அரசியல் கட்சி பின்னணியைக் கொண்டிருக்கும் ஒரு நடிகரோ, நடிகையோ, அதற்கு முன்னர் திரையில் தோன்றியவாறு படங்களையோ, பாத்திரங்களையோ தேர்ந்தெடுக்க முடியாது.
பொதுவாழ்வில் இருக்கும் ‘இமேஜுக்கு’ தக்கவாறு திரையிலும் தோன்றுவதற்குப் பகீரதப் பிரயத்தனம் செய்ய வேண்டும். அதனாலேயே பெருங்கவனத்தைப் பெற்றது சுரேஷ் கோபி நடித்துள்ள ‘ஜானகி வி வெர்சஸ் ஸ்டேட் ஆஃப் கேரளா’ மலையாளத் திரைப்படம்.
அந்த படத்தின் டைட்டிலுக்கு சென்சார் போர்டு எதிர்ப்பு தெரிவித்ததாகச் செய்திகள் வெளியானது, அதன் மீதான கவனத்தை அதிகப்படுத்தியது.
தற்போது இப்படம் தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது. எப்படிப்பட்ட திரையனுபவத்தை இது தருகிறது?
படத்தின் கதை!
ஜானகி வித்யாதரன் (அனுபமா பரமேஸ்வரன்) என்ற பெண் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படுகிறார்.
அது தொடர்பான வழக்கு விசாரணை கீழமை நீதிமன்றத்தில் நடக்கிறது. அதில் அப்பெண்ணுக்கு எதிராக ஆஜராகிறார் வழக்கறிஞர் டேவிட் ஆபெல் டோனவன் (சுரேஷ் கோபி).
விசாரணை முடிவில், அப்பெண்ணுக்கு நிகழ்ந்த பாதிப்புக்கும் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எவ்விதச் சம்பந்தமும் இல்லை என்று முடிவாகிறது.
அந்த வழக்கில் டேவிட் முன்வைத்த வாதங்கள் பாதிக்கப்பட்டவருக்குக் கிடைக்க வேண்டிய நியாயங்களைச் சிதைத்துச் சுக்குநூறாக்குகிறது.
அப்பெண் பாலியல் அத்துமீறலுக்கு ஆளானாரா, இல்லையா? அந்த கொடூர சம்பவம் நிகழ்ந்தது என்றால் உண்மையான குற்றவாளி யார்? இக்கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது இப்படத்தின் இரண்டாம் பாதி.
திருப்தி தருகிறதா?
இந்த படத்தில் நாயகனாக சுரேஷ் கோபி நடித்திருக்கிறார். தான் சார்ந்த அரசியல் பின்னணிக்கு ஏற்பச் சில வசனங்களை உதிர்த்திருக்கிறார். அது தற்போதைய அரசியல் நிலவரம் சார்ந்தும், எதிர்கட்சிகளைச் சாடும் விதமாகவும் உள்ளது.
ஆனால், அவர் அவ்வசனங்களைப் பேசுவதற்கேற்ப காட்சிகளும் வலுவாக அமைந்திருக்க வேண்டும். அது நிகழவில்லை.
‘எங்கு சர்ச்சை வந்துவிடுமோ’ என்ற எண்ணத்தில் சில காட்சிகள் ‘பாலோ அப்’ இல்லாமல் நிர்க்கதியாய் விடப்பட்டிருக்கின்றன.
திரைக்கதையில் இடப்பட்ட சில முடிச்சுகள் கடைசிவரை அவிழ்க்கப்படவில்லை. அதுவே இப்படத்தின் பலவீனம்.
வழக்கமாக அழகுப்பதுமையாகத் தோன்றி திரையில் வசீகரிக்கும் அனுபமா பரமேஸ்வரன், இதில் பாலியல் பாதிப்புக்கு ஆளான பெண்ணாக வருகிறார். சில ஷாட்கள், காட்சிகளில் ஈர்க்கும்படியான நடிப்பைத் தந்திருக்கிறார்.
இவர்கள் தவிர்த்து திவ்யா பிள்ளை, ஸ்ருதி ராமச்சந்திரன், மாதவ் சுரேஷ், அஸ்கர் அலி, பைஜு சந்தோஷ், ஷோபி திலகன் எனப் பலர் இப்படத்தில் உண்டு. ஆனால், அவர்களுக்கான முக்கியத்துவம் திரையில் தெளிவாக உணர்த்தப்படவில்லை.
ஒளிப்பதிவாளர் ரெனதிவே, கலை இயக்குனர் ஜெயன் கிரயோன், படத்தொகுப்பாளர் சம்ஜித் முகம்மது, ஒலி வடிவமைப்பு செய்த ஸிங் சினிமா என்று பலரது உழைப்பு இப்படத்தில் வெளிப்பட்டிருக்கிறது.
