சில படங்களின் ட்ரெய்லர் பார்க்கிறபோதே ‘இது ஆகாதுடா சாமி’ என்று தோன்றும்.
‘கொஞ்சம் சகித்துக்கொண்டால் நல்ல கண்டெண்ட் கிடைக்கக்கூடும்’ என்று எண்ண வைக்கும் சில படங்கள். ‘ட்ரை பண்ணிப் பார்க்கலாமே’ என்ற வகையில் சில இருக்கும்.
உண்மையில், மேற்சொன்னவற்றில் பெரும்பாலான படங்கள் ‘தியேட்டரை விட்டு எப்போ கிளம்பலாம்’ என்ற வகையிலேயே அமைந்திருக்கும். விதிவிலக்குகள் ரொம்பவே அரிது.
அப்படியொரு அரிய படமாக இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையை விதைத்தது ’இஎம்ஐ (மாதத்தவணை)’ பட ட்ரெய்லர். காரணம், அதன் டைட்டில் தான்.
இஎம்ஐயில் பொருட்களை வாங்கிவிட்டு, அதற்கு மாதத்தவணை கட்ட முடியாமல் தவிக்கிற நாயகனைக் காட்டியது. மற்றபடி, ‘ரொம்பவே சிறிய படம்’ என்ற எண்ணத்தையே தந்தது ட்ரெய்லர்.
சரி, எப்படிப்பட்ட திரையனுபவத்தைத் தருகிறது இப்படம்?
மாம்பழச் சாறு தயாரிக்கும் நிறுவனமொன்றில் பணியாற்றுகிறார் நாயகன். அங்கு ‘உதவி வேதியியல் நிபுணர்’ ஆக இணைகிறார் நாயகி.
நாயகியை ஏற்கனவே சந்தித்திருக்கிறார் நாயகன்.
மால் ஒன்றில் பொம்மை போல வேடமிட்டிருக்கும் நாயகனுக்கு முத்தம் கொடுக்க வருகிறார் நாயகி.
அப்போது முகமூடியைக் கழற்றிவிடுகிறார் நாயகன். அந்த நினைவு மீண்டும் நாயகியின் மனதில் சுழன்றெழுகிறது. அதனால், அவர் மீது கோபப்படுகிறார்.
ஆனால், நாயகனோ அவரைத் துரத்தி துரத்தி காதலிக்கிறார். மொபைல் எண் அறிந்து போன் செய்கிறார். ‘இப்படி வர வேண்டும் அப்படி வர வேண்டும்’ என்று நாயகியிடம் அவரது தோற்றம் குறித்த தனது ஆசைகளைச் சொல்கிறார்.
ஆனால், ‘நீ சொல்றதை நான் ஏன் பண்ணனும்’ என்று நாயகி கேட்பதில்லை. மாறாக, அவரைக் கடந்து சென்றுவிடுகிறார்.
அதன்பிறகுதான் அவரும் நாயகனைக் காதலிப்பது தெரிகிறது. அப்புறமென்ன? இருவரும் இரு வீட்டு குடும்பத்தினர் சம்மதத்தோடு திருமணத்தில் இணைகின்றனர்.
சரி, இந்தக் கதையில் ‘இஎம்ஐ’க்கு என்ன வேலை? அதற்கான பதிலாக, இதில் சில காட்சிகள் இருக்கின்றன.
நாயகியை ‘இம்ப்ரெஸ்’ செய்வதற்காக நாயகன் ஒரு ஷோரூமுக்கு சென்று புல்லட் வாங்குகிறார். அதனை வைத்துக்கொண்டு நாயகியிடம் ‘பிலிம்’ காட்டுகிறார். காதல் கனிந்ததும், இருவரும் அதில் ஊர் சுற்றுகின்றனர்.
இதனை அறியும் நாயகியின் தந்தை, ‘அவன் வேண்டாம்மா, இஎம்ஐயில பொருளை வாங்குறவனா இருக்கான்’ என்கிறார் (அவரிடமும் ‘ஏம்பா இஎம்ஐயில பொருள் வாங்குனா தப்பா’ என்று நாயகி கேட்பதில்லை).
போலவே, திருமணம் முடிந்த கையோடு மனைவியான காதலிக்கு ‘கார்’ பரிசளிக்கிறார். அதுவும் இஎம்ஐயில் வாங்கியதுதான்.
ஒரு விலையுயர்ந்த பைக் வாங்கினால் போதுமானதாக இருக்கும்போது, ‘நாலு லட்ச ரூபா கொடுத்து புல்லட் வாங்கணுமா’ என்று நாயகி நாயகனிடம் கேட்பதில்லை.
‘அது பரவாயில்லை’ என்பது போல இந்த கார் சமாசாரம் திரையில் வந்து போகிறது. இது போக ஒரு மொபைல் போனும் இஎம்ஐயில் வாங்குகிறார் நாயகன்.
