திரைத் தெறிப்புகள்! – 105:
***
உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவர்களின் மனம் எப்படி எல்லாம் வலியோடு யோசிக்கும்?
வீடு என்கின்ற அமைப்பினால் ஒதுக்கப்பட்டவர்கள் தங்களுக்கு என்று தனி வாழ்வை அமைத்துக்கொள்ள முடியும்.
தாங்கள் வாழும் தெருவையே சொந்த வீடாக்கிக் கொள்ள முடியும் என்பதை உட்பொருளாக அமைத்து கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல் இது.
1974-ம் ஆண்டு கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த ‘அவள் ஒரு தொடர்கதை’ திரைப்படத்தில் இடம்பெற்று இருக்கிறது இந்தப் பாடல்.
பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் இனிதே குரல் கொடுத்திருக்கிற இந்தப் பாடல்களில் தான் எத்தனை அர்த்தங்கள்?
“தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு
இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருளென்ன நீ வந்த கதை என்ன?…”
படத்தின் கதாநாயகியான சுஜாதா, தன் அண்ணனான ஜெய்கணேஷ் மதுவைக் குடித்துவிட்டு வீட்டுக்குள் நுழைய வரும்போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கதவடைத்து விடுவார்.
வெறுக்கப்பட்ட ஜெய்கணேஷ், தெருவில் நின்றபடி ஹம்மிங்கோடு இந்தப் பாடலைத் துவங்கும் விதமே வித்தியாசமாக இருக்கும்.
கவியரசரின் வரிகளைத் தனது வளமான குரலால் மேலும் அர்த்தமுள்ளதாக்கியிருப்பார் ஜேசுதாஸ்.
“நான் கேட்டு தாய் தந்தை படைத்தானா
இல்லை என் பிள்ளை எனைக் கேட்டு பிறந்தானா
தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி
கொன்றால் பாவம் தின்றால் போச்சு இதுதான் என் கட்சி
ஆதி வீடு அந்தம் காடு
இதில் நான் என்ன? அடியே நீ என்ன ஞானப் பெண்ணே”
வாழ்வின் வெறுமையை எவ்வளவு எளிமையாகவும், சிக்கனமாகவும் கவியரசர் சொல்லி இருக்கும் இப்பாடலில் போகிற போக்கில் வரும் முக்கியமான வரி “காற்றுக்கேது தோட்டக்காரர்”.
வெறும் கோவில் இதில் என்ன அபிஷேகம்
உன் மனம் எங்கும் தெருக்கூத்து பகல் வேஷம்
கள்ளிக்கென்ன முள்ளில் வேலி போடி தங்கச்சி
காற்றுக்கேது தோட்டக்காரன் இதுதான் என் கட்சி
கொண்டதென்ன கொடுப்பதென்ன
இதில் தாய் என்ன? மணந்த தாரம் என்ன ஞானப் பெண்ணே”
வாழ்வின் சலிப்பேறிய கணங்களில்தான் வாழ்வதற்கான அர்த்தம் என்ன என்பதைப் பலரும் தேடுகிறார்கள். இந்தப் பாடலிலும் அப்படிப்பட்ட தேடல் தொடர்ந்திருக்கிறது.
“தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்
அது தெரியாமல் போனாலே வேதாந்தம்
மண்ணைத் தோண்டி தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி
என்னை தோண்டி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி
உண்மை என்ன, பொய்மை என்ன
இதில் தேன் என்ன? கடிக்கும் தேள் என்ன ஞானப் பெண்ணே…”
பாடலில் பல சிறப்பான வரிகள் இருந்தாலும் “என்னைத் தோண்டி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி” என்று நிறைவாக ஜேசுதாஸின் குரல் நுழையும்போது வாழ்வில் அர்த்தத்தைக் கொடுக்கிற மாதிரி ஒரு உணர்வு மிஞ்சியிருக்கும். அதுவே இப்பாடலின் சிறப்பு.
– மணா