தமிழர் கலாச்சாரத்தைத் தவறாகக் காட்டுகிறதா ‘ஜாக்கி’?

அம்மு அபிராமி, சரண்யா ரவிச்சந்திரன், யுவன் கிருஷ்ணன், ரிதன் கிருஷ்ணதாஸ், மதுசூதன் ராவ், யோகி நடிப்பில், பிரபகல் என்பவர் இயக்கி இருக்கும் படம் ‘ஜாக்கி’.

பி.கே 7 ஸ்டுடியோஸ் சார்பில் பிரேமா கிருஷ்ணதாஸ், தேவதாஸ், ஜெயா தேவதாஸ் தயாரித்திருக்கிறார்கள்.

மதுரைப் பகுதியில் கிடா சண்டையில் ஜெயிக்கும் கிடாவின் சொந்தக்காரனாக இருப்பது பெரிய கவுரவம் என்ற நிலையில் அந்த கவுரவத்தைப் பெற முழுமூச்சாகப் போராடும் நபர்களைப் பற்றிய படம் இது.

கிடாச் சண்டை நடத்தும் அமைப்பின் முக்கிய நபர் ஒருவரின் (மதுசூதன் ராவ்) உறவினர் காப்ரா கார்த்தி (ரிதன் கிருஷ்ணதாஸ்). ஒவ்வொரு முறையும் கிடாச் சண்டையில் ஜெயிப்பவன்.

வேறு யாரும் ஜெயித்தால் அவனுக்கு பிடிக்காது. தவிர தன்னிடம் மோத வரும் கிடாயின் உரிமையாளருக்கு ஒரு கவுரவமும் அந்தஸ்தும் இருக்க வேண்டும் என்று நினைப்பவன்.

கிடாச் சண்டையால் உருவான பகையில் அப்பாவும் அக்கா கணவனும் இறந்துவிட, ஷேர் ஆட்டோ ஓட்டிக் கொண்டே கிடாச் சண்டையில் தீவிரமாக ஈடுபடுபவன் ராமர் (யுவன் கிருஷ்ணன்). அக்காவும் (சரண்யா ரவிச்சந்திரன்) அக்கா மகளும் ராமருடன் இருக்கிறார்கள்.

ஒரு முறை கிடாச் சண்டையில் காபரா கார்த்திக்கின் அணுகுண்டு என்ற பெயர் கொண்ட ஆட்டுக் கிடாவை ராமரின் காளி என்ற கிடா முட்டி கொம்பை உடைத்து விடுகிறது.

அதை அவமானமாக எண்ணி அணுகுண்டை வெட்டிக் கொள்கிறான் கார்த்தி. (எம்.ஜி.ஆர் நல்ல நேரம் படத்தில் ஓட்டப் பந்தயத்தில் தோற்றுப் போன யானையை மேஜர் சுந்தர்ராஜன் சுட்டுக் கொல்வாரே அப்படி).

அடுத்த சண்டையில் கலந்துகொள்ள இன்னொரு ஆட்டைத் தயார் செய்கிறான் கார்த்தி.

சண்டையில் தோற்கிற ஆட்டை ஜெயித்தவனுக்கே கொடுத்து விட வேண்டும் என்று பந்தயமும் வைக்கிறான்.

கார்த்தி கொண்டு வந்த புதிய கிடா, ராமரின் கிடாவான காளியை வீழ்த்துகிறது.

உயிராபத்துக்குப் போகும் காளியை, இழுத்துச் செல்கிறார்கள் கார்த்தியின் ஆட்கள்.

அதுவரை பாசம் காட்டி(?) வளர்த்த கிடா இல்லாமல் வீட்டுக்குப் போகும் ராமர் உடைந்து போகிறான்.

ஒரு நிலையில் தான் ஏமாற்றப்பட்டது ராமருக்கு தெரிய வருகிறது. என்ன ஏமாற்றம்? அதன் விளைவாக என்ன நடந்தது என்பதே படத்தின் இரண்டாம் பாதி.

ஆட்டுக்கிடாச் சண்டையைக் காட்சிப்படுத்தியிருக்கும் விதத்தில் இயக்குநர் பிரபகல் மற்றும் படக் குழுவினரின் உழைப்பு பிரம்மிக்கத்தக்கது. கொண்டாடத் தக்கது.

ஏனெனில் என்னதான் பயிற்சி கொடுத்தாலும் மூர்க்கமான ஆட்டுக் கிடாக்களை வைத்து ஒரு சாதாரண ஷாட் எடுப்பதே, சிரமமான, கவனமாகச் செய்ய வேண்டிய விஷயம்.

அப்படி இருக்க, ஆட்டுக் கிடாக்களின் நிஜமான சண்டையைக் காட்சிப்படுத்துவது எளிதான விஷயம் இல்லை.

இதை விட முக்கியமான விஷயம், படத்தின் நடிகர்களை அந்த ஆட்டுக்கு கிடாக்களோடு பழக்குவதும் மற்ற நடிகர்களை அவற்றுடன் நடிக்க வைப்பதும் ரொம்ப கவனமாக கஷ்டப்பட்டு செய்ய வேண்டிய விஷயம்.

