‘ரஜினி எவ்ளோ பெரிய நடிகர் தெரியுமா’, ‘ஸ்டைல்தான் ரஜினியை சூப்பர் ஸ்டாரா மாத்துனது’, ‘கமர்ஷியல் படம் தர்றதுல இருக்குற சவால்ல ஜெயிக்குறவங்க ரஜினி மாதிரி ஒரு சில நட்சத்திரங்கள்தான்’, ‘வழக்கமான பாணியில இருந்து ரஜினியால நடிக்க முடியுமா?’ இது போன்ற பல உரையாடல்களை, கேள்விகளை, பாராட்டுகளைத் தனது திரைவாழ்வில் 50 ஆண்டுகளாக எதிர்கொண்டு வருகிறார் நடிகர் ரஜினிகாந்த்.
திரையுலகில் ஒரு ‘லைட்மேன்’ ஆக இருந்தால் கூடப் போதும் என்று பெங்களூருவில் இருந்து சென்னை வரத் துடித்தவர்.
நடிப்பு பயிற்சி பெற்றால் ஜொலிக்கலாம் என்று நண்பன் ராஜ் பகதூர் வார்த்தைகளை ‘வேத வாக்காக’க் கொண்டு சென்னை வந்திறங்கியவர்.
குணசித்திர நடிகனாக, வில்லனாகப் புகழ் பெற்றால் போதும் என்ற மனநிலையில் இருந்தவர்.
‘எதிலும் அதீதம்’ என்று கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் ஒப்புக்கொண்டு, தூக்கத்தை விலையாகத் தந்து பல படங்களில் நடித்தவர்.
திரையிலும் பொதுவாழ்விலும் தனக்குக் கிடைத்த வெகுமதிகளில் எவை சரியானவை என்பதைச் சீர் தூக்கிப் பார்க்கத் தெரிந்தவர்.
இப்படி ரஜினிகாந்தைப் பற்றிச் சொல்ல ஏராளம் இருக்கின்றன. அவர் நடித்த படங்கள் அனைத்துமே ஒரேமாதிரியான உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கும் என்ற கருத்துகளைச் சில நேரங்களில் கேட்க நேரிடும்.
உண்மையில் அப்படித்தான் அவர் நடித்து வந்திருக்கிறாரா என்றால் ‘இல்லை’ என்றே சொல்ல வேண்டும்.
தான் நடித்த வெற்றிப் படங்களின் ‘பார்முலா’வில் இருந்து அவர் நடித்த சில படங்கள் நல்லதொரு பெயரைச் சம்பாதித்திருக்கின்றன. சில படங்கள் சரியான வடிவத்தைப் பெறாமல், அவரது தீவிர ரசிகர்களால் கூடக் கண்டுகொள்ளப்படாமல் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன.
அப்படிப் பல அனுபவங்களைக் கடந்தும், இன்றும் ரஜினிகாந்த் தமிழ் திரையுலகின் ‘சூப்பர்ஸ்டார்’ ஆகத் திகழ்வது ஆகப்பெரிய சிறப்புதான்.
அவரது படங்களில் இவற்றைக் கவனிக்காமல் விட்டுவிட்டோமோ’ என்று நினைக்கிற சில திரைப்படங்களைப் பார்க்கலாமா?
மூன்று முடிச்சு:
‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் தன்னால் அறிமுகப்படுத்தப்பட்ட ரஜினிக்கு ‘அவள் ஒரு தொடர்கதை’யின் தெலுங்கு பதிப்பில் வாய்ப்பு தந்தவர் கே.பாலசந்தர்.
அதே சூட்டில் தெலுங்கில் கே.விஸ்வநாத் ஆக்கிய ‘ஓ சீதா கதா’வைத் தமிழில் ‘மூன்று முடிச்சு’ ஆக்கினார்.
அந்தப் படத்தில் ரஜினி ஏற்ற பிரசாத் பாத்திரம் அவரது திரை வாழ்வில் ஒளி ஏற்றி வைத்தது. ‘சரியான வில்லன் மூஞ்சி’ என்று ஸ்ரீதேவி சொல்கிற இடம், ரஜினிக்கென்று தனிப்பட்ட ரசிகர் கூட்டம் உருவாகக் காரணமானது.
