இசைஞானி இல்லத்தில் ஒரு சோக ராகம்!

இதமாக இதயத்தை வருடிச் செல்லும் கிராமியக் குரல்வளம்! அதிகப் பாடல்களை பாடா விட்டாலும், பத்தே படங்களில் பாடிய தியாகராஜ பாகவதர் இன்னும் நினைவு கூறப்படுவதைப் போல பவதாரிணி பாடல்களும் நினைவு கூறப்பட்டு நெஞ்சில் நிலைக்கும்! அழியாத அமுத கீதங்களை தந்துள்ள பவதாரிணி குறித்த ஒரு பார்வை;

இத்தனை ஆண்டுகளாய் தமிழ் இதயங்களை குளிர்வித்து வந்த இசைஞானி இளையராஜா வீட்டு வீணை நரம்பில் ஒன்று அறுந்து போனது.

அவர் மகள் பவதாரிணி உடல் நலக் குறைவு காரணமாக 24-ந்தேதி இலங்கை கொழும்பு லங்கா ஆயூர்வேத மருத்துவமனையில் காலமானார்! இலங்கையில் அவர் பித்தப்பை புற்று நோய்க்காக சிகிச்சை பெற்று வந்தார்.

சில வருடங்களுக்கு முன்பு அவருக்கு வயிற்று வலி இருந்திருக்கிறது. அது பித்தப் பை கல் என்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். பிறகு தான் பித்தப்பை புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது!

அதுவும், அது நான்காவது முற்றிய நிலை என்பது தாமதமாக கண்டறியப்பட்டுள்ளது. ஆயுர்வேத சிகிச்சைக்காக அவர் இலங்கை சென்றிருந்தார்.

1976-ம் ஆண்டு ஜூலை 23ம் தேதி பிறந்த பவதாரிணி பள்ளியில் இருந்த நேரத்தை விட தந்தையின் ஸ்டுடியோவில் இருந்த நேரமே அதிகம்.

சிறு வயதில் இருந்தே அவர் தந்தை இசை அமைக்கும் போது வேறு ஒரு பாடகர் பாடுவதற்கு உதவியாக ட்ராக் பாடல் பாடி வந்துள்ளார்.

மைடியர் குட்டி சாத்தான் (1984) படத்தில் “தித்தித்தை தாளம்” என்கிற பாடல் மூலம் அவர் குரல் முதன்முதலாய் ஒலித்தது. அதனை தொடர்ந்து வெளிவந்த “என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு” (1988) என்கிற படத்தில் “குயிலே, குயிலே குயிலக்கா” என்கிற பாடல் மூலம் இசைஞானியின் வீட்டுக் குயில் ஒன்று தமிழர்கள் காதுகளுக்கு அறிமுகமாகிப் பிரபலமானது.

மணிரத்னம் இயக்கிய அஞ்சலி (1990) படத்து அனைத்து (ஐந்து) பாடல்களிலும் இவரின் குரல் ஒலித்தது.

பாரதி திரைப்படத்தில் “மயில் போலப் பொண்ணு ஒன்னு” என்ற இவர் பாடிய பாடல் இவருக்குச் சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதைப் பெற்றுத்தந்தது.

பிரபுதேவா நடிப்பில் 1995ஆம் ஆண்டு வெளியான ‘ராசய்யா’ படத்தில் வரும், ‘மஸ்தானா மஸ்தானா’ பாடல் பவதாரிணிக்கென்று தனித்தன்மை வாய்ந்த அடையாளக் குரல் ஒன்று இருக்கிறது என்பதை உணர்த்தியது. அழகி படத்தில் ‘ஒளியிலே தெரிவது தேவதையா’ அவரது தனித்த குரல் வளத்தை வெளிப்படுத்தக் கூடிய பாடலாகும்!

அது போலவே காதலுக்கு மரியாதை படத்தின் “என்னை தாலாட்ட வருவாளோ” என்ற பாடலின் மூலம் தமிழ் ரசிக நெஞ்சங்களை தாலாட்டி இருப்பார்.

