‘டிராகன்‘ படம் பார்த்து கண் கலங்கிய ஷங்கர்!

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோகர், மிஷ்கின், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் – ‘டிராகன்’. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள படத்துக்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.

இந்தப் படம், கடந்த 21ஆம் தேதி வெளியானது. டிராகனைத் தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனமே, உலகம் முழுவதும் படத்தை வெளியிட்டது. அனைத்துத் தரப்பினரிடமும் வரவேற்பைப் பெற்றுள்ள ‘டிராகன்’ வசூலிலும் சாதனைப் படைத்து வருகிறது.

இயக்குநர்கள் ஷங்கர், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் ‘டிராகன்’ படத்தைப் பார்த்துவிட்டு, தங்கள் கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர்.

படக்குழுவைப் பாராட்டி, ஷங்கர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

“‘டிராகன்’ மிக அழகான திரைப்படம் – இந்தப் படத்தை அற்புதமாக எழுதிய இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துக்கு வாழ்த்துகள் – படத்தில் அத்தனை கதாபாத்திரங்களுக்கும் அழகான மற்றும் முழுமையான பயணம் இருக்கிறது – தான் ஒரு அதிரடியான எண்டர்டெயினர் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் பிரதீப் ரங்கநாதன்.

படத்தின் கடைசி 20 நிமிடங்கள் என்னைக் கண்கலங்கச் செய்தது – இந்த உலகத்தில் ஏமாற்று வேலைகள் அதிகரித்துக் கொண்டிருக்கும் வேளையில் இப்படம் சொல்லும் மெசேஜ் மிகவும் முக்கியமானது”  எனப் பதிவிட்டிருக்கிறார் பிரமாண்ட இயக்குநர்.

இதனிடையே ‘டிராகன்’ திரைப்படம் வெளியான முதல் 3 நாட்களில், இதன் வசூல் ரூ.50 கோடியைக் கடந்துவிட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்ட பதிவில், “டிராகன் படம் முதல் மூன்று நாட்களில் உலக அளவில் ரூ.50.22 கோடியை எட்டியுள்ளது. வார இறுதியில், தமிழகத்தில் மட்டும் ரூ.24.5 கோடி வசூலித்துள்ளது.

ஆந்திரா, தெலுங்கானாவில் ரூ.6.25 கோடியும், கேரளா, கர்நாடகா, வட இந்தியாவில் ரூ.4.37 கோடியும், வெளிநாடுகளில் ரூ.14.7 கோடியும் டிராகன் வசூலித்துள்ளது” என தெரிவித்துள்ளார்.

டிராகனின் வசூல் வேட்டைத் தொடர்கிறது.

– பாப்பாங்குளம் பாரதி.

Comments (0)
Add Comment