இயக்குநர் சுந்தர் சி மற்றும் வைகைப்புயல் வடிவேலு கூட்டணியில், நீண்ட இடைவேளைக்குப் பிறகு, காமெடி சரவெடியாக உருவாகியுள்ள திரைப்படம் ‘கேங்கர்ஸ்’.
ஏப்ரல் 24 ஆம் தேதி உலகமெங்கும் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி, A.C.S மருத்துவக் கல்லூரியில் கோலாகலமாக நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் சுந்தர் சி: “இந்தப் படம் ஆரம்பிக்க விதைப் போட்டது வடிவேல் அண்ணன் தான். தமிழில் மணிஹெய்ஸ்ட் மாதிரி ஒரு சின்ன ஊரில், ஆட்டோ ஓட்டுநர், டீச்சர் எல்லாம் வைத்து, பண்ணினால் எப்படி இருக்கும் என்பது தான் கதை.
இந்தப் படத்திற்கு என்னடா தலைப்பு வைப்பது எனத் திணறியபோது, வடிவேல் அண்ணன் போற போக்கில் கேங்கர்ஸ் என்றார். அதையே தலைப்பாக வைத்து விட்டோம்” என்றார்.
அதைத் தொடர்ந்து பேசிய நடிகர் வடிவேலு: “இந்தப் படம் வின்னர் படம் மாதிரி, அத்தனை புதிதாக இருக்கிறது. சுந்தர் சி அண்ணனுக்கு சொல்லவா வேண்டும்.
ஒவ்வொரு காட்சியையும் ரசித்து ரசித்து உருவாக்கியிருக்கிறார். பேசி முடிச்சு 35 நாளில் இப்படத்தை முடித்து விட்டோம்.
உங்களுக்குத் தேவையான அத்தனை தீனியும் படத்தில் இருக்கிறது. இது தியேட்டரில் எல்லோரும் சேர்ந்து பார்த்து கொண்டாட வேண்டிய படம். சுந்தர் சி அருமையாக எடுத்துள்ளார்.
என்னிடம் என்ன வாங்க வேண்டும் என, அவருக்கும் தெரியும். உங்கள் எல்லோருக்கும் கொண்டாட்டம் காத்திருக்கிறது.” என்றார்.
வைகைப்புயல் வடிவேலு நடிப்பில் புகழ்பெற்ற, கைப்புள்ள, வீரபாகு கதாபாத்திரங்களைப் போலத் தனித்தன்மையுடன் கூடிய ‘சிங்காரம்’ எனும் அசத்தலான கதாப்பாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளார்.
ஃபர்ஸ்ட் லுக்கில், அவரது தோற்றமே ரசிகர்களைக் குதூகலப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
கேங்கர்ஸ் படத்தில், கேத்தரின் தெரேசா, வாணி போஜன், முனீஷ்காந்த், பக்ஸ், மைம் கோபி, ஹரீஷ் பேரடி, அருள் தாஸ், கருப்புசாமி, சந்தான பாரதி, S மதுசூதன ராவ் ஆகியோர் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளனர்.