தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் பெரிய இயக்குனராக உருவெடுத்தவர், லோகேஷ் கனகராஜ். இந்த நொடியில் தமிழ் சினிமாவின் ‘மோஸ்ட் வான்டட் டைரக்டர்’ இவர்தான்.
அண்மையில் வெளியாகி 500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்த ‘லியோ’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளார்.
‘ஜெயிலர்’ படத்தை அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு தற்காலிகமாக ‘தலைவர் 171’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.
‘தலைவர்- 171’ கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் நிறைந்த திரைப்படமாக இருக்கும்’ என இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் தெரிவித்து இருந்தார்.
இதனைத் தொடர்ந்து, இந்த படம் எந்த மாதிரியான கதைக்களத்தில் இருக்கும் என சமூக வலைத்தளங்களில் ஆளாளுக்கு பதிவிட்டு வரும் நிலையில், ‘தலைவர் -171’ படத்தின் கதை இன்னும் ரெடியாகவில்லை’ என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
காளிதாஸ் ஜெயராம் நடித்துள்ள ‘அவள் பெயர் ரஜினி’ என்ற திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற லோகேஷ் கனகராஜ், படத்தின் டிரைலரை வெளியிட்டார்.
அப்போது லோகேஷ் கனகராஜிடம், ‘தலைவர் 171’ படத்தின் அப்டேட் குறித்து நிகழ்ச்சி தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ், “தலைவர் 171 படத்திற்கான கதையை இனிமேல்தான் எழுதப் போகிறேன் படப்பிடிப்பு அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் தொடங்கும்” என குறிப்பிட்டார்.
ரஜினிகாந்த் தற்போது த.செ. ஞானவேல் இயக்கத்தில் ‘தலைவர் 170’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.
– பாப்பாங்குளம் பாரதி.