தமிழ் சினிமா உலகைப்போலவே, மலையாள சினிமாவிலும் நடிகர்கள் – தயாரிப்பாளர்கள் இடையேயான மோதல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.
இரண்டு பிராந்தியங்களிலும் ஒரே கோரிக்கைதான் – ‘நடிகர்கள், சம்பளத்தைக் குறைக்க வேண்டும்’.
‘கோலிவுட்’டில் நீண்ட நாட்களாக உள்ள இந்தப் பிரச்சினை, இப்போதுதான் ‘மோலிவுட்’டில் வெடித்துள்ளது.
மலையாளத்தில் கடந்த ஆண்டு வெளியான நிறைய படங்கள் நஷ்டத்தை எதிர்கொண்டது. இதனால் அங்குள்ள திரைப்படத் தயாரிப்பாளர்கள் நொந்து நூலாகியுள்ளனர்.
தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் ஜூன் 1 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என கேரளத் திரைப்படத் துறையினரின் கூட்டுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதனை கேரளத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் துணைத் தலைவர் சுரேஷ்குமார் அண்மையில் தெரிவித்தார்.
மாநில அரசின் அதிக கேளிக்கை வரி, ஜி.எஸ்.டி, நடிகர்கள் சம்பளம் ஆகியவை கேரள சினிமாவை முடக்கி விட்டதாகக் கூறிய அவர், அங்குள்ள உச்ச நட்சத்திரங்களைக் குறிவைத்து தாக்கினார்.
“நடிகர்கள், இயக்குநர்கள், டெக்னீஷியன்களின் சம்பளம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது – பட்ஜெட்டில் பெரும்பகுதி நடிகர்கள் சம்பளத்துக்கே போய் விடுகிறது” என்று விமர்சனம் செய்தார் சுரேஷ்குமார். இவர் முன்னாள் நடிகை மேனகாவின் கணவர். இன்னாள் பிரபலம் கீர்த்தி சுரேஷின் அப்பா.
சுரேஷ்குமார், கருத்துக்கு மலையாள சினிமாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தயாரிப்பாளர்கள் பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மோகன்லால் நடிக்கும் படங்களைப் பெரும் பட்ஜெட்டில் தயாரிக்கும் அந்தோணி பெரும்பாவூர் கூறிய கருத்து இதோ:
“இந்த வேலைநிறுத்தம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் – எதற்கும் வேலைநிறுத்தம் சரியான முடிவாக இருக்காது – தயாரிப்பாளர் சங்கம் சார்பாக, இந்த முடிவை எடுக்க சுரேஷ்குமாருக்கு யார் அதிகாரம் அளித்தார்கள் என்பது தெரியவில்லை” என்றார் அந்தோணி.
நடிகர்கள் பிருதிவி ராஜ், உன்னி முகுந்தன், பாசில் ஜோசப் ஆகியோரும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். வில்லன் நடிகர் விநாயகன், சுரேஷை கடுமையாக விமர்சனம் செய்தார்.
“சினிமா என்பது உங்கள் குடும்ப (சுரேஷ்குமார்) சொத்தா? முதலில் உங்கள் மனைவியையும், மகளையும் நடிப்பதை நிறுத்த சொல்லுங்கள். நான் நடிகன், விரும்பினால் படம் தயாரிப்பேன் – விநியோகம் செய்வேன் – இயக்கவும் செய்வேன்” என காட்டமாகக் கூறினார்.
நடிகர்கள் வேலைக்காரர்களா?
நடிகர் ஜெயன் சேர்த்தலா, தன் பங்குக்குத் தயாரிப்பாளர்களை, ஒரு பிடி பிடித்துள்ளார். இவர் மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’வில் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்.
கொல்லத்தில் நேற்று பேட்டி அளித்த அவர், “தயாரிப்பாளர்கள், தங்கள் படத்தில் நடிக்கும் நடிகர்களை வேலைக்காரர்களாகவே பார்க்கிறார்கள் – தயாரிப்பு செலவு அதிகரிப்புக்கு நடிகர்கள் காரணம் அல்ல.
தயாரிப்பாளர்கள் கஷ்டப்பட்ட நேரத்தில், அவர்களுக்கு நடிகர்கள் பணம் கொடுத்து உதவி உள்ளனர். அதையெல்லாம் மறந்து இப்போது பேசுகிறார்கள்” என்றார் அவர்.
இதற்கு பதிலளித்துள்ள சுரேஷ்குமார், “வேலைநிறுத்த முடிவு நான் எடுத்ததல்ல, அது மற்ற திரைத்துறை சங்கங்களுடன் இணைந்து நடத்திய கூட்டத்தில் எடுத்த முடிவு” என்று தெரிவித்தார்.
இந்த மோதல் எங்கு போய் முடியுமோ தெரியவில்லை.
– பாப்பாங்குளம் பாரதி.