புவனா ஒரு கேள்விக்குறி:
‘நாயகனாக நடித்த சிவகுமாரை வில்லனாகவும் வில்லனாக நடித்த ரஜினியை குணசித்திர பாத்திரமாகவும் மாற்றலாம் என்று நானும் பஞ்சு அருணாசலமும் முடிவு செய்தோம்’ என்று இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் தன் பேட்டிகளில் தவறாமல் குறிப்பிடுகிற படம் ‘புவனா ஒரு கேள்விக்குறி’.
இப்படிப்பட்ட பாத்திரங்களிலும் கூட ரஜினியை நடிக்க வைக்க முடியும் என்று இதர இயக்குநர்களுக்கு உணர்த்திய படம். அன்று, ரசிகர்களுக்கு ‘அதிர்ச்சி வைத்தியம்’ தர எடுத்த எஸ்.பி.எம்மின் முடிவு, விதவிதமான பாத்திரங்கள் நோக்கி ரஜினியை நகர்த்தியது.
பைரவி:
16 வயதினிலே, ஆடு புலி ஆட்டம், காயத்ரி, ஆயிரம் ஜென்மங்கள் என்று நடித்துவந்த ரஜினியை நாயகனாக்கிய திரைப்படம் இது. இப்படத்தின் கதை எழுதித் தயாரித்த கலைஞானத்தின் முடிவு, ரஜினியின் வாழ்வில் இன்னொரு அத்தியாயம் ஆனது.
இளமை ஊஞ்சலாடுகிறது:
ஸ்ரீதர் என்ற ட்ரெண்ட்செட்டர் ரஜினியையும் கமலையும் வித்தியாசமாகத் திரையில் உலா வரச் செய்த படம். 1978ஆம் ஆண்டில் இப்படம் வெளியானது.
இதனைத் தொடர்ந்து சதுரங்கம், வணக்குத்துக்குரிய காதலியே, தப்புத்தாளங்கள், அவள் அப்படித்தான், தாய் மீது சத்தியம் என்று வெவ்வேறுவிதமான கதைகளில் நடித்தார் ரஜினி.
மகேந்திரனை இயக்குநராக்கிய ‘முள்ளும் மலரும்’ படமும் இதே ஆண்டுதான் வெளியானது. அந்த படங்களை வரிசையாகப் பார்த்தால், ‘ரஜினி எப்பேர்ப்பட்ட நடிகர்’ என்பது தெரியவரும்.
பிரியா:
‘உனக்கு மார்க்கெட்ல எவ்ளோ வேல்யூ இருக்குன்னு தெரியாம இருக்கியேப்பா’ என்று சொல்லி, முப்பதாயிரம் ரூபாய் சம்பளம் கேட்ட ரஜினியிடம் ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாயை பஞ்சு அருணாசலம் கொடுத்ததாக ஒரு தகவல்.
‘பிரியா’ படத்திற்காக ரஜினியை ‘புக்’ செய்தபோது இந்த சம்பவம் நடந்ததாகச் சொல்லப்படுகிறது. அந்த வகையில் அவரது வாழ்வில் மறக்க முடியாத படமிது.
தர்ம யுத்தம்:
ரஜினிகாந்த் நடிக்கிற படங்கள் ‘ஆக்ஷன்’ வகைமையில் இருக்கும். அவற்றில் வன்முறை அதிகம் என்று அவர் மீது குற்றம் சொல்கிற அளவுக்குப் படங்கள் வெளிவந்த காலமது. அப்போது, மிக வித்தியாசமான பாத்திரத்தில் அவரை ஜொலிக்கச் செய்த படமிது.
தர்மயுத்தம் 1979இல் வெளியானது. ஆறிலிருந்து அறுபது வரை, அன்னை ஒரு ஆலயம் என்று வித்தியாசமான வெற்றிகளை ரஜினி பெற்ற காலமது.
இதே ஆண்டில் அலாவுதீனும் அற்புத விளக்கும், நினைத்தாலே இனிக்கும் என்று கமல் உடன் அவர் இணைந்து நடித்த படங்கள் வெளியானது.
அதற்குப் பிறகுதான் இருவரும் சேர்ந்து நடிக்க வேண்டாம் என்று தீர்மானித்ததாகக் கமல் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.
