‘தளபதி’ விஜயை இன்னொரு தளத்துக்கு உயர்த்திய படம் ‘துள்ளாத மனமும் துள்ளும்’. சிம்ரன், மணிவண்ணன், வையாபுரி உள்ளிட்டோரும் நடித்திருந்தனர்.
இந்தப் படத்தின் மூலம் எழில் இயக்குநராக அறிமுகமானார். சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி தயாரித்த இந்தப் படத்துக்கு எஸ்.ஏ.ராஜ்குமார் இசை அமைத்திருந்தார்.
இந்தப் படம் வெளியாகி வரும் 29 ஆம் தேதியுடன் 25 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.
இதையொட்டி ‘எழில் 25’ என்ற விழாவும் அவர் அடுத்து இயக்கும் ‘தேசிங்குராஜா 2’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவும் 27ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.
எழில் இயக்கிய படங்களின் தயாரிப்பாளர்கள், நட்சத்திரங்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள்.
இந்த நிலையில், திரை உலகில் தனது 25 ஆண்டு பயணம் குறித்து எழில் பேட்டி அளித்தார்.
அதிலிருந்து சில துளிகள்:
‘சார்லி சாப்ளின் நடித்த ‘சிட்டி லைட்ஸ்’ படத்தை கருவாகக் கொண்டுதான் ‘துள்ளாத மனமும் துள்ளும்’ கதையை எழுதினேன்.
முதலில் வடிவேலுவை ஹீரோவாக நடிக்க வைக்கப் பேசினோம். பிறகு வேறு சில ஹீரோக்களுக்கு கதை சொன்னேன். இறுதியில் விஜய் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
அவர் ஹீரோவாக முடிவான நிலையில், படம், வணிக ரீதியில் வெற்றி பெறுவதற்காக சில கமர்சியல் விஷயங்களை உருவாக்கினேன்.
இதுவரை 15 படங்கள் இயக்கிவிட்டேன். ‘தீபாவளி’ படத்துக்கு பிறகு இடைவெளி ஏற்பட்டுவிட்டது. இதனால் காமெடி கதைக்கு திரும்பினேன்’ என மனம் திறந்து பேசினார் எழில்.
இனிமேல் ‘துள்ளாத மனமும் துள்ளும்’ மாதிரியான படங்களை எழில் கிட்டே பார்க்க முடியாது.
– பாப்பாங்குளம் பாரதி.