பிறகு, அந்த இஎம்ஐயை கட்ட முடியாமல் அவர் எவ்வாறு அவஸ்தைப்படுகிறார்? என்ன கதிக்கு ஆளாகிறார் என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.
தலை போகிற அளவுக்குத் தேவைகளுடன் வாழ்கிற மனிதனே இஎம்ஐயில் பொருட்களை வாங்கியபிறகு, பணத்தைத் திருப்பிச் செலுத்த முடியாமல் அல்லாடுகிறான்.
அது பற்றி இப்படம் பேசும் என நினைத்தால், இப்படியொருவனது (நாயக பாத்திரம்) வாழ்வைச் சொல்லியிருக்கிறாரே’ என்று யோசிப்பதற்குள் படம் முடிந்து விடுகிறது.
அதனால், படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது ‘இஎம்ஐயால எப்படிப்பட்ட பிரச்சனைகளை நாயகன் சந்திச்சார்னு சொல்ல இன்னொரு பார்ட் எடுப்பாங்களா’ என்ற கேள்வி எழுகிறது.
திருப்தி தருகிறதா?
‘இஎம்ஐ’ (EMI) என்ற சொல்லுக்கு ‘Equated Monthly Instalment’ என்பதே ஆங்கில விரிவாக்கம். தமிழில் ‘மாதத் தவணை’ என்று கூறலாம்.
ஒருகாலத்தில் சைக்கிள், ரேடியோ, டிவி போன்றவற்றை முந்தைய தலைமுறையினர் மாதத்தவணை முறையில் வாங்கியிருக்கின்றனர்.
மொத்தமாகப் பணம் சேர்த்து வாங்க முடியாத நிலையில் இருந்தவர்களுக்கு அது நல்லதொரு தீர்வாக இருந்திருக்கிறது. என்ன, வட்டியாகச் சிறிது பணம் சேர்த்துக் கட்ட வேண்டியிருந்தது.
இப்போது நாம் தேவைக்கு அதிகமான, ஆடம்பரமான, உரிய தேவைகள் அற்ற பொருட்களை அம்முறையில் வாங்குகிறோம்.
அதற்கான வட்டித் தொகையும் அதிகமாக உள்ளது. அதற்கேற்ற தொழில் பாதுகாப்பு பலருக்கு அமைவதில்லை. அதனால், வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தடுமாறுகிறோம். அந்த வித்தியாசத்தை இப்படம் பேசவே இல்லை.
இப்படத்தின் கதையே யதார்த்தத்தில் இருந்து விலகி நிற்கிறது. உண்மையைச் சொன்னால், அதற்கு எதிர் திசையில் இருக்கிறது.
இயக்குநர் சதாசிவம் சின்னராஜ் சறுக்கியிருக்கும் இடம் அதுவே.
இடைவேளை வரை நாயகன் நாயகியின் காதலை மட்டுமே காட்டியிருக்கிறார் இயக்குநர். அதன்பிறகாவது அவர்களது குடும்ப வாழ்வில் மாதத்தவணை எனும் சொல் ஏற்படுத்துகிற பிரச்சனைகளைப் பேசுவார் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றத்தையே தந்திருக்கிறார்.
இதில் நாயகியாக சாய் தன்யா, நாயகனின் தாயாக செந்தி குமாரி, நாயகியின் தந்தையாக பேரரசு, நண்பனாக பிளாக் பாண்டி, பைக் நிதி கடன் வசூலிப்பவராக ஆதவன், ஆலை மேலாளராக லொள்ளு சபா மனோகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இவர்கள் ஓரளவு நடித்திருப்பதே சில காட்சிகளைக் காப்பாற்றியிருக்கிறது.
குறிப்பாக, சாய் தன்யாவும் பிளாக் பாண்டியும் சில இடங்களில் தோள் கொடுத்திருக்கின்றனர். ஓஏகே சுந்தர் வரும் காட்சி ’ஓகே’ ரகம்.
தொழில்நுட்ப அம்சங்களைப் பொறுத்தவரை இசையமைப்பாளர் ஸ்ரீநாத் பிச்சை ஆங்காங்கே நம்மை ’இம்ப்ரெஸ்’ செய்கிறார். ஆனாலும், அவரது பின்னணி இசை பழைய படம் பார்க்கும் உணர்வைத் தருகிறது.
அதே நேரத்தில், ‘இஎம்ஐ’ பாடலில் நம்மை ஈர்க்கிறார்.
மற்றபடி இப்படத்தின் இதர தொழில்நுட்ப
சமகாலத்தில் சாதாரண மனிதர்கள் சந்திக்கிற மிக முக்கியமான பிரச்சனையொன்றை வெகு அலட்சியமாகக் கையாண்டிருக்கிறது இப்படம். ‘எதற்காக, யாருக்காக இப்படியொரு படம்’ என்பது படக்குழுவினருக்கே வெளிச்சம்.
-உதயசங்கரன் பாடகலிங்கம்