எம். குமரன் படத்தின் அய்யோ.. அய்யோ என்கிற பாடல் வேறு ஒரு ரகம். உதித்நாராயணன் ஒரு பிட்சில் பாடலை பாட, இவர் பவ்யமாய் ஒரு ஸ்வரத்தில் ஆடம்பரமில்லாமல் பாடி இருப்பார்!

அநேகன் படத்து “ஆத்தாடி ஆத்தாடி செம்பருத்தி பூக்காரி” என்கிற பாடலும் இவரின் தனித்த குரல் வளத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு!

அதேபோல், ஆயுத எழுத்து படத்தின் “யாக்கைத் திரி”, காக்க காக்க படத்தின் “என்னைக் கொஞ்சம் மாற்றி” போன்ற தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க பாடல்களை அவர் பாடியுள்ளார்.

இளையராஜா மட்டுமின்றி, கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், தேவா, சிற்பி ஆகியோரது இசையிலும் 30 படங்களுக்கும் மேல் பாடல்களைப் பாடியுள்ளார்.

அவர் பெரும்பாலான தொலைக்காட்சி பேட்டிகளில் சற்று வெட்கத்துடன் மிகவும் அடக்கமாகவே பதில் அளித்துள்ளார்.

பேட்டியில் “சிறுவயதில் உங்கள் தந்தையோடு பொழுதைக் கழித்ததுண்டா?” என்கிற கேள்விக்கு, “வாரம்தோறும் ஞாயிற்றுக் கிழமை கோல்டன் பீச்சுக்கு குடும்பத்தோடு செல்வோம்.

அங்கு எங்கள் தந்தைக்கு என்று பிரத்தியேகமாய் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் அரை ஒன்றில் தங்கியிருந்து இசை கம்போசிங் செய்துகொண்டே எங்களோடும் பொழுதை கழிப்பார் அப்பா. அது ஒன்றுதான் அப்போது எங்களுக்கு இருந்த ஒரே பொழுதுபோக்கு” என்றார்.

தமிழ்நாடு அரசு, பள்ளிகளில் காலை நேர கூடுகைக்காக கவிஞரும், சமூக போராளியுமான அரசு பள்ளி ஆசிரியை சுகிர்தராணி எழுதிய, சமூக நீதிப் பாடல்களில் ஒன்றை பவதாரிணி இசையமைத்துப் பாடியுள்ளார்.

அதோடு மட்டுமல்லாமல், அந்தப் பாடல் வரிகள் குறித்து கவிஞரை பாராட்டியும் இருக்கிறார்.

“அம்மாவின் வாசனை’ என்ற தலைப்பில் தாம் எழுதிய கவிதையை, இசைஞானி இசையமைக்க, பவதாரணியின் அழகான குரலில் அப்பாடல் பதிவு செய்யப்பட்டது. அவர் பாடியபிறகே அந்த கவிதை முழுமை பெற்றது என்கிறார்” நாடாளுமன்ற உறுப்பினரும் தி.மு.க பிரமுகருமான கவிஞர் கனிமொழி.

பவதாரிணியின் திருமணம், கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் பிரபல பத்திரிகையாளர் ராமசந்திரனின் மகன் ஆர். சபரிராஜ் உடன் கடந்த 2005ம் ஆண்டு நடைபெற்றது.

அவர்களுக்கு குழந்தைகள் கிடையாது. மனைவிக்கு புற்றுநோய் இருப்பதை அறிந்து, எப்படியாவது அவரைக் காப்பற்றி விடவேண்டும் என்று அவர் கணவர் சபரிராஜ் பல இடங்களுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளார்.

பவதாரிணி தம்மை ஒரு கூண்டுக் கிளியாய் சுருக்கிக் கொள்ளாமல், பருந்துபோல இசை வானில் உயரச் சிறகடித்துப் பறக்க முயன்றுள்ளார்.

கலைத் துறை மற்றும் இசைத்துறையில் தமது இருப்பை ஒரே இடத்தில் அமைத்துக் கொள்ளாமல் வெவ்வேறு பரிணாம வளர்ச்சியை அடையவும் தனக்குள் மறைத்துள்ள திறமைகளை வெவ்வேறு பரிணாமங்களில் வெளிபடுத்தவும் விரும்புவர்.

