காதல் சொல்ல வந்தேன் – ‘அண்டர்ரேட்டட்’ யுவன் இசை!

இரண்டு வித்தியாசமான திரையாளுமைகள் ஒன்றுசேரும்போது திரையில் ஒரு மாயாஜாலம் நிகழும். அதுவே, அந்த ஆளுமைகளை மேலும் கொண்டாடுவதற்கான வாய்ப்புகளை அள்ளித் தரும்.

அப்படியொரு திரைப்படமாகத் தோற்றம் தந்தது பூபதி பாண்டியன் இயக்கிய ‘காதல் சொல்ல வந்தேன்’.

திரையில் இளைய தலைமுறைக்கேற்ற நகைச்சுவையை அள்ளித் தெளிப்பதில் வல்லவர் என்ற பெயரை அவர் பெற்றிருந்தார்.

இளையோருக்குப் பிடித்தமான இசையைத் தருவதில் பெயர் பெற்ற யுவன் சங்கர் ராஜா உடன் அவர் கூட்டணி அமைக்கக் காரணமாக இருந்தது அப்படம்.

நிறைக்கப்பட்ட காதல்..!

இளம் நாயகன், நாயகியைக் கொண்டு உருவாக்கப்படுகிற படங்களில் காதலே முதன்மையாக இருக்க வேண்டுமென்பது திரையுலகில் ஒரு விதியாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கிறது. அதிலிருந்து விலகி நின்ற படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

எதிர்பாலின ஈர்ப்பும் நட்பும் ஒன்றுக்கொன்று நேரெதிரான குணாதிசயங்கள் கொண்டவர்களிடையே ஏற்படுகிற மோதலுமே வளரிளம் பருவத்தின் அடையாளங்களாகத் திரையில் முன்னிறுத்தப்பட்டதன் விளைவு அது.

     

அப்படியொன்றாக அமைந்தது ‘காதல் சொல்ல வந்தேன்’. இதில் பாலாஜி பாலகிருஷ்ணன் நாயகனாகத் தோன்றியிருந்தார். ஏற்கனவே ‘ஜோ’ என்ற பாத்திரத்தில் ‘கனா காணும் காலங்கள்’ முதல் சீசனில் அவர் புகழ் பெற்றிருந்தார்.

‘உதிரிப்பூக்கள்’ சுந்தர்ராஜ் – ‘வைதேகி காத்திருந்தாள்’ பிரமிளாவின் மகளான மேக்னா இதில் நாயகியாக நடித்திருந்தார்.

ஒல்லிப்பிச்சானாகத் தெரிகிற நாயகன், அருகே கொஞ்சம் ‘கொழுக் மொழுக்’ உருவத்தில் நாயகி. அந்த இணையே ‘அக்கா – தம்பி’ போலத் தோற்றம் தரும். அதையே படத்திற்கான அடிப்படையாக வைத்திருந்தார் இயக்குநர் பூபதி பாண்டியன்.

கல்லூரியில் தனக்கு ‘சீனியர்’ ஆக இருக்கிற பெண்ணைக் காதலிக்கிற ‘ஜூனியரின்’ காதலே இப்படத்தின் அடிநாதம்.

அதில் துள்ளல், கொண்டாட்டம் இருக்குமளவுக்குச் சோகமும் சங்கடங்களும் நிறைந்திருக்கும். அதையும் சேர்த்துச் சொன்னதில் தவறில்லை.

ஆனால், ரசிகர்கள் ஏற்க முடியாத அளவுக்கு அது ‘மிகை’யாகத் தெரிந்தது தான் ‘கா.சொ.வ.’ படத்தின் பலவீனமாகிப் போனது.

சுந்தர்.சி இயக்கிய ‘அழகான நாட்கள்’, ‘வின்னர்’, ‘கிரி’ படங்களுக்கு வசனம் எழுதியவர் பூபதி பாண்டியன். அந்தப் படங்களில் நகைச்சுவை விழுந்து விழுந்து சிரிக்கத்தக்க ரகத்தில் இருக்கும்.

பூபதி பாண்டியனே இயக்கிய ‘தேவதையைக் கண்டேன்’, ‘திருவிளையாடல் ஆரம்பம்’, ‘மலைக்கோட்டை’ படங்களிலும் கூட நகைச்சுவை ‘அபாரமானதாக’ வெளிப்பட்டிருக்கும்.

