கெவி – எதிர்பாராத இன்ப அதிர்ச்சி!

குறைந்த பட்ஜெட்டில் தயாராகிற சில திரைப்படங்கள் எதிர்பாராத இன்ப அதிர்ச்சியைத் தரும். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தியேட்டருக்குள் சென்றுமர்ந்தபிறகு கிடைக்கிற அந்த திரையனுபவத்திற்கு இணையாக எதையும் சொல்ல முடியாது. அதனை ரசிகர்களுக்குக் கிடைக்கச் செய்திருக்கிறது ‘கெவி’.

தமிழ் தயாளன் எழுதி இயக்கியிருக்கிற இப்படத்தில் ஆதவன், ஷீலா, சார்லஸ் வினோத், ஜாக்குலின் லிடியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சரி, இந்த படம் எதைப் பற்றிப் பேசுகிறது?

‘கெவி’ கதை!

மதுரையில் முகம்மதிய மன்னர்கள் ஆட்சி செய்த காலத்தில், வரி விதிப்பை எதிர்கொள்ள முடியாமல் திண்டுக்கல் வட்டாரத்திலுள்ள மலைக்குன்றுகளுக்குச் சிலர் கூட்டமாக இடம்பெயர்ந்திருக்கின்றனர். அங்குள்ள ஒரு குன்றுக்கு ‘கெவி’ என்று பெயரிட்டு வாழத் தொடங்கியிருக்கின்றனர்.

அதன் மேல்பகுதியில் இருக்கிற மலைப்பகுதியே வெள்ளையர் காலத்தில் ‘கொடைக்கானல்’ என்ற பெயரில் வளர்ச்சி கண்டிருக்கிறது.

அந்தக் காலகட்டத்தில் வெள்ளையர்களை ‘டோலி’ கட்டி ஏற்றிச் செல்லும் பணியில் அந்த கிராமத்து மக்கள் ஈடுபட்டிருக்கின்றனர். அதனால், அந்த ஊருக்கு ‘வெள்ளகெவி’ என்று பெயர்.

இந்த முன்னுரையோடு தொடங்குகிறது இப்படத்தின் திரைக்கதை.

சரியான சாலை, பள்ளி, மருத்துவமனை வசதிகள் இல்லாமல் அல்லாடுகின்றனர் கெவி மக்கள்.

மண் சரிந்து விழுந்ததில், அந்த ஊரைச் சேர்ந்த 5 பேர் அந்த விபத்தில் சிக்குகின்றனர். குற்றுயிரும் குலையுயிருமாக இருக்கும் அவர்களை ‘டோலி’ கட்டி தூக்கிச் செல்கின்றனர் ஊர் மக்கள். ஆனால், பாதி வழியிலேயே அவர்களது உயிர் பிரிகிறது.

அந்த நேரத்தில், விரைவில் வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு ‘வாக்கு’ சேகரிக்க வருகிறார் தற்போதைய எம்.எல்.ஏ. பாதுகாப்புக்கு இன்ஸ்பெக்டர் நரசிம்மராஜன் (சார்லஸ் வினோத்) தலைமையில் போலீசாரும் வருகின்றனர்.

எதிரே வரும் எம்.எல்.ஏவிடம் “இங்கேயே ஒரு மருத்துவமனை இருந்திருந்தால் இந்த நிலை வந்திருக்குமா” என்று ’நியாயம்’ கேட்கிறார் மலையன் (ஆதவன்). கெவி சார்பான பிரச்சனைகளில் முதலில் தலையை நீட்டுபவர் அவரே.

ஆனால், ஐந்து பேர் உயிரிழந்த சோகத்தில் இருக்கிற கெவி மக்கள் எதிரே நிற்பவர்களிடம் தங்களுக்கான நியாயத்தை ‘வன்மையாக’க் கேட்கின்றனர். எம்.எல்.ஏ மீது மட்டுமல்லாமல் இன்ஸ்பெக்டர் நரசிம்மராஜனும் லேசாகத் தாக்கப்படுகிறார்.

அந்த சம்பவம் நரசிம்மராஜன் மனதில் ஆறாத வடுவை ஏற்படுத்துகிறது.

தேர்தலுக்கு முந்தைய நாள் மலையனைக் கொல்வதென்று முடிவு செய்கிறார். அன்றிரவு நிறைமாதக் கர்ப்பிணியாக இருக்கும் மனைவி மந்தாரையின் வளைகாப்பிற்காகச் சில பொருட்களை வாங்கக் குதிரையுடன் அருகிலுள்ள நகரத்திற்குச் செல்கிறார் மலையன்.

பொருட்களை வாங்கிக்கொண்டு இருளில் திரும்புகிற மலையனைச் சுற்றி வளைக்கின்றனர் நரசிம்மராஜன் தலைமையிலான போலீசார்.

இன்னொரு பக்கம், உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தாக வேண்டுமென்கிற நிலையில் பிரசவ வலியால் அவதிப்படுகிறார் மந்தாரை.

அருகிலுள்ள மருத்துவமனைக்குத் தகவல் சொல்லிவிட்டு, ‘டோலி’ கட்ட ஏற்பாடு செய்கின்றனர் ஊர் மக்கள். ஆனால், அந்த மருத்துவரோ, “என்னால் காட்டுக்குள்ள போய் நடுராத்திரியில வைத்தியம் பார்க்க முடியாது” என்று தனது வீட்டுக்குக் கிளம்பிவிடுகிறார்.