பில்லா:
ரஜினியை ஒரு ‘ஸ்டார்’ ஆக மாற்றிய திரைப்படம் இது. அமிதாப்பச்சன் நடித்த ‘டான்’ படத்தைப் பார்த்தவர்களுக்கு இப்படம் பெரிதாக ஈர்ப்பைத் தராது.
அதேநேரத்தில், அதனைப் பார்க்காதவர்களுக்கு இப்படம் பிரமிப்பைத் தரும்.
ஒரு கமர்ஷியல் படத்தில் நாயகனாக எத்தகைய நடிப்பை ரஜினி இதுநாள் வரை தந்து வருகிறார் என்பதற்கான ஆரம்பகால உதாரணம் இது. இதனைத் தந்த இயக்குநர் கிருஷ்ணமூர்த்தியோடு இணைந்து மீண்டும் ‘தீ’ தந்தார் ரஜினி.
காளி:
ரசிகர்களால் ஆராதிக்கப்படுகிற ஒரு நட்சத்திரத்தை வேறு மொழிக்குக் கொண்டு செல்கிற உத்தி இன்று வந்ததல்ல. பைலிங்குவல், பான் இந்தியா படங்களுக்கான விதையும் கூட என்றோ விழுந்த ஒன்றுதான்.
அந்த வகையில் மலையாள இயக்குநரான ஐ.வி.சசி தமிழில் ‘காளி’ தந்தார். ஒரே நேரத்தில் இது தெலுங்கிலும் படமாக்கப்பட்டது. அதீத வன்முறை இருப்பதாக விமர்சிக்கப்பட்டது இப்படம்.
இதற்கான படப்பிடிப்பின்போது நடந்த விபத்தில் குதிரைகளும் மனிதர்களும் உயிரிழந்ததாகச் செய்திகள் வெளியாகின.
இதன்பிறகே, தன் படங்களின் உள்ளடக்கத்தில், பட்ஜெட்டில், படப்பிடிப்புத்தள பாதுகாப்பு ஏற்பாடுகளில் ரஜினி தனிக்கவனம் செலுத்தத் தொடங்கினார் என்று சொல்ல வேண்டும்.
கவிஞர் வைரமுத்து முதன்முறையாக எழுதிய ‘காளி காளி பத்ரகாளி உத்தமசீலி’ பாடல் இதில் இடம்பெற்றதுதான்.
தில்லு முல்லு:
‘நான் பொல்லாதவன்’, ‘அண்ணனுக்கு ஜே’ என்று பாடிக் கொண்டிருந்த ரஜினியை ‘காமெடி’யில் கலக்கச் செய்த படமிது. இதன்பிறகு, ‘ரஜினியை என்னால் இனி இயக்க முடியாது’ என்ற முடிவுக்கு வந்தார் கே.பாலசந்தர்.
அந்த அளவுக்கு ரஜினியின் படங்களில் கமர்ஷியல் அம்சங்களை நிறையவே எதிர்பார்க்கத் தொடங்கினர் ரசிகர்கள்.
இந்தி ரீமேக் என்றபோதும், இந்தப் படம் ரஜினிகாந்த், தேங்காய் சீனிவாசன் மற்றும் சௌகார் ஜானகியின் ‘பேய்த்தனமான’ நடிப்புத்திறமைக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம் எனும் ரகத்தில் இருக்கும்.
நெற்றிக்கண்:
எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் 26 படங்களில் ரஜினிகாந்த் நடித்திருக்கிறார். ‘பாண்டியன்’ அந்த கூட்டணியில் இறுதியாக வெளியானது.
அந்தப் படங்களில் பெரும்பாலானவற்றில் ரஜினியின் ஆக்ஷன், ஸ்டைல், ரொமான்ஸ், காமெடிக்கென்று சில காட்சிகள் ஒதுக்கப்பட்டிருக்கும்.
அவற்றில் இருந்து பெருமளவு விலகி நிற்கிற உள்ளடக்கத்தைக் கொண்டது இப்படம். நாயகனாக நடிக்கத் தொடங்கியபிறகும், வில்லத்தனத்தில் ரஜினி மிரட்டுவார் என்றுணர வைத்த படமிது.