அப்படியொரு நகைச்சுவையோடு இளமைக் கொண்டாட்டமும் நிறைந்திருக்கும் என்ற எதிர்பார்ப்பைத் திரையில் வெளியாகும் முன்னர் உருவாக்கியிருந்தது ‘கா.சொ.வ.’ திரைப்படம்.

ஆனால், இப்படத்தில் காதலே பிரதானமாகக் காட்டப்பட்டிருந்தது. அது ரசிகர்களைச் சோர்வடையச் செய்தது.

அதேநேரத்தில் இதனை வழக்கமான கமர்ஷியல் படம் இல்லை என்றும் சொல்லிவிட முடியாது. அந்தளவுக்குக் குறைந்தபட்ச உத்தரவாதத்தைத் தருகிற வகையில் காமெடி, ரொமான்ஸ், செண்டிமெண்ட் என அனைத்து அம்சங்களும் மிக லாவகமாகத் திரைக்கதையில் கையாளப்பட்ட படமிது.

அனைத்துக்கும் மேலாகக் காட்சிகளை ஒன்றிணைக்கிற வகையில் இதில் யுவனின் பின்னணி இசை அமைந்திருந்தது. ஆங்காங்கே வருகிற சலிப்பைத் துரத்தியடிக்கிற வகையில் பாடல்களும் இருந்தன.

துள்ளல் இசை!

1997ஆம் ஆண்டு ‘அரவிந்தன்’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார் யுவன் சங்கர் ராஜா. தொடர்ந்து வேலை, கல்யாண கலாட்டா, பூவெல்லாம் கேட்டுப்பார், உனக்காக எல்லாம் உனக்காக படங்களைத் தந்தார்.

இவையும் கூட ‘ஹிட்’ ஆல்பங்கள் தான். ஆனால், யுவனைத் தனித்துவமானவராகத் திரையுலகமோ, ரசிகர்களோ அடையாளம் காணவில்லை.

ஆனால், 2001இல் வெளியான ‘தீனா’ அவரைத் தனித்துவமாகக் காட்டியது. ‘யுவனிசை’ என்ற வார்த்தையைக் கொண்டாடுவதற்கான தொடக்கத்தைத் தந்தது.

அதன்பிறகு யுவன் ஒவ்வொரு ஆண்டு சுமார் பத்து படங்களில் இசையமைத்தார் என்றால், அவற்றில் 50% வெற்றிப்படங்களாக இருந்தன. அப்படங்கள் ‘ட்ரெண்ட்செட்டர்’களாகவும் இருந்தன.

நந்தா, துள்ளுவதோ இளமை, ஏப்ரல் மாதத்தில், காதல் கொண்டேன், புதுக்கோட்டையிலிருந்து சரவணன், 7ஜி ரெயின்போ காலனி, ராம், அறிந்தும் அறியாமலும்,

மன்மதன், கண்டநாள் முதல், சண்டகோழி, பட்டியல், புதுப்பேட்டை, வல்லவன், தீபாவளி, பருத்திவீரன், சென்னை 600028, கற்றது தமிழ், பில்லா, யாரடி நீ மோகினி, சரோஜா,

சிவா மனசுல சக்தி, பையா, நான் மகான் அல்ல, பாஸ் என்கிற பாஸ்கரன் ஆகியவற்றை அந்த வரிசையில் சேர்க்கலாம். இவற்றில் சில ‘ப்ளாக்பஸ்டர்’ வெற்றிகளாக அமைந்தவை.

இன்னும் சில ‘சுமார்’ வெற்றிகளாக, ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற பாடல்களைக் கொண்டதாக இருந்தன.

அப்படிப்பட்ட படங்களில் இருக்கிற பாடல்களைக் கேட்டால், இப்போது ‘அண்டர்ரேட்டட்’ யுவனிசை ஆகத் தென்படும். அவற்றுள் ஒன்று ‘கா.சொ.வ.’ பாடல்கள்.

‘ஓ ஷலா’, ‘என்ன என்ன ஆகிறேன்’, ‘ஒரு வானவில்லின் பக்கத்திலே’ பாடல்கள் காதல் உணர்வில் திளைக்கிற இளம் மனதின் துள்ளலை நமக்குள் நிறைக்கும்.

