ஃப்ரீடம் அட் மிட்நைட்: காந்தி காலத்துக்கு ஒரு பிளாஷ்பேக்!

இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்தை மையப்படுத்தி லாரி காலின்ஸ் மற்றும் டொமினிக் லேப்பியர் ஆகியோர் எழுதிய புத்தகம்  ‘ப்ரீடம் அட் மிட்நைட்’.

புத்தகமாக பலரையும் கவர்ந்த இது, இப்போது வெப் தொடராக சோனி லைவ் ஓடிடியில் வெளியாகி உள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை தொடர்பாகவும், இந்தியாவின் முதல் பிரதமர் யார் என்பது தொடர்பாகவும் சுதந்திரத்துக்கு முந்தைய காலத்து தலைவர்களிடையே இருந்த கருத்து வேற்றுமைகள்,

ஒவ்வொரு சமஸ்தானத்தையும் இந்தியாவுடன் இணைக்க சர்தார் படேல் மேற்கொண்ட முயற்சிகளையும் பற்றி 2 சீசன்களுடன் இந்த தொடர் விரிவாகச் சொல்கிறது.

ஸ்டூடியோ நெக்ஸ்ட் உடன் இணைந்து எம்மே என்டர்டெயின்மெண்ட் தயாரித்த இந்த தொடரின் முதல் சீசன் சில மாதங்களுக்கு முன் வெளியானது.

இதில் இந்தியாவையும் பாகிஸ்தானையும் பிரிக்க, முடிவெடுத்தது வரை காட்டியிருந்தனர்.

இந்தச் சூழலில் 2 நாடுகளுக்கு இடையிலான பாகப்பிரிவினை, வரைபட தயாரிப்பு முதல் காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் வரையிலான காலகட்டத்தை இந்த சீசன் சொல்கிறது.

சுதந்திரத்துக்கு பிறகு மற்ற சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைப்பதில் மென்மையான போக்கை நேரு கையாள, படேல் சில தீவிரமான நடவடிக்கைகளை எடுக்கிறார்.

அதனால் அவர்களுக்கு உள்ளேயே சில பிணக்குகள் ஏற்படுகின்றன. அதையும் மீறி அவர்கள் எப்படி இந்தியாவை கட்டமைக்க ஒன்றாக பாடுபட்டார்கள் என்பதை விளக்கிச் சொல்கிறது இந்த தொடர்,

ஒரு கட்டத்தில் மன்னர் ஒருவரை இந்தியாவுடன் இணைக்க, தார்மீகமற்ற ஒரு முறையை கையாள்கிறார் படேல், அது சரிதானா என்று இந்திய பிரதிநிதி ஒருவர் கேட்க, “பொலிடிக்கல் சயின்ஸ் பாடத்துக்கு மாரல் சயின்ஸ் பாடப்புத்தகத்துடன் மாணவன் செல்லக்கூடாது” என்பார் சர்தார் படேல்.

எப்பாடு பட்டாவது நாட்டை இணைக்க வேண்டும் என்ற படேலின் குணத்தை இந்த ஒரு காட்சி விளக்குகிறது.

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, காஷ்மீர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் நேருவுக்கும், படேலுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்படுகிறது.

அதனால் ஒரு கட்டத்தில் உள்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தீர்மானிக்கிறார் படேல்.

நேருவிடம் ராஜினாமா கடித்தையும் கொடுக்கிறார். அவரை சமாதானம் செய்வதற்காக தனது இருப்பிட்த்துக்கு அழைக்கிறார் காந்தி.

ஆனால், அந்த சமாதானத்தை ஏற்க படேல் மறுக்கிறார். அந்த பேச்சுவார்த்தை முடிந்து அவர் வீடு திருமுபவதற்குள் காந்தி கொல்லப்படுகிறார். இது படேலை கடுமையாக பாதிக்கிறது.

அடுத்த நாள் சில காங்கிரஸ் கட்சி தலைவர்கள், காந்தியின் படுகொலைக்கு உள்துறை அமைச்சரான படேலின் கவனக்குறைவுதான் காரணம் என்று குற்றம் சாட்டுகிறார்கள்.

அப்போது ஆவேசத்துடன் அவர்களைப் பார்த்து கத்தும் நேரு, “என்னைவிட காந்தியிடம் நெருக்கமாக இருந்தவர் படேல். காந்தியின் படுகொலை மற்ற எல்லோரையும்விட படேலுக்குதான் பேரிழப்பு” என்கிறார்.

அடுத்த நாள் படேலைப் பார்க்க வரும் நேரு, படேலின் ராஜினாமா கடித்த்தை கிழித்து அவரிடம் கொடுக்கிறார்.

“அப்பாவைப் போல் இருந்த காந்தி உயிர் இழந்த நிலையில், ஒரு அண்ணனாக எனக்கு உங்கள் ஆதரவு தேவை” என்கிறார்.

பதிலுக்கு படேலும் அந்த கடித்த்தை குப்பைத் தொட்டியில் வீசி, “எனக்கும் ஒரு தம்பியாக உன் ஆதரவு தேவை” என்று சொல்லி அவரை அணைத்துக் கொள்கிறார்.

இப்படி காந்தி – நேரு – படேல் இடையே நடைபெற்ற பல சம்பவங்களை இந்தத் தொடர் நமக்கு எடுத்துச் சொல்கிறது.

இந்த தொடரில் மகாத்மா காந்தியாக சிராக் வோஹ்ரா, நேருவாக சித்தாந்த் குப்லா, படேலாக ராஜேந்திர சாவ்லா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். நிகில் அத்வானி இயக்கியுள்ளார்.

இந்த தொடரின் 2 சீச்சன்களையும் சோனி லைவ் ஓடிடியில் பார்க்கலாம். தமிழ் மொழிபெயர்ப்பும் உண்டு.

– பி.எம். சுதிர்

Comments (0)
Add Comment