அது தெரியாமல், மந்தாரையைத் தூக்கிக்கொண்டு கெவி மக்கள் மலைப்பாதையில் பயணிக்கின்றனர்.

ஒரேநேரத்தில் அந்த கணவன், மனைவி மட்டுமல்லாமல் அவர்களது எதிர்கால வாரிசின் கதியும் ஆபத்தான நிலைமைக்கு ஆளாகிறது. அதன்பின் என்னவானது என்பதைப் பரபரப்போடு சொல்கிறது ‘கெவி’யின் மீதி.

அசத்தும் காட்சியாக்கம்!

ஒரு மலைப்பாங்கான கிராமம். அங்கிருந்து மேலேறிச் சென்றால் கொடைக்கானல். கீழே இறங்கினால் திண்டுக்கல். ஆனால், எப்பகுதிக்குச் செல்வதானாலும் கரடுமுரடான பாறைகள் நிறைந்த மலைகளில் ஏறி இறங்கியாக வேண்டும்.

வனவிலங்குகளின் இடையூறுகள் மட்டுமல்லாமல் இயற்கையின் சீற்றத்தையும் இடையே எதிர்கொண்டாக வேண்டும். அனைத்துக்கும் மேலே, அதிகார பீடத்தில் இருப்பவர்களிடம் எந்தவித எதிர்ப்பையும் காட்டாமல் வாழ வேண்டும்.

அனைத்தையும் தொடக்கத்திலேயே இயக்குனர் தமிழ் தயாளன் சொல்லிவிடுவதால், அதன்பிறகான காட்சிகள் நமக்கு அயர்ச்சி தருவதில்லை. அந்தக் காட்சிகளின் அமைப்பு இதுவரை நாம் பார்த்த திரைப்படங்களில் இருந்து வேறுபட்டதாகவும் இல்லை.

ஆனால், மலைப்பாங்கான பாதையில் இரவு நேரத்தில் படமாக்கப்பட்டிருக்கும் விதம்தான் ‘கெவி’யை நாம் உற்றுநோக்கக் காரணமாகிறது. அந்தக் காட்சியாக்கமும் அதன் வழியே விரிகிற இயக்குனரின் உலகமும் இப்படத்தின் யுஎஸ்பி.

ஜெகன் ஜெயசூர்யா இப்படத்தின் ஒளிப்பதிவைக் கையாண்டிருக்கிறார். காடு, மலை என்று சுற்றித் திரிகிற கேமிரா, நமக்கு புதியதொரு அனுபவத்தைத் திரையில் தருகிறது.

இப்படத்தின் கலை வடிவமைப்பை அறிவுமணி கையாண்டிருக்கிறார். திரைக்கதையில் இருக்கும் பரபரப்பு கொஞ்சமும் குறைந்துவிடாமல் அந்த ‘டெம்போ’வை இறுதி வரை கைக்கொண்டிருக்கிறது ஹரி குமரனின் படத்தொகுப்பு.

டான் அசோக்கின் சண்டைக்காட்சி வடிவமைப்பு, பாலசுப்பிரமணியம் ஜியின் பாடல்கள் ஆங்காங்கே அந்த பரபரப்பை இன்னும் அதிகப்படுத்துகின்றன. தேவா பாடியிருக்கும் பாடல் சட்டென்று ஈர்க்கிறது.

பாலசுப்பிரமணியம் உடன் இணைந்து ராஜா ரவிவர்மா இதன் பின்னணி இசையை அமைத்திருக்கிறார். பல இடங்களில் காட்சிகளோடு நாம் ஒன்றி, அந்த இசையை மறந்துவிடுகிற அளவுக்கு அதன் தன்மை அமைந்திருக்கிறது.

இதில் ஷீலா, அவரது கணவராக வரும் ஆதவன், ஜாக்குலின், சார்லஸ் வினோத் என்று பலரது முகங்கள் ‘க்ளோஸ் அப்’பில் காட்டப்பட்டிருக்கின்றன. அதனை நாம் ஏற்றுக்கொள்கிறவாறு அவர்களது நடிப்பு அமைந்திருக்கிறது.

குறிப்பாக ஷீலா, அவரது சகோதரராக நடித்தவர், ஆதவனின் நடிப்பு நம்மை அப்பாத்திரங்களாகவே உணர வைக்கிறது.

ஒருகட்டத்தில் அவர்களது முகங்கள் தெரியாதபோதும், அவற்றின் உணர்வை, வலியை நாம் உணர்கிறோம். அதுவே அவர்களது நடிப்பின் வெற்றி.

கிளைமேக்ஸ் பகுதியை மட்டும் கொஞ்சம் மாற்றி அமைக்கப்பட்டிருந்தால், இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். அது ஒரு குறையாக, திரையில் தெரிகிறது.

இந்தப் படத்தின் பெரும்பகுதி கெவி எனும் கிராமம், அதன் அருகிலுள்ள மலைப்பாதைகளை மட்டுமே காட்டுகிறது. அது சில இடங்களில் போரடிப்பது உண்மை.

ஆனால், அதையும் தாண்டிக் காட்சிகளில் நிறைந்திருக்கிற வாழ்வனுபவம் நம்மை நிச்சயம் ஈர்க்கும். எதிர்பாராத இன்ப அதிர்ச்சியை அளிக்கும்.

அப்படியொரு திரையனுபவத்தைப் பெறத் தயாராக இருப்பவர்கள் மட்டும் ‘கெவி’யைப் பார்த்து ரசிக்கலாம், கொண்டாடலாம்..!

  • உதயசங்கரன் பாடகலிங்கம்
Comments (0)
Add Comment