“எங்கிருந்தாலும் வாழ்க…!”

திரைத் தெறிப்புகள் : 103

***

“உண்மையான அன்பு எந்த பேதங்களையும் பொருட்படுத்தாது” என்கின்ற பிரபலமான ஆங்கிலச் சொற்றொடரின் உட்பொருளுக்கேற்ப அமைந்திருக்கிறது இந்த அழகான திரையிசைப் பாடல்.

1962-ம் ஆண்டு, ஸ்ரீதரின் இயக்கத்தில் வெளியான ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற எங்கிருந்தாலும் வாழ்க என்று துவங்கும் இந்த மென்மையானப் பாடலை பாடியவர் ஏ.எல்.ராகவன்.

திரைப்படத்தில், தான் காதலித்த தேவிகா அவருடைய கணவருடன் நோய்வாய்ப்பட்ட நிலையில், மருத்துவரான தன்னிடம் வந்திருக்கும் சூழலில், கல்யாண் குமார் பாடுவதாக அமைந்திருக்கும் இந்தப் பாடலை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன்.

“எங்கிருந்தாலும் வாழ்க
உன் இதயம் அமைதியில் வாழ்க
மஞ்சள் வளத்துடன் வாழ்க

உன் மங்கலக் குங்குமம் வாழ்க…”

 

கருப்பு வெள்ளையான இந்தத் திரைப்படத்தில் இப்பாடல் காட்சி பெரும்பாலும் இருள் சூழ்ந்த நிலையில், வெளிச்சக் கோடுகளைப் போல விழுந்த நிலையில் எடுக்கப்பட்டிருக்கும் விதம் பாடலின் மென்மைக்கு பொருத்தமாக இருக்கும்.

இந்தப் பாடலுக்கு சோகம் இளையோடியபடி இசை அமைத்திருப்பார்கள் இசை இரட்டையர்களான விஸ்வநாதன் – ராமமூர்த்தி.

“இங்கே ஒருவன் காத்திருந்தாலும்
இளமை அழகைப் பார்த்திருந்தாலும்,
சென்ற நாளை நினைத்திருந்தாலும்
திருமகளே நீ வாழ்க…”
 

படத்தின் திரைக்கதைக்கேற்ப எவ்வளவு அருமையான வரிகளை கண்ணதாசன் எழுதியிருக்கிறார் பாருங்கள்.

“தனிமையில் நின்றேன்
வந்தது வந்தாய்
துணையுடன் வந்தாய்,
துணைவரைக் காக்கும்
கடமையும் தந்தாய்
தூயவளே நீ வாழ்க…”

 

இந்தப் பாடல் காட்சியின்போது தானும் தேவிகாவும் காதலித்தபோது எடுத்த புகைப்படத்தைக் கையில் வைத்தபடி இந்தப் பாடலை பாடுவார் கல்யாண் குமார். தமிழ்த் திரையுலகுக்கு இவரை சரியான விதத்தில் அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் ஸ்ரீதர் தான்.

“ஏற்றிய தீபம் நிலை பெற வேண்டும்
இருண்ட வீட்டில் ஒளி தர வேண்டும்
போற்றும் கணவன் உயிர் பெற வேண்டும்
பொன்மகளே நீ வாழ்க…”
 

தனது கட்சியை விட்டு முக்கிய பிரமுகர் ஒருவர் விலகியபோது, அவரை வாழ்த்தும் விதமாக பேரறிஞர் அண்ணா “எங்கிருந்தாலும் வாழ்க” என்று வாழ்த்தினாராம். அண்ணா அப்போது பயன்படுத்திய வார்த்தையை வைத்தே தனது பாடலில் முதல்வரியாக கச்சிதமாகவும் கவித்துவமாகவும் பயன்படுத்தி இருப்பார் கவியரசர் கண்ணதாசன்.

திரையில்தான் என்றாலும் இப்படியும் மிகவும் மென்மையான காதல் இக்காலத்தில் இருக்கிறது!

– மணா

Comments (0)
Add Comment