தந்தையும், சகோதரும் பெரிய இசையமைப்பாளர்களாக இருந்தும் ஏனோ இவர் அதிக பாடல்களை பாடும் வாய்ப்பைப் பெறவில்லை.

அந்த வகையில் இவருக்கு இயல்பிலேயே வாய்த்த இசைப் பின்னணிச் சூழல் இவரை வேறு தளத்திற்கு கொண்டுசென்றது.

அதன் வெளிப்பாடுதான் இசையமைப்பாளர் அவதாரம். 2002ஆம் ஆண்டு ரேவதி இயக்கத்தில் வெளியான ‘மித்ர் மை பிரெண்ட்’ என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமானார்.

அதைத் தொடர்ந்து இந்தியில் ரேவதி இயக்கத்தில் அபிஷேக் பச்சன், ஷில்பா ஷெட்டி, சல்மான் கான் ஆகியோர் நடிப்பில் வெளியான ஃபிர் மிலெங்கே என்ற படத்திலும் இசையமைத்தார்.

1991ஆம் ஆண்டு இளையராஜா உருவாக்கிய ‘ராஜாவின் ரமணமாலை’ என்ற இசைத் தொகுப்பில் “ஆராவமுதே” என்ற பாடலை பவதாரிணி பாடினார்.

அலெக்சாண்டர், கருவேலம் பூக்கள், காதலுக்கு மரியாதை, டைம், பாரதி, அழகி, பிரெண்ட்ஸ், ஒரு நாள் ஒரு கனவு, அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது, தாமிரபரணி, நாளைய பொழுதும் உன்னோடு, உளியின் ஓசை, தனம், கோவா, மங்காத்தா, அனேகன் ஆகிய தமிழ்ப் படங்களில் இடம்பெற்ற பாடல்களை அவர் பாடியுள்ளார்.

தமிழில் அமிர்தம், இலக்கணம், வெள்ளாச்சி, கள்வர்கள், போரிடப் பழகு ஆகிய படங்களுக்கு இசை அமைத்துள்ள இவர், இறுதியாக தமிழில் 2019-ல் மாயநதி என்கிற படத்திற்கு இசையமைத்திருந்தார்.

தமிழ் உட்பட இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பத்து படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

அது மட்டுமன்றி, நீண்ட நாட்கள் கழித்து சமீபத்தில் தான் அவருக்கு மூன்று படங்களில் புதிதாக இசை அமைக்க வாய்ப்பு கிடைத்தது. அரங்கேற வேண்டிய ராகங்கள் இசைக்கப் படாமலேயே போனது.!

கொழும்பில் இன்றும் (27-01.2024) நாளையும் (28.01.2024) இசைஞானி இளையராஜாவின் பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், பவதாரணி மரணம் அடைந்துள்ளார்.

அவரது உடல் நேற்று மாலை விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது.

தி.நகர் இல்லத்தில் இறுதி மரியாதை செலுத்த வைக்கப்பட்டு, நேற்று இரவே தேனி மாவட்டம் பண்ணைபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு நல்லடக்கம் செய்யப்பட்டது.

என்ன பேசுவது? எப்படிப் பேசுவது?

மரணமே உனக்கு மரணம் வருவது எப்போது? என்று ஒரு கவிஞன் மரணத்தைப் பார்த்து கேட்டது நினைவுக்கு வருகிறது இளம் வயது, எதிர்பாரா மரணகளை எதிர்கொள்ளும்போது.

இசைஞானி இசைக் கூட்டில் 47 வயதே நிரம்பிய ஒரு குயிலின் குரல் வலையை இரக்கமில்லா இறைவன் நசுக்கிப் போட்டு விட்டான்.

தமிழ் இருக்கும் வரை பாரதி வாழ்ந்து வருவான். அதுபோல திரையிசை இருக்கும் வரை “மயில் போல பொண்ணு ஒன்னு பாடல்..’’, “ஒளியிலே தெரிவது தேவதையா”, “குயிலே, குயிலே குயிலக்க”, “என்னைக் கொஞ்சம் மாற்றி” போன்ற இனிய கீதங்கள் தமிழர் தம் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும்!

கட்டுரையாளர்; வசந்த் பாரதி.

நன்றி: அறம் இணைய இதழ்.

Comments (0)
Add Comment