மூன்று முகம்:
‘கூலி’ படத்தின் இடைவேளை பகுதியில் வருகிற ‘வா வா பக்கம் வா’ பாடல் இடம்பெற்ற ‘தங்கமகன்’ படத்தை இயக்கியவர் ஏ.ஜெகந்நாதன். ரஜினியின் திரைவாழ்வில் கே.பாலசந்தர், எஸ்.பி.முத்துராமன் போன்றே இவரும் ஒரு முக்கியமான ஆளுமை தான்.
அவர் இயக்கிய ‘மூன்று முகம்’, ரஜினியின் திரைவாழ்வில் ரொம்பவே சிறப்பான இடத்தைக் கொண்டது.
இதில் மூன்று பாத்திரங்களில் ரஜினி நடித்திருப்பார். குறிப்பாக, அலெக்ஸ் பாண்டியன் பாத்திரத்தின் மிடுக்கு அவராலேயே மீண்டும் பிரதியெடுக்க முடியாத அளவுக்கு அமைந்தது.
இந்த படத்தில் சங்கர்-கணேஷ் இசையில் இடம்பெற்ற ‘தேவாம்ருதம் ஜீவாம்ருதம்’ பாடல் அக்காலகட்டத்தில் வெளியான ஒரு ‘கிளப் சாங்’.
கை கொடுக்கும் கை:
தான் நடித்த படங்களில் ரொம்பவே பிடித்தமான படம் என்று ரஜினி குறிப்பிடுவது ‘முள்ளும் மலரும்’.
அதன் இயக்குநர் மகேந்திரன், அவரைக் கொண்டு ‘ஜானி’, ‘கை கொடுக்கும் கை’ படங்களைத் தந்தார்.
ஷங்கர் இயக்கிய ‘ஜென்டில்மேன்’ படத்திற்கான விதையாக அமைந்த ‘ஜானி’யில் ரஜினியின் ‘க்ளாசிக்’கான நடிப்பைக் காண முடியும். அதே போன்ற அனுபவத்தைத் தருவது ‘கை கொடுக்கும் கை’.
இந்தியில் ‘அந்தா கானூன்’ படத்தில் அறிமுகமாகி வெற்றி பெற்ற காலகட்டத்தில் தமிழில் அடுத்த வாரிசு, தாய் வீடு, சிவப்பு சூரியன், தங்கமகன், நான் மகான் அல்ல, தம்பிக்கு எந்த ஊரு என்று தொடர் வெற்றிகளை ரஜினி தந்து வந்தார்.
அப்போது இப்படியொரு படத்தில் வெறுமனே ஒரு நாயக பாத்திரமாக அவர் வந்துபோனது சாதாரண விஷயமல்ல. இந்த படத்தின் தோல்வி மகேந்திரனிடம் இருந்து அவரை விலகச் செய்தது தமிழ் சினிமா ரசிகர்களின் துரதிர்ஷ்டம்.
உன் கண்ணில் நீர் வழிந்தால்:
‘மூன்றாம் பிறை’, ‘ஓலங்கள்’ எடுத்த கையோடு பாலு மகேந்திரா தந்த கமர்ஷியல் சினிமாவாக அமைந்தது ‘நீங்கள் கேட்டவை’. ஆனாலும், வழக்கத்திற்கு மாறான திரையனுபவத்தைத் தந்தது.
அதே பாணியில் தனக்கொரு படம் அமைய வேண்டும் என்று ரஜினி ஆசைஆசையாய் கூட்டணி சேர்ந்து தந்த படமிது.
இதில் வி.கே.ராமசாமியின் நகைச்சுவை நம்மை வாய்விட்டுச் சிரிக்க வைக்கும். இந்தப் படம் தந்த அனுபவத்திற்குப் பிறகு, தான் தேர்வு செய்ய வேண்டிய இயக்குநர்கள், கதைகளில் மிகுந்த தெளிவைக் கடைப்பிடிக்கத் தொடங்கினார் ரஜினி.
ராஜாதி ராஜா:
பல வெள்ளி விழாப் படங்களை எண்பது, தொண்ணூறுகளில் தந்த இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன் உடன் ரஜினிகாந்த் இணைந்த ஒரே படமிது.
‘கதையே இல்லாம ஒரு சினிமா பண்ண முடியுமா’ என்று அன்றைய திரையுலக ஜாம்பவான்களை வியக்க வைத்த படமிது.