மூன்று ஆண்டுகளில் அதை சாத்தியப்படுத்தி இருக்கும் இந்தப் படக்குழுவின் உழைப்பு அற்புதமானது. வாழ்த்துகள்; பாராட்டுகள்!

வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் படத்தில் கோழிச் சண்டை. இந்தப் படத்தில் ஆட்டுக் கிடாச் சண்டை. 

ஆனால், வெற்றிமாறன் படத்தில் இருந்த நேர்த்தி… மேக்கிங்.. இதில் இல்லை.

சண்டைதான் என்றாலும் அந்த கோழிச் சண்டை ஒரு மண்ணின் கலாச்சாரத்தை சொல்கிறோம் என்று வரும்போது, அதன் கண்ணியத்தைக் கெடுக்காத வில்லத் தனத்தைத்தான் வில்லன்கள் செய்வார்கள்.

இதில் அந்த நேர்த்தி, அந்த தரம், கலாச்சார மரியாதை இல்லை.

அதனால் நாம் ஒரு கலாச்சாரப் பின்னணியில் நிகழும் படத்தைப் பார்த்துக் கொண்டு இருக்கிறோம் என்ற உணர்வு நழுவிப் போய், லாஜிக் இல்லாத, மசாலாப் படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பது புரிகிறது. 

ஜாக்கி என்ற பெயர் வைத்த படத்தில் திரைக்கதையை ஜாக்கி போட்டுத் தூக்கி நிறுத்த வேண்டாமா சேட்டன்ஸ்?

முதல் பாதியில் ராமரின் கிடா  தோற்றுப் போனதற்குறிய காரணம் என்னவாக இருக்கும் என்பதை எல்லோராலும் யூகிக்க முடியும் அளவுக்கு சாதாரணமாக இருக்கிறது.

அதாவது முதல் பாதி ஆடுகளம் என்றால் இரண்டாம் பாதி தாய்க்குப் பின் தாரம் உள்ளிட்ட படங்களில் வந்த விஷயம்தான்.

அம்மு அபிராமி, சரண்யா ரவிச்சந்திரன், மதுசூதன ராவ் ஆகியோர் மட்டும் கொஞ்சம் சூதானமாக நடித்து இருக்கிறார்கள்.

படத்துக்கு எந்த பலனும் தராத காதல் டிராக் வருகிறது. 

படத்தில் நாயகனுக்கு சில அட்டகாசமான சிச்சுவேஷன்களை எழுதி இருக்கிறார் இயக்குநர் பிரபகல்.

ஆனால், ஹீரோவாக நடித்து இருக்கும் யுவன் கிருஷ்ணன், சுவர் மாதிரி நிற்கிறார். மற்றவர்கள் நடிப்பதைப் பார்க்கவாவது செய்யலாம். அதை பார்க்கக் கூட மாட்டேன் என்கிறார்.

பீரங்கி முன்னாள் அவரை நிறுத்தி, நடிக்கலன்னா சுட்டுப் பொசுக்குவோம் என்று சொன்னால் கூட நடிப்பாரா என்று தெரியவில்லை.

படத்தின் இயக்குநர் பிரபகல் ”நான் மலையாளியாக இருந்தாலும் தமிழ் சினிமாவுக்கு ஒரு பரிசாக இந்தப் படத்தைக் கொடுத்து இருக்கிறேன்” என்றார்.

மதுரை மண்ணில் நடக்கும் இந்தக் கதையில் ஹீரோ, வில்லன் எல்லோரும் மலையாளிகள்.

அவர்கள் மலையாளியாக இருப்பது கூட ஓகே, ஆனால் மலையாளியாகவே தெரிகிறார்கள்.

மற்ற கேரக்டர்கள் எல்லாம் மாநிறமாக அல்லது கருப்பாக மண்ணின் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமாக இருக்க, ஹீரோ, வில்லன் இருவரும் சம்மந்தமே இல்லாமல் இருக்கிறார்கள்.

படத்தில் வில்லனாக நடித்திருக்கும் ரிதன் கிருஷ்ணதாஸ் ஹீரோ கேரக்டருக்கு இன்னும் பொருத்தமாக இருந்திருப்பார்.

அவரை ஹீரோவாகப் போட்டு விட்டு, யுவன் கிருஷ்ணனை வில்லனாகப் போட்டிருந்தால்கூட, நன்றாக இருந்திருக்கும். ரிதன் கிருஷ்ணதாஸ்  நன்றாகவே நடிக்கிறார்.

இதுவும் போகட்டும். “ஜல்லிக்கட்டு போல கிடாச் சண்டையும் வீர விளையாட்டு” என்கிறார் இயக்குநர்.

ஜல்லிக்கட்டு என்பது கூர் தீட்டப்பட்ட கொம்புகளோடு பாய்ந்து வரும் மாட்டை மனிதன் வெறும்கையால் வீரத்தோடு எதிர்கொள்ளும்  வீர விளையாட்டு.

