கடன்களை அடைக்கவே நடிக்க வந்தேன்!

மனம் திறந்த அஜித்

‘அல்டிமேட் ஸ்டார்’ அஜித், பொதுவெளியில் தோன்றுவதை நிறுத்தி சுமார் 15 ஆண்டுகள் ஆகி விட்டன. தனது படம் தொடர்பான எந்த நிகழ்விலும் அவர் பங்கேற்பதில்லை.

செய்தியாளர்களையும் சந்திப்பது கிடையாது. அஜித் குறித்த செய்திகளை அவரது மேனேஜர் சுரேஷ் சந்திராதான், தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.

‘குட் பேட் அக்லி’ படத்தை முடித்துவிட்டு ரேஸ்களில் கலந்துகொள்ள வெளிநாடுகளுக்கு பறந்தவர், அந்த நாடுகளில் ஊடகங்களை சந்தித்து, தனது ரேஸ் வெற்றிகளைப் பகிர்ந்து கொண்டார்.

இந்த  நிலையில், சினிமாவுக்கு அஜித் ஆற்றிய பங்களிப்பிற்காக அவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.

அண்மையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, கையால் விருதைப் பெற்ற அஜித், இப்போது செய்தியாளர்களைச் சந்திக்க ஆரம்பித்துள்ளார்.

ஆங்கில இதழ் ஒன்றுக்கு அஜித் அளித்த பேட்டியில், மனம் திறந்து பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.

அதன் சாரம்:

‘நடிப்பு என் எண்ணத்தில் இருந்ததே இல்லை. நான் விபத்தில் நடிகன் ஆகி விட்டேன். சினிமாவுக்கு வருவதற்கு முன்பு ஒரு வாகன நிறுவனத்தில் பணியாற்றி வந்தேன். அப்போது ரேஸ்களில் கவனம் செலுத்தினேன்.

நான் ரேஸில் கலந்துகொள்ள தொடங்கும்போது, ​​எனக்கு 18 வயது. என் அப்பா என்னிடம், ‘அஜித், மோட்டார் ஸ்போர்ட்ஸ் மிகவும் விலை உயர்ந்தது, நான் உன்னைப் பொருளாதார ரீதியாக ஆதரிக்க முடியாது.

அதேநேரம், உன்னை என்னால் தடுக்கவும் முடியாது. நீதான் உன் வழியைத் தேடிக்கொள்ள வேண்டும்’ என்று சொன்னது எனக்கு நினைவிருக்கிறது.

நான் ரேஸ் டிராக்கில் இருந்தபோது, ​​ஒரு மாடல் ஒருங்கிணைப்பாளர் என்னை அணுகினார்.

அவர் தனது விசிட்டிங் கார்டை என்னிடம் கொடுத்து, எனக்கு மாடலிங்கில் ஆர்வம் இருந்தால் அவரைத் தொடர்புகொள்ளச் சொன்னார்.

நான் அதைப் பயன்படுத்திப் பார்க்கலாமா என்று யோசித்தேன். அங்கு நான் சம்பாதித்த பணத்தை ரேஸில் செலவிட்டேன்.

ஆரம்பத்தில், எனக்கு ஒரு தெலுங்குப் பட வாய்ப்பு கிடைத்தது – அந்த மொழி எனக்குப் பேசத் தெரியாது.

எனினும் நான் அதைத் தொடர முடிவு செய்தேன். ஆனால் என் பெற்றோர் மிகவும் கவலைப்பட்டு, ‘அஜித், நம் குடும்பத்தில் யாரும் திரைப்படத் துறையில் இருந்ததில்லை. யோசித்துப் பார்த்து முடிவு செய்’ என்றார்கள்.

நான் புகழ் அல்லது பிரபலத்தை விரும்பியெல்லாம் சினிமாவுக்கு வரவில்லை. எனது கடன்களை அடைக்கப் பணம் தேவைப்பட்டது. அதனால் நடிக்க வந்தேன்.

ஆரம்ப காலத்தில் எனது ஆங்கிலக் கலந்த தமிழ் உச்சரிப்பே பெரிய சவாலாக இருந்தது. எனது முதல் சில படங்களில் எனக்கு மற்ற நடிகர்கள் டப்பிங் பேசினார்கள்.

எனது ஆங்கில உச்சரிப்புக்காக நான் விமர்சிக்கப்பட்டேன்.

இன்றும் கூட, மிமிக்ரி கலைஞர்கள் எனது ஆரம்பக் கால பேச்சைப் பின்பற்றிப் பேசுகிறார்கள்’ என்று  வெள்ளந்தியாக அந்தப் பேட்டியில் மனம் திறந்துள்ளார் அஜித்.

– பாப்பாங்குளம் பாரதி.

Comments (0)
Add Comment