ரஜினி போன்ற கமர்ஷியல் நட்சத்திரங்களைக் கொண்டு படத்தை உருவாக்குகிறபோது காட்சிகளில், கதாபாத்திர வார்ப்புகளில், இசை உள்ளிட்ட தொழில்நுட்பங்களில் எந்தளவுக்கு மெனக்கெட வேண்டுமென்று உணர்த்திய படம் இது.
தர்மதுரை:
நாயகனாக, நட்சத்திரமாக உயர்ந்த காலகட்டத்திலேயே ஒரு டீன்-ஏஜ் பெண்ணின் தந்தையாக ரஜினிகாந்த் நடித்த படம் ‘நல்லவனுக்கு நல்லவன்’. கிட்டத்தட்ட அதே பாணியில் அவர் தோன்றிய படமிது.
‘மலையூர் மம்பட்டியான்’, ‘காக்கிச் சட்டை’, ‘விக்ரம்’, ‘கூலிக்காரன்’, ‘பாட்டி சொல்லை தட்டாதே’ தந்த ராஜசேகர் இயக்கிய படமிது.
ரஜினியோடு இணைந்து ‘தம்பிக்கு எந்த ஊரு’, ‘படிக்காதவன்’, ‘கங்வா’, ‘மாவீரன்’, ‘மாப்பிள்ளை’ படங்களை அவர் தந்திருக்கிறார்.
‘தர்மதுரை’ படத்தின் நூறாவது நாள் அன்று ராஜசேகர் மறைந்தார். நிச்சயம் ரஜினியின் திரை வாழ்வில் அது ஒரு பேரிழப்பு என்பதை உணர வைப்பதாக இப்படம் தரும் திரையனுபவம் இருக்கும்.
காமச்சுவை இழையோடு விதத்தில் ரஜினி ஆரம்பகாலத்தில் சில படங்களில் தோன்றியிருக்கிறார். இதில் இடம்பெற்ற ‘மாசி மாசம் ஆளான பொண்ணு’ அந்த வகையறாவில் அமைந்திருக்கும்.
தளபதி:
மணிரத்னம், ராம்கோபால்வர்மா என்று தொண்ணூறுகளில் தலையெடுத்த இளம் ரத்தங்களோடும் ரஜினியால் இணைந்து பணியாற்ற முடியும் என்ற எண்ணத்தை அவரது ரசிகர்களுக்குத் தந்த படம் ‘தளபதி’.
‘சின்னத் தாயவள்’ பாடலில் ரஜினி வெளிப்படுத்திய நுணுக்கமான பாவனைகள் அவரது நடிப்புத் திறமைக்கான ஒரு சோறு பதம்.
மன்னன்:
நகைச்சுவை நடிப்பில் ரஜினி எத்தனை வல்லமை படைத்தவர் என்பதைக் காட்டுகிற வகையில் இப்படத்தை ஆக்கியிருந்தார் இயக்குநர் பி.வாசு.
கவுண்டமணி உடன் இணைந்து ரஜினி வருகிற காட்சிகள் ‘எவர்க்ரீன் கிளாசிக் காமெடி’ வரிசையில் சேரும்.
ரொமான்ஸ், காமெடி, ஆக்ஷன், சென்டிமெண்ட் என்று ‘கமர்ஷியல் சினிமா’வுக்குரிய பல அம்சங்கள் கனகச்சிதமாக ஒன்றிணைந்த ரஜினி படமாக இது அமைந்தது. அனைத்துக்கும் மேலாக ‘ராஜாதி ராஜா’ பாடலை யாரால் மறக்க இயலும்?
அண்ணாமலை:
ரஜினி திரையில் தோன்றினால், அந்த இடத்தில் ஒரு பாடல் கண்டிப்பாக வேண்டும் என்று இயக்குநர்களையும் ரசிகர்களையும் சொல்ல வைத்த படம் இது. ‘வந்தேண்டா பால்காரன்’ அப்படியொரு ‘இண்ட்ரோ’வை ரஜினிக்குத் தந்தது.
சுரேஷ் கிருஷ்ணாவின் இயக்கத்தில் வீரா, பாட்ஷா, பாபாவில் நடித்தபோதும், ‘தி பெர்பெக்ட்’ ரஜினி படமாகத் தெரிவது இதுவே.
