினார்.

அப்போது அவர், ‘பூந்தமல்லியில் 140 ஏக்கர் பரப்பில் 500 கோடி ரூபாய் மதிப்பில் நவீன திரைப்பட நகரம் அமைக்கப்படும்’ என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

அப்போது கரகோஷத்தால், விழா நடைபெற்ற கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானமே குலுங்கியது.

-பாப்பாங்குளம் பாரதி.

Comments (0)
Add Comment