ரெண்டு ஆடுகளை முட்டிக்கொள்ள வைத்து எது மண்டை பிளந்து சாகிறது என்பதை வைத்து அதை வளர்க்கும் மனிதரில் யார் வெற்றியாளர் என்று முடிவு செய்வது எப்படி வீர விளையாட்டாகும்? 

வீர விளையாட்டு பற்றிய புரிதலே இல்லாமல் கிடாச் சண்டை படத்தை எடுத்து இருப்பவர்கள் எப்படி எழுதி இருப்பார்கள் என்பதை புரிந்துகொள்ள முடியும். எனவேதான் இரண்டாம் பகுதி ரொம்ப கவலைக்கிடமாகப் போய்விட்டது.

கிடாச் சண்டை மூலம் மதுரையின் கலாச்சாரத்தை நான் வெளியே சொல்கிறேன் என்று சுயமாக பேட்ச் குத்திக் கொண்டு இருக்கிறார் இயக்குநர் பிரபாகல்.

ஆனால் கிடாச் சண்டையில் தோற்றவன் ஜெயித்தவன் வீட்டுக்குப் போய் அவனது அக்காவிடம் தப்பாக நடந்து கொள்வதும், வீட்டில் உள்ள சிறுமியின் காதில் உள்ள தங்கத் தோட்டை பிய்த்து இழுத்து காதை ஊனமாக்குகிறான் என்று எல்லாம் காட்சி வைத்து விட்டு,

”இதுதான் மதுரை கல்ச்சர்” என்று சொல்லும் ஓர் இன்டெலக்சுவல் அரகன்ஸ் இந்தப் படத்தில் ஸ்ட்ராங்காக இருக்கிறது.

படம் முடிந்தபோது ஒரு பத்திரிகையாளர், “இப்படிக் காட்சி வைத்து விட்டு இது மதுரையின் கலாச்சாரம் என்று சொன்னால் நியாயமா?” என்று கேட்டபோது, “அங்க இன்னும் மோசமா நிறைய இருக்கு. அடுத்தடுத்த படங்களில் சொல்வேன்” என்றார் இயக்குநர்.

வேறொரு எந்த மாநிலத்திலாவது மற்ற மாநிலத்தில் இருந்துபோன ஒருவர், அந்த மாநிலத்தின் கலாச்சாரம் என்ற பெயரில் தவறான விஷயம் ஒன்றைச் சொல்லிவிட்டு, அடுத்த படத்தில் இன்னும் சொல்வேன் என்று சொல்ல முடியுமா?

திரைக்கதையில் முதலில் ஹீரோவின் கிடா ஜெயிக்கிறது. அப்புறம் வில்லனின் கிடா ஜெயிக்கிறது.

எனவேதான் எப்படி ஹீரோவின் ஆடு தோற்க முடியும் என்ற கேள்வி வரும்போதுதான் என்ன நடந்து இருக்கும் என்று யூகிக்க முடிகிறது.

அதையே முதலில் வில்லனின் கிடா ஜெயிக்கிறது அடுத்து ஹீரோவின் ஆடு ஜெயிக்கிறது என்று திரைக்கதை அமைத்து இருந்தால் அடுத்து நடப்பவற்றை யூகிக்க முடியாமல்போயிருக்கும்.

இரண்டாம் பாதி இவ்வளவு பலவீனமாக ஆகி இருக்காது.

ஆனால், இவர்களுக்கு அந்த சிந்தனை எல்லாம் இல்லை. மதுரையின் கதையில் மதுரைக்காரன் என்ற தோற்றத்துக்கு பொருத்தமே இல்லாத ஆட்களை ஹீரோவாகப் போடவேண்டும்;

மதுரையின் கலாச்சாரத்தை சொல்கிறோம் என்ற பெயரில் சண்டைக் கிடாக்களை வளர்ப்பவர்கள், சின்னப் பிள்ளையின் காதை அறுத்துத் தோடுகளைப் பறிக்கவும் தயங்க மாட்டர்கள் என்று சொல்வதில் மட்டுமே குறியாக இருந்திருக்கிறார்கள்.

என்.எஸ்.கே உதயகுமாரின் ஒளிப்பதிவு மிகச் சிறப்பாக இருக்கிறது. 

இதற்கு முன்பு இதே இயக்குநர் MUDDY என்ற பெயரில், சேறு சகதியில் நடக்கும் கார் பந்தயத்தை வைத்து, அட்டகாசமான மேக்கிங்கில் ஒரு படம் எடுத்து இருந்தார். MUDDY என்றால் சகதி என்று பொருள்.

உண்மையில் வித்தியாசமான சினிமா முயற்சிகளைத் தூக்கி நிறுத்தும் ஜாக்கி போல இருந்தது அந்த MUDDY. ஆனால் இந்த ஜாக்கி, வெறும் MUDDY.

– சு. செந்தில் குமரன்

ஜாக்கிஜாக்கி விமர்சனம்விமர்சனம்
Comments (0)
Add Comment