ஒரு சீரியசான ‘கோர்ட்ரூம் ட்ராமா’வைப் பார்க்கிறோம் என்ற உணர்வை ஏற்படுத்தத் துணை நின்றிருக்கிறது.
கிரிஷ் நாராயணன் இசையில் பாடல்கள் ‘ஓகே’ ரகம். அதேநேரத்தில், திரையில் படம் பரபரப்பான அனுபவத்தைத் தர துணை நின்றிருக்கிறது கிப்ரானின் பின்னணி இசை.
இயக்குனர் பிரவீன் நாராயணன், சில பத்திரிகைச் செய்திகளில் இருந்து தூண்டுதல் பெற்று இப்படத்தின் திரைக்கதையை ஆக்கியிருப்பது தெரிகிறது.
இப்படமே ஜானகி என்ற பாத்திரத்தை மையப்படுத்தியது தான். அப்படியிருக்க, அப்பாத்திரத்தின் பயணம் எந்த திசை நோக்கி அமைந்துள்ளது என்பதைச் சொல்லவே திரைக்கதையில் முக்கியத்துவம் தரப்பட்டிருக்க வேண்டும்.
மாறாக, அதன் பயணத்தில் ஒரு பிரபல வழக்கறிஞர் சந்திக்கிற சில பிரச்சனைகள் எப்படிப் பாதிப்பை உண்டுபண்ணுகிறது என்று சொல்கிறது இப்படம். அதுவும் கூடத் திரையில் தெளிவாகச் சொல்லப்படவில்லை.
அந்த காரணத்தினால், இப்படத்தின் டைட்டிலுக்கு ஏற்ற திரையனுபவத்தை உள்ளடக்கம் வழங்கவில்லை.
தேவாலயத்தில் நடந்த பாலியல் அத்துமீறலில் ஒரு பாதிரியார் குற்றம்சாட்டப்பட்டிருப்பதாகச் சில விஷயங்கள் இத்திரைக்கதையில் உண்டு.
இன்றைய இளம்பெண்கள் ‘போர்னோ’ வீடியோக்கள் பார்ப்பதும் பாய்ப்ரெண்ட்களோடு எல்லை மீறிப் பழகுவதும் சரியா என்ற கேள்வியும் இக்கதை சொல்லலில் உண்டு.
சில மலையாளப் படங்களில் ஏற்கனவே இடம்பெற்றது போன்றே இதிலும் ஒரு தமிழர் பாத்திரம் இத்திரைக்கதையில் சித்தரிக்கப்பட்டுள்ளது. அப்பாத்திரம் வாழும் இடம், அங்குள்ள கலாசாரக் கொண்டாட்டங்களும் திரையில் காட்டப்படுகின்றன.
இத்திரைப்படத்தில் அது போன்ற சர்ச்சைகளை ஏற்படுத்துகிற சில பிரச்சனைகள் சொல்லபட்டுள்ளன.
அந்தப் பிரச்சனைகளைப் பட்டவர்த்தனமாகத் திரையில் சொல்லாமல் பூசி மெழுகியது ஏன்? தெரியவில்லை.
இந்தக் கதையில் சுரேஷ் கோபி, அனுபமா பரமேஸ்வரன் பாத்திரங்களைத் திரைக்கதையின் தொடக்கத்தில் சித்தரித்திருக்கிற விதம் ஒரு புள்ளி என்றால், படத்தின் முடிவில் அவை கொண்டிருக்கிற நிலைப்பாடு இன்னொரு புள்ளி என்று கொள்ளலாம்.
இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரான திசையில் இருக்கின்றன. ஆனால், அதற்குரிய நியாயத்தை திரைக்கதை வழங்கவில்லை.
அதனைச் செய்வதற்குப் பதிலாக, முழுக்க முழுக்க சுரேஷ் கோபியின் ‘அரசியல் பிம்பத்தை’த் திரையில் பூதாகரமாகக் காட்டுகிற வேலையை மட்டுமே செய்திருக்கிறது
‘ஜெ எஸ் கே – ஜானகி வி வெர்சஸ் ஸ்டேட் ஆஃப் கேரளா’. அந்த வகையில், இப்படத்தை எழுத்தாக்கம் செய்து இயக்கியிருக்கும் பிரவீன் நாராயணன் வெற்றி பெற்றிருக்கிறார்.
ஆனால், படம் பார்க்கச் செல்லும் சாதாரண ரசிகர்களைத் திருப்திப்படுத்துகிறாரா என்றால் ‘இல்லை’ என்பதே நம் பதில்.
- உதயசங்கரன் பாடகலிங்கம்