அதே நேரத்தில் ‘அன்புள்ள சந்தியா’ பாடல் காதல் இணையைப் பிரிந்த துக்கத்தை நமக்குள் விதைக்கும்.

‘சாமி வருகுது’ பாடல் அப்படியே ‘பக்திப் பாடல்’ தொனியில் ஒலிக்கிற இளமைத் துள்ளல்.

இதுபோக ‘ஏதோ ஒன்று உன்னை நோக்கி கூட்டிச் சென்றதே’ என்ற துணுக்குப் பாடல் சோகத்தைப் பிழியும் விதமாக இடம்பெற்றிருக்கும்.

உண்மையைச் சொன்னால், இப்பாடல்கள் அனைத்துமே திரும்பத் திரும்பக் கேட்கிற ரகம் தான். இப்படம் வெளியாக காலகட்டத்தில் தொடர்ந்து தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகியும் வந்தன.

ஆனால், இப்படம் பெரிய வரவேற்பைப் பெறாத காரணத்தினால் பாடல்களைக் கேட்கிற விருப்பமும் மெல்லத் தேய்ந்து போனது.

வயதில் மூத்த பெண்ணை ஒரு இளைஞன் காதலிப்பதாகக் கதை சொன்னதும் பெரும்பாலான ரசிகர்களை ஈர்க்கவில்லை.

சிம்புவின் ‘வல்லவன்’, ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ இப்படியான பாத்திர வார்ப்பைக் கொண்டவை தான்.

சமீபத்தில் மேத்யூ தாமஸ், மாளவிகா மோகனன் நடிப்பில் மலையாளத்தில் வெளியான ‘கிறிஸ்டி’யும் கூடக் கிட்டத்தட்ட இதே போன்றதொரு கதைக்களத்தைக் கொண்டது தான்.

ஆனாலும், ‘வி.தா.வ.’ தவிர வேறெதுவும் வரவேற்பைப் பெற்றதாகத் தகவல் இல்லை. அந்தப் படத்திலும் கூட, வயது வித்தியாசத்தை மீறிப் பெருங்காதலில் ஊறித் திளைப்பதுவே பிரதானமாகச் சொல்லப்பட்டிருந்தது.

‘கா.சொ.வ’ படத்திலோ பதின்பருவத்து ஈர்ப்பைக் காட்டச் செய்கிற விளையாட்டுகள், சேட்டைகள் அளவுக்கு மீறினால் ஆபத்து என்று சொல்லியிருந்தது.

அதுவரை சொன்ன கதையில் இருந்து அம்முடிவு விலகி இருந்ததாலும், படம் வெற்றியைச் சுவைக்கவில்லை.

இளையராஜா போலவே, தான் இசையமைக்கிற படங்களில் காலம் கடந்தும் ரசிக்கிற வகையில் குறைந்தபட்சமாகச் சில பாடல்களையாவது தருகிற வழக்கம் யுவனிடம் உண்டு.

சில படங்களில் அனைத்து பாடல்களுமே அந்த ரகத்தில் இருக்கும். அதிலொன்று, பூபதி பாண்டியனின் ‘காதல் சொல்ல வந்தேன்’.

இன்றைய ஜென்ஸீ தலைமுறையினரிடையே ‘யுவனிசை’க்கு எத்தகைய இடம் தரப்படுகிறது என்று தெரியவில்லை.

ஆனால் 80கள் மற்றும் தொண்ணூறுகளின் குழந்தைகளுக்கு அவரது இசைதான் வழிகாட்டியாக, நட்பாக, உறவாகத் துணை நின்றிருக்கிறது.

‘அப்படியெல்லாம் இல்லை’ என்று சொல்ல வருகிறீர்கள் என்றால், அதற்கு முன்பாக ஒரே ஒரு முறை ‘கா.சொ.வ.’ படத்தின் பாடல்களை ஓடவிட்டுக் கண்களை மூடிக்கொள்ளுங்கள்.

அதன்பிறகு ‘ரசிக்கவா, வேண்டாமா’ என்ற கேள்வி துளியளவு கூட மனதில் எழாது. அதுவே ‘யுவனிசை’யின் வெற்றி…!

– மாபா

 

Comments (0)
Add Comment