கமல் படத்தைத் திரைக்குக் கொண்டு வரும் ரஜினி!

தமிழில் வெளிவந்த இரண்டாம் பாக சினிமாக்கள் பெரும்பாலும் வெற்றி பெற்றதில்லை.

சாமி, சண்டக்கோழி, சந்திரமுகி ஆகிய படங்கள் உதாரணம். விதி விலக்காக சிங்கம் இரண்டாம் பாகம் வெற்றி பெற்று வசூலும் குவித்தது.

1996-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டாக அமைந்து வசூலில் சக்கை போடு போட்ட படம் இந்தியன்.

ஷங்கர் – கமல் கூட்டணியில் உருவான, இந்தப் படத்தின் தொடர்ச்சியாக, சுமார் 26 ஆண்டுகள் கழித்து இரண்டாம் பாகம் வெளியானது. இதன் மீது ரசிகர்களுக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால், படம் ஓடவில்லை. இதுவரை, ஷங்கர் படத்திற்கு அப்படியொரு மோசமான விமர்சனம் வந்ததே இல்லை. படத்தைத் தயாரித்த லைகா நிறுவனத்துக்கு பெரும் நஷ்டம்.

இந்தியன்-2 படத்தின் இறுதிக் காட்சியில், இந்தியன்-3 படத்திற்கான லீட் கொடுக்கப்பட்டிருந்தது. இந்தியன் 2 படம், 5 மணி நேரம் ஓடும் வகையில் எடுக்கப்பட்டிருந்தது.

இதனைப் பாதி பாதியாக பிரித்த ஷங்கர், இன்னொரு பாதியை மூன்றாம் பாகமாக வெளியிட முடிவெடுத்தார்.

இந்தியன்-3 படத்தின் 90% பணிகள் ஏற்கனவே எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தியன்-2 படத்தின் தோல்வியால் மீதம் இருக்கும் பணிகளை முடிக்க, லைகா நிறுவனம் விரும்பவில்லை.

இந்த நிலையில் இந்தியன்-3 படத்தின் எஞ்சிய படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கப்பட உள்ளதாக கோடம்பாக்கம் வட்டாரத்தில் செய்திகள் உலவுகின்றன. லைகா நிறுவனத்தின் பல படங்களில் நடித்துள்ள ரஜினிகாந்த் இதற்கான முயற்சியை எடுத்ததாகக் கூறப்படுகிறது.

ஷங்கர் மீதும் கமல் மீதும் தனிப்பட்ட நெருக்கம் வைத்துள்ள ரஜினி, மூன்றாம் பாகம் நிச்சயம் நன்றாக வரும் என நம்புகிறார்.

இது குறித்து ஷங்கர் தரப்பில் கேட்டபோது, இந்தியன்-3 படப்பிடிப்பைத் தொடங்குவது குறித்து தயாரிப்பாளருடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகத் தெரிவித்தனர்.

– பாப்பாங்குளம் பாரதி.

Comments (0)
Add Comment