“இதயவீணை தூங்கும்போது பாட முடியுமா?”

திரைத்தெறிப்பு : 108

திரையிசைத் திலகமான இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் எத்தனையோ மகத்தான பாடல்களைத் தமிழிலும் பிற மொழிகளிலும் தந்திருக்கிறார்.

1960-ம் ஆண்டு வெளிவந்த ‘இருவர் உள்ளம்’ திரைப்படத்தில் கே.வி.மகாதேவனால் இசை அமைக்கப்பட்ட இந்த இனிமையான பாடலை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன்.

சங்க இலக்கியப் பாடல்களில் தலைவனைப் பிரிந்த தலைவி தனது பிரிவாற்றாமையை வெளிப்படுத்தும் பாடல்கள் இருக்கின்றன.

அதைப்போலவே தனது காதல் உணர்வை கதாநாயகியான சரோஜாதேவி வெளிப்படுத்திப் பாடும் விதமாக அமைந்திருக்கும் இந்தப் பாடலை பாடியவர் பி. சுசீலா.

“இதய வீணை தூங்கும்போது பாட முடியுமா?
இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா?”

பல்லாயிரக்கணக்கான பாடல்களை பி.சுசீலா அவர்கள் பாடியிருந்தாலும்கூட அவர்கள் குரலில் இனிமையை வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்த தனிப்பாடல்களில் கூடுதலான பாவங்களுடன் பாடப்பட்ட பாடல் இது என்று சொல்லலாம்.

“உதடு சிரிக்கும் நேரம் உள்ளம் சிரிக்குமா?
உருவம் போடும் வேஷம் உண்மை ஆகுமா?

விளக்கைக் குடத்தில் வைத்தால் வெளிச்சம் தோன்றுமா?
வீட்டுக் குயிலைக் கூட்டில் வைத்தால்
பாட்டுப் பாடுமா…. பாட்டுப் பாடுமா?”

இதில் இடம்பெற்றிருக்கும் எளிமையான இந்த வரிகளைப் பாருங்கள்.

உருவம் போடும் வேஷம் உண்மையாகுமா? என்ற இந்தப் பாடலில் எழுப்பியிருக்கும் கேள்வி தற்போது வரை காதல் உணர்வில் விழும் எல்லாப் பெண்களுக்குமான எச்சரிக்கையை போலவும் அமைந்திருக்கிறது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடித்த இந்தப் படத்திற்கு வசனம் எழுதி இருப்பவர் மு.கருணாநிதி.

“மனதை வைத்த இறைவன் அதில் நினைவை வைத்தானே.
சில மனிதர்களை அறிந்துகொள்ளும் அறிவை வைத்தானே.

அறிவை வைத்த இறைவன் மேனி அழகை வைத்தானே.
அழகு கண்ட மனிதன்
பெண்ணை அடிமை செய்தானே… அடிமை செய்தானே.”

பெண் அடிமைத்தனம் குறித்து அதிகமான குரல்கள் இல்லாத அந்த காலத்திலேயே இப்பாடல் வழியே பெண் அடிமைத்தனத்திற்கு எதிரான குரல் வெளிப்பட்டிருப்பது தனிச் சிறப்பு.

“உருகி விட்ட மெழுகினிலே ஒளியேது?
உடைந்துவிட்ட சிலையினிலே அழகேது?

பழுதுபட்ட கோவிலிலே தெய்வமேது?
பனிப் படர்ந்த பாதையிலே பயணமேது?”

இதே ‘இருவர் உள்ளம்’ திரைப்படத்தில் டி.எம்.எஸ், பி.சுசீலா இதுவரின் இசைக் கூட்டணியில் பல இனிமையான பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன.

அவற்றிற்கிடையே தனித்து ஒலிக்கும் ஒற்றை வயலின் இசையைப் போல ஒலித்திருக்கும் பி.சுசீலாவின் குரலைக் கேட்கும்போது, அந்தத் தருணம் பரவசம் ஏற்படுத்தும் ஒன்றாகவே இருந்து கொண்டிருக்கிறது.

– மணா

Comments (0)
Add Comment