ரஜினி, ஜனகராஜின் காமெடி கூட்டணியைக் காட்டுகிற படங்களில் இதுவும் ஒன்று.
அனைத்துக்கும் மேலாக, என்னதான் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த படமானாலும் அதில் குஷ்பு, மனோரமா, ராதாரவி, நிழல்கள் ரவி என்று பல கலைஞர்களுக்கு முக்கியத்துவம் இருக்கும் என்றுணர்த்துகிற படைப்புகளில் ஒன்று இது.
படையப்பா:
சந்திரமுகி, எந்திரன், கபாலி, பேட்ட, ஜெயிலர் என்று எத்தனை படங்களில் நடித்தாலும், இனி ரஜினியே நினைத்தாலும் இப்படியொரு வெற்றியைத் தர முடியாது என்கிற அளவுக்கு ‘பெஞ்ச்மார்க்’ ஆக அமைந்த படமிது.
‘இந்தக் கதையில் இவர் தவிர வேறு எந்த நாயகன் நடித்தாலும் தேறாது’ என்று சொல்லத்தக்க படங்களில் நடித்து, அதனை வெற்றி பெறச் செய்வதே ஒரு நட்சத்திர நாயகனின் உண்மையான வணிக பிம்பத்தைக் காட்டும்.
அந்த வகையில், இப்படத்தில் ரஜினியின் இடத்தை வேறு எவராலும் நிரப்ப இயலாது.
‘பாட்ஷா’வில் அடி பம்பை ரஜினி பிடுங்குகிற சண்டைக்காட்சி, கமர்ஷியல் பட ரசிகர்களுக்கு ‘கூஸ்பம்ஸ்’ தரும். அவரைப் போன்ற ‘மாஸ் ஹீரோ’வை அப்படி காட்டுவது, ‘எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்க மாட்டேங்குது’ என்று ரசிகர்களைச் சொல்ல வைக்கும்.
அப்படி இப்படத்தில் ‘ஊஞ்சல்’ காட்சி இடம்பெற்றிருக்கும். அது போக ‘போடா ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான்’ என்பது போன்ற ‘எவர்க்ரீன்’ வசனங்களைக் கொண்ட படமிது.
மேற்சொன்ன படங்களைத் தாண்டி, 2000க்கு பிறகு ரஜினி நடித்த படங்கள் வெற்றிகள் இல்லையா என்ற கேள்வி எழலாம். நிச்சயம் அவற்றில் சில மிகப்பெரிய ‘ப்ளாக்பஸ்டர்கள்’ தான்.
‘நான் யானை இல்ல குதிரை’ என்று ‘பாபா’ தோல்விக்குப் பிறகு ‘சந்திரமுகி’ ஆடியோ வெளியீட்டில் ரஜினி பேசியது, அவர் தனது திரைப்பிம்பம் மீது, நடிப்புத்திறமை மீது, படத்தின் உள்ளடக்கத்தின் மீது கொண்டிருக்கிற நம்பிக்கையைக் காட்டும்.
அந்த தீர்க்கமான பார்வையே ரஜினியைத் தோல்விகளில் வீழாமல் மீண்டெழச் செய்திருக்கிறது.
அந்த வகையில் சிவாஜி, கபாலி, பேட்ட ஆகியன குறிப்பிடத்தக்க படங்கள் தான். ரஜினியே சொல்லி அடித்த ‘ஜெயிலர்’ கூட அந்த வரிசையில் சேரும் தான்.
ஆனால், ’ரஜினியிச’த்தில் ஊறிப் போயிருக்கிற ரசிகர்கள், அவரது திரையிருப்பின் மீது வேட்கை கொண்டவர்கள் எதிர்பார்ப்பது இன்னொரு ’படையப்பா’வைத்தான்.
‘அதைத்தானே நானும் எதிர்பார்த்துட்டு இருக்கேன்’ என்று ரஜினி கூடத் தன் மனதில் நினைக்கலாம்.
வெறுமனே ‘ட்ரெண்ட்’டை காரணம் காட்டாமல் அப்படியொரு படத்தைத் தரத் தமிழ் திரையுலகம் தயாராக இருக்கிறதா?
– உதயசங்கரன் பாடகலிங்கம்