திரைத் தெறிப்புகள் – 104
****
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆதரித்துப் போற்றிய காமராஜரைக் குறிக்கும் விதத்தில் 1974-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘சிவகாமியின் செல்வன்’.
பிரபல இந்திப் படத்தைத் தழுவி எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் சிவாஜியுடன் இணைந்து நடித்திருப்பார் வாணிஸ்ரீ.
இப்படத்தில் வாணிஸ்ரீ பயணம் செய்யும்போது அவருக்கு ஆறுதல் அளிக்கும் குரலாக பின்னணியில் ஒலிக்கும் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனின் குரல்.
எத்தனையோ பாடல்களை ஆட்டுவித்துப் பின்னணி பாட வைத்தவரான எம்.எஸ்.வி தானே குரல் கொடுத்து பாடிய வெகு சில பாடல்களில் இதுவும் ஒன்று.
பெண்களை, அதிலும் அடுத்தடுத்து கஷ்டங்களை சுமக்கும் பெண்களை மிக எளிய வரிகளில் எப்படி எல்லாம் எழுதி இருக்கிறார் கவிஞர் வாலி.
தானே இசையமைத்துப் பாடிய பாடல்களில் எம்.எஸ்.வி தனித்து நிற்பது இந்தப் பாடலில் தெரியும். இப்பாடலை ஒரு முறை கேட்க நேரிட்டால் நீங்களும் அந்த அனுபவத்தைப் பெறலாம்.
நடிகர் திலகம் சிவாஜி நடித்த ‘பாபு’ திரைப்படத்தில் “இதோ எந்தன் தெய்வம் முன்னாலே” என்ற பாடலில் அவர் எழுதிய வரிகளைப் போலவே இப்பாடலிலும் எழுதியிருப்பார் கவிஞர் வாலி. கீழே உள்ள வரிகளே அதற்கு உதாரணம்.
மகளே உன் மனக் குறையை
நிழல் கொடுக்க தந்தை என்ற
கனி சுமந்த பூங்கொடியோ
நடிகர் திலகம் சிவாஜி காங்கிரஸ் கட்சியில் இருப்பதை உணர்த்தும்படி சில பாடல்கள் வெளிவந்திருந்தாலும் இப்பாடலில் எப்படி அந்த உணர்வு வெளிப்பட்டிருக்கிறது நீங்களே கேளுங்கள்.
ஆண்களுக்கு நம்பிக்கையூட்டும் விதத்தில் நிறைய பாடல்கள் வெளிவந்திருக்கின்றன. பெண்களுக்கு நம்பிக்கையூட்டும் விதத்தில் வெளிவந்த சில பாடல்களில் இதுவும் ஒன்று. அப்போதும் சரி இப்போதும் சரி நம்பிக்கைக்கு எந்த பால் பேதமும் வேண்டியதில